பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-05-26
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-20
நெல் கொள்வனவு செயன்முறை மற்றும் நாட்டின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், விவசாய உற்பத்திக்கும் சந்தைத் தேவைக்கும் இடையிலான சமநிலையின்மையைக் குறைப்பதற்காகத் துல்லியமான தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.பயிரிடப்படும் பயிர் வகைகள், பயிரிடப்படும் அளவுகள் மற்றும் சந்தைத் தேவைகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலதிக உற்பத்தி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்க முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டது.அரிசி உற்பத்தியைப் பொறுத்தவரையில் சம்பா, கீரி சம்பா, நாடு மற்றும் சிவப்பு அரிசி போன்ற அரிசி வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள் தொடர்பிலும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைத் திட்டமிடுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதேவேளை, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கோரிக்கைக்கு அமைய, 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுtதவிசாளரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவும் பரிசீலிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, கிட்ணன் செல்வராஜ் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோரும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks