logo

E   |   සි   |  

2026-05-12

செய்தி வகைகள் : செய்திகள் 

சீன தேசிய மக்கள் காங்கிரசின் தூதுக்குழுவினர் இலங்கையின் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தனர்

  • இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருடனும்  குழுவினர் சந்திப்பு
  • அமைச்சரவை ஆலோசனைக் குழு மற்றும் நீதி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியன இணைந்த குழுக் கூட்டத்திலும் சீனத் தூதுக்குழுவினர் பங்கேற்பு


சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக் குழுவின் உறுப்பினரும், சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான குழுவின் தலைவருமான கௌரவ (பேராசிரியர்) சின் ஜன்யங் தலைமையிலான தூதுக்குழுவினர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (மே 07) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

இந்தத் தூதுக் குழுவில் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் உறுப்பினரும், தேசிய மக்கள் காங்கிரசின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான குழுவின் உப தலைவருமான கௌரவ கொங் பின், அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான குழுவின் உறுப்பினர் கௌரவ காவோ சிசெங் மற்றும் அதிகாரிகள் பலரும் உள்ளடங்கியிருந்தனர்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். 

தூதுக் குழுவினரை வரவேற்ற கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 2000 வருடங்களுக்கு மேலாகக் காணப்படும் நீண்டகால, நெருக்கமான இருதரப்பு உறவுகளை வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வமான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 2027ஆம் ஆண்டில் 70வது வருடம் பூர்த்தியடையவிருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

நம்பிக்கையான நீண்டகால நட்பு நாடு என்ற ரீதியில் பல தசாப்தங்களாக சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கும் கௌரவ சபாநாயகர் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார். தித்வா சூறாவளி தாக்கத்தின் பின்னரான சூழ்நிலை, அண்மைய பொருளாதார நெருக்கடி போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும், சர்வதேச மற்றும் பல்தரப்பு தளங்களிலும் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களையும் அவர் நன்றியுடன் நினைவுபடுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ (பேராசிரியர்) சின் ஜன்யங் அவர்கள், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் வலுவான, நீடித்த உறவுகளை வலியுறுத்தியதோடு, இலங்கையின் தொடர்ச்சியான அபிவிருத்தி முயற்சிகளையும் பாராட்டினார். இரு நாடுகளின் சட்டமன்றங்களுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் சீனாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து சீனத் தூதுக்குழுவினர் சபை முதல்வரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சரும், இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான பிமல் ரத்னாயக்க அவர்களையும் சந்தித்தனர்.  சவால்மிக்க தருணங்களில் சீனா வழங்கிய உதவிகளுக்கு கௌரவ அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல், கொள்கை வகுப்பின் போதான ஒத்துழைப்பு  மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிறுவன ரீதியான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் கௌரவ உறுப்பினர்களான தனுர திசாநாயக்க மற்றும் (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அதேநேரம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் சீனத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் சட்டம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ (வைத்தியர்) நஜித் இந்திக உட்பட குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் நீதித்துறை மற்றும் சட்டத்துறையின் மேம்பாட்டுக்கு சீனா அளித்துவரும் ஆதரவிற்கு இரு குழுக்களின் தலைவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இந்தக் கலந்துரையாடலில் சட்ட மற்றும் நீதித்துறை நடைமுறைகள், ஆளுகை மற்றும் நிறுவன ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கௌரவ சபாநாயகரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதியபோசன விருந்துபசாரத்திலும் சீனத் தூதுக்குழுவினர் பங்கேற்றனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks