logo

E   |   සි   |  

2026-04-23

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனர் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் (Nayyar Naseer), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (ஏப். 21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் சுனைரா லதீஃப் (Zunaira Latif) மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

கலாசார பாரம்பரியம் மற்றும் நட்பு நிறைந்த இலங்கை போன்றதொரு நாட்டில் உயர்ஸ்தானிகராகப் பணியாற்ற முதல் தடவையாகக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சியடைவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவிவரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் பயனுள்ள நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் தாம் உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கை சந்தித்த ஒவ்வொரு நெருக்கடியான காலகட்டத்திலும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் வழங்கி வந்த தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு நன்றியைத் தெரிவித்தார். யுத்த சூழல் முதல் தித்வா சூறாவளித் தாக்கம் வரையில் நாடு எதிர்கொண்ட பல்வேறு சவால்களின்போது, பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை உண்மையான நட்பின் வெளிப்பாடாகும் என்பதையும் சபாநாயகர் நினைவுகூர்ந்தார்.

தற்போதைய சர்வதேச சூழலில் உலக நல்லிணக்கத்தை உருவாக்குவதில், பாகிஸ்தான் ஒரு செயல்திறன் மிக்க மத்தியஸ்தராக ஆற்றிவரும் முக்கிய வகிபாகத்தை கௌரவ சபாநாயகர் இங்கு பாராட்டினார். மேலும், இலங்கை-பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் நிறுவப்பட்டது, இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது அவர் வலியுறுத்தினார்.

மேலும், பண்டைய காந்தாரத்தைச் சேர்ந்த கலைப்படைப்பான பாகிஸ்தானின் லாகூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலையை (Fasting Buddha Statue) இலங்கையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கௌரவ சபாநாயகர் அவர்கள் இங்கு முன்வைத்தார்.  இதன் மூலம் குறித்த சிலையை இலங்கை பக்தர்கள் தரிசிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அழகான இயற்கைச் சூழலையும், விருந்தோம்பல் குணம் கொண்ட மக்களையும் கொண்டுள்ள இலங்கை, சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.  நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் துறையில் தனது அனுபவத்தையும் அறிவையும் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.  இந்தச் சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உதவித்தொகை பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்ளும் திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், சபை முதல்வர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

“தித்வா" சூறாவளித் தாக்கத்தின் பின்னர் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற தமது அனுபவத்தை நினைவு கூர்ந்த அமைச்சர், நாட்டில் முன்மொழியப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடைமுறை நடவடிக்கைகள், அத்துடன் பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான அனுபவப் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks