01

E   |   සි   |  

2026-04-23

செய்தி வகைகள் : செய்திகள் 

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரான்ஸ் செனட் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை சபாநாயகரைச் சந்தித்தனர்

  • இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்துடனும் தூதுக் குழுவினர் கலந்துரையாடல்


பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் கௌவர சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (ஏப். 21) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது.

இந்தத் தூதுக் குழுவில் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் வலினா பௌலி ககன் (Ms. Vanina Paoli-Gagin), குறித்த சங்கத்தின் பிரதித் தலைவர் டிடியர் மெரி (Mr. Didier Marie), செனட்டர் லோரன்ஸ் முலர் ப்ரோன் (Ms. Laurence Muller-Bronn) ஆகியோருடன், பல்வேறு அதிகாரிகளும் உள்ளடங்கியிருந்தனர்.

தூதுக்குழுவினரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், கடந்த எழுபது ஆண்டுகளாக பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் நீடித்துவரும் இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்தார். பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் வகிபாகத்தை அவர் வலியுறுத்தினார். 

தித்வா புயல் தாக்கத்திற்குப் பின்னர் பிரான்ஸ் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட சபாநாயகர், புயலுக்குப் பிந்தைய சூழ்நிலையையும், தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியால் எழும் சவால்களையும் அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாண்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ரீதியான உறவுகளை எடுத்துரைத்த சபாநாயகர், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பிரான்ஸ் முக்கிய சந்தையாகத் தொடர்ந்தும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் முறைப்பாடுகளைக் காண்காணிப்பதற்கான வலுவான திட்டங்கள் மூலம் வசதிவாய்ப்புக்களை அதிகரிக்கும் அதேநேரம், சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பை இலங்கை தொடர்ந்தும் உறுதிசெய்து வருவதாக அவர் தெரிவித்தார். எயார் பிரான்ஸ் நிறுவனத்துடனான தொடர்புகளை மேம்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையில் வான் வழியான இணைப்பை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு அடையாளம் காணப்பட்டது.

GSP+ சலுகை மூலம் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பை பாராட்டிய சபாநாயகர், மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நிலையான வர்த்தக வாய்ப்புகள் மூலம் இலங்கையின் தொழில்துறைகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் வலியுறுத்தினார். 

இரு நாடுகளுக்கும்  அதிகரித்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இலங்கையில் தமக்கு வழங்கிய சிறப்பான உபசாரத்திற்கு பாராட்டைத் தெரிவித்த வலினா பௌலி ககன், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவதில் பிரான்ஸ் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தமது இலங்கை விஜயத்தின் போது நடத்தவுள்ள சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நீர் சுத்திகரிப்புத் திட்டம், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுதல் மற்றும் ஆடைத் தொழில்துறைக்கு ஆதரவளிப்பதில் காணப்படும் ஆர்வம் உள்ளிட்ட விடயங்களையும் இத்தூதுக் குழுவினர் வெளிப்படுத்தினர். பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மைகளைத் தொடர வேண்டும் என்ற தங்கள் நோக்கத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதேநேரம், பிரான்ஸ் தூதுக் குழுவினர் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினர். இந்தச் சந்திப்பிற்கு குறித்த சங்கத்தின் தலைவரும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார கௌரவ அமைச்சருமான சரோஜா போல்ராஜ் மற்றும் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் வலினா பௌலி ககன் ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் பொருளாதார ஈடுபாடு, நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் சமூகக் கொள்கை உள்ளிட்ட பரந்த அளவிலான ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் பற்றி ஆராயப்பட்டது.

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கு பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு கௌரவ அமைச்சர் போல்ராஜ் அவர்கள் நன்றி தெரிவித்தார். பாலின சமத்துவம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகக் கொள்கைகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை அவர் எடுத்துரைத்ததோடு, இத்துறைகளில் இரு நாடுகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம், முதலீடு, கல்வி, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் போன்ற முக்கியத் துறைகளில் பிரான்சுடனான உறவை வலுப்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மேலும் வலியுறுத்தியதோடு, இருதரப்பு மற்றும் உலகளாவிய மட்டங்களில் இந்தப் கூட்டாண்மையின் வலுவான ஆற்றலையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் லால் பிரேமநாத், ஹெக்டர் அப்புஹாமி, தனுர திசாநாயக்க மற்றும் தர்மபிரிய திசாநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கௌரவ சபாநாயகர் மற்றும் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற மதியபோசன விருந்துபசாரத்திலும் பிரான்ஸ் தூதுக் குழுவினர் பங்கேற்றதுடன், பாராளுமன்றத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். 

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கௌரவ ரெமி லம்பெர்ட் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் இந்தச் சந்திப்புக்களில் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-04-23

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனர் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் (Nayyar Naseer), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (ஏப். 21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் சுனைரா லதீஃப் (Zunaira Latif) மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.கலாசார பாரம்பரியம் மற்றும் நட்பு நிறைந்த இலங்கை போன்றதொரு நாட்டில் உயர்ஸ்தானிகராகப் பணியாற்ற முதல் தடவையாகக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சியடைவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவிவரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் பயனுள்ள நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் தாம் உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கை சந்தித்த ஒவ்வொரு நெருக்கடியான காலகட்டத்திலும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் வழங்கி வந்த தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு நன்றியைத் தெரிவித்தார். யுத்த சூழல் முதல் தித்வா சூறாவளித் தாக்கம் வரையில் நாடு எதிர்கொண்ட பல்வேறு சவால்களின்போது, பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை உண்மையான நட்பின் வெளிப்பாடாகும் என்பதையும் சபாநாயகர் நினைவுகூர்ந்தார்.தற்போதைய சர்வதேச சூழலில் உலக நல்லிணக்கத்தை உருவாக்குவதில், பாகிஸ்தான் ஒரு செயல்திறன் மிக்க மத்தியஸ்தராக ஆற்றிவரும் முக்கிய வகிபாகத்தை கௌரவ சபாநாயகர் இங்கு பாராட்டினார். மேலும், இலங்கை-பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் நிறுவப்பட்டது, இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது அவர் வலியுறுத்தினார்.மேலும், பண்டைய காந்தாரத்தைச் சேர்ந்த கலைப்படைப்பான பாகிஸ்தானின் லாகூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலையை (Fasting Buddha Statue) இலங்கையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கௌரவ சபாநாயகர் அவர்கள் இங்கு முன்வைத்தார்.  இதன் மூலம் குறித்த சிலையை இலங்கை பக்தர்கள் தரிசிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.அழகான இயற்கைச் சூழலையும், விருந்தோம்பல் குணம் கொண்ட மக்களையும் கொண்டுள்ள இலங்கை, சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.  நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் துறையில் தனது அனுபவத்தையும் அறிவையும் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.  இந்தச் சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உதவித்தொகை பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்ளும் திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், சபை முதல்வர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.“தித்வா" சூறாவளித் தாக்கத்தின் பின்னர் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற தமது அனுபவத்தை நினைவு கூர்ந்த அமைச்சர், நாட்டில் முன்மொழியப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பில் இரு நாடுகளிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடைமுறை நடவடிக்கைகள், அத்துடன் பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான அனுபவப் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.


2026-04-14

சபாநாயகரின் புதுவருட வாழ்த்துச்செய்தி

இன்று இயற்கையில் வசந்த காலத்தின் உதயத்தையும், பாரம்பரிய சூரிய நாட்காட்டி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறும் நாளையும் குறிக்கிறது. அதன்படி, முதலாவதாக, உள்ளூர் இலங்கை மக்களுக்கும், தங்கள் தாயகத்திலிருந்து உடல்ரீதியாக வெகு தொலைவில் இருந்தாலும், தற்போது தங்கள் தாய்நாட்டுடன் ஆழமாக இணைந்திருக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களுக்கும் வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன். சிங்கள தமிழ் புத்தாண்டு என்பது ஒரு புதிய ஆண்டின் உதயம் மட்டுமல்ல, இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்குக் கடத்தும் வகையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு தேசிய விழாவுமாகும். அதேபோல, ஒரு புதிய ஆண்டின் உதயத்துடன், இலங்கையர் ஒரே தேசமாக ஒன்றிணைந்து, ஒரே நேரத்தில் தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடங்குவதன் மூலம், அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஒற்றுமையுடன், ஒரு தேசமாக நமது ஒற்றுமையை உலகிற்குப் பிரதிபலிக்கிறோம். பழைய மனக்குறைகளையும் வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து, ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தி, புதிய இலக்குகளுடன் ஒரு புதிய ஆண்டைத் தொடங்குவதே புத்தாண்டின் உண்மையான அடையாளங்களாகும்.நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு படிப்படியாக மீண்டு வரும் ஒரு காலகட்டத்தை நாம் தற்போது கடந்து கொண்டிருக்கிறோம். அதே சமயம், கடந்த ஆண்டில், தித்வா போன்ற ஒரு பெரும் இயற்கை பேரழிவையும் ஒரு நாடாக நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், ஒரு இலங்கை தேசமாக நாம் மீண்டும் எழுந்து நிற்க முடிந்த வலிமையானது, மத்திய கிழக்கில் நாம் தற்போது சந்தித்து வரும் இராணுவ சவாலை எதிர்கொள்ளவும் நமக்கு உதவும். எனவே, இப்புத்தாண்டு, ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை போன்ற புத்தாண்டின் உண்மையான அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஆண்டாக அமையும் என நான் நம்புகிறேன்.ஆகவே, நம் வழியில் வரும் அனைத்து தடைகளையும் சவால்களையும் கடந்து, வளமான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு நாட்டை உருவாக்க கைகோர்க்குமாறு உங்களை அழைக்கிறேன். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து, நம் அனைவரின் பொதுவான இலக்குகளை நிறைவேற்றுவதில் நாங்கள் தொடர்ந்து நம்மை அர்ப்பணிப்போம்.சிங்கள-தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னமாண்புமிகு சபாநாயகர்இலங்கைப் பாராளுமன்றம்


2026-04-10

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது

கௌரவ வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் இன்று (ஏப். 10) பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (10) இடம்பெற்றதுடன், விவாதம் முடிவடைந்ததும் பி.ப 6.00 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும், எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


2026-04-10

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் நேற்று (ஏப். 09) சான்றுரைப்படுத்தினார்.சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (அறவீடு) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் 2026.04.07ஆம் திகதி இடம்பெற்றதுடன், இரண்டாவது மதிப்பீடு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் திருத்தப்படுவதுடன், இந்த வரி விதிப்பிற்கான பதிவிற்குத் தேவைப்படும் விற்பனைவரவு வரம்பைக் குறைப்பதும், மோட்டார் வாகனங்கள் தொடர்பான சில விலக்களிப்புக்களை வழங்குவதும் இதன் சட்டப்பயனாகும்.இந்தச் சட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு உதவுதொகைக்கான பதவின் மொத்த விற்பனை வரம்பு ஆண்டொன்றுக்கு அறுபது மில்லியன் ரூபாவிலிருந்து முப்பது மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்படுகின்றது. திருத்தப்பட்ட வரம்பிற்கு இணங்க, புதிய பதிவுத் தேவைகளும் பதிவை இரத்து செய்வது தொடர்பான விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மோட்டார் வாகனங்கள் தொடர்பான விலக்களிப்புக்கள் பற்றிய ஏற்பாடுகளும் திருத்தப்பட்டுள்ளன.இதற்கமைய, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks