பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-02-20
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
(203 அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2463/04ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சாரதி உரிமை அறவீடு தொடர்பான ஒழுங்குவிதியை திருத்துவதற்கும், 2467/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடி காலத்தை தற்காலிகமாக நீடித்தல் தொடர்பான ஒழுங்குவிதி என்பவற்றுக்கு குழு அனுமதி வழங்கியது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் 2026.02.17ஆம் திகதி கூடியபோதே இந்த ஒழுங்குவிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான (வைத்தியர்) பிரசன்ன குணசேன மற்றும் எரங்க குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
போக்குவரத்துத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட இரு உபகுழுக்களின் அறிக்கைகள் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.
முறைசாரா போக்குவரத்துத் துறை சார்ந்த பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எச்.எம்.தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்கள், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைத்தார். தனியார் பேருந்துச் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மின்னணு செயலிப் பயன்பாட்டின் வாயிலாக போக்குவரத்துத் துறையில் ஈடுபடுபவர்கள் (App Base Workers), ஆகியோருக்கான ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்தல் போன்ற விடயங்கள் குறித்த பரிந்துரைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய இதர சேவைகளை உருவாக்குவதற்கான வணிக மாதிரிகளை (Business Models) உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைத்தார்.
உப குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆராய்ந்து அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்படும் என அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், போக்குவரத்துத் துறை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய குறைபாடுகள் குறித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-08-07
கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்த அரசாங்க நிதி பற்றிய குழு, கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளத்தை அங்கீகரித்தது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில், பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன் மற்றும் சம்பிக்க ஹெட்டிஆராச்சி ஆகியோரின் பங்கேற்புடன் அண்மையில் (ஆக. 04) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 153(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளம் தொடர்பான பிரேரணை குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதன்போது, கணக்காய்வாளர் நாயகத்தின் பொறுப்புகள், அரச நிதி மேற்பார்வை மற்றும் கணக்காய்வுத் துறையின் சுயாதீனத் தன்மை உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு, சம்பள மட்டம் தொடர்பாக குழுத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.மேலும், அரசியலமைப்பின் 170 ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் நாயகம் ஒரு அரசாங்க ஊழியர் அல்ல என்பதையும், நடைமுறையில் உள்ள அரசாங்க சம்பள அளவுகோலுக்கு வெளியே இப்பதவிக்கான சம்பளத்தை விசேடமாக பரிசீலிக்க முடியும் என்பதையும் குழு சுட்டிக்காட்டியது.முன்மொழியப்பட்ட சம்பளத் தொகை, முன்னர் பதவி வகித்த கணக்காய்வாளர் நாயகங்களின் சம்பளங்களையும் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னர், சம்பளங்கள் மற்றும் பணியாளர் ஆணைக்குழுவே இத்தகைய சம்பளங்களை நிர்ணயித்து வந்த போதிலும், தற்போது அத்தகைய ஆணைக்குழு இல்லையெனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.கணக்காய்வாளர் நாயகத்திற்கான முன்மொழியப்பட்ட சம்பள மட்டத்தை குழு அங்கீகரித்திருந்தாலும், அப்பதவிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்தச் சம்பளம் மேலும் உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்தை குழுத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் முன்வைத்தனர்.அதன்படி, எதிர்காலத்தில் இச்சம்பள மட்டம் தொடர்பாக மேலும் கவனம் செலுத்தி தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குழுவில் வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தரமானதும் சுயாதீனமானதுமான சம்பள மற்றும் பணியாளர் ஆணைக்குழுவை நிறுவுவதற்கான யோசனையையும் குழுத் தலைவர் முன்வைத்தார்.
2026-08-07
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு, தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கிடைத்துள்ள 31 முன்மொழிவுகள் மற்றும் இதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழுக்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளது.கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த விசேட குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.2004, 2007 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பாராளுமன்ற விசேட குழுக்களின் அறிக்கைகள் மற்றும் தனிநபர்கள், அமைப்புகள் ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 31 முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைக்காக கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல், சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை குழுக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல், மின்னணு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துதல், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.மேலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்து மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.விசேட குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கிடைத்துள்ள 31 முன்மொழிவுகளையும் முந்தைய பாராளுமன்ற விசேட குழுக்களின் அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நடைமுறைக்கு ஏற்ற பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையொன்றைத் தயாரிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பரிந்துரைகளை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க குழு தீர்மானித்தது.இக்கூட்டத்தில், குழு உறுப்பினரான அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ருவந்திலக ஜயக்கொடி மற்றும் கதிரவேலு சண்முகம் குகதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-08-07
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் செய்யப்படும் பிராந்திய மட்ட செயலமர்வு தொடரின் முதலாவது நிகழ்வு, கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு ஆகஸ்ட் 16ஆம் திகதி நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக குறித்த ஒன்றியத்தின் இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்கள் தெரிவித்தார். திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டம் கௌரவ உறுப்பினரின் தலைமையில் அண்மையில் (5) நடைபெற்றபோது, இச்செயலமர்வுக்கான ஏற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்த செயலமர்வு தொடர் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.இந்த செயலமர்வுகளின் ஊடாக, இளைஞர் சமூகத்திற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள், சட்டவாக்க செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றத்தின் எண்ணக்கரு தொடர்பில் விழிப்புணர்வூட்டவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் இச்செயலமர்வு தொடருக்கான அபிவிருத்தி பங்காளராக அனுசரணை வழங்கும் CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இந்த செயலமர்வில் பங்கேற்க விரும்பும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 18 – 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் இங்கே தரப்பட்டுள்ள https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
2026-08-05
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தற்போதைய செயலாற்றுகை ஆகியவற்றை ஆராய்வதற்காக 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது, குறித்த அதிகாரசபையின் பணிப்பாளர் சபையின் இரண்டு உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் கரிசனைகள் எழுந்தன என்பதை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது. பாராளுமன்றக் குழுக்களின் முன் சமூகமளிக்கும் போது பின்பற்ற வேண்டியதாக நிர்ணயிக்கப்பட்ட ஆடை நடைமுறைக்கு இணங்காத வகையிலேயே அதிகாரிகளில் ஒருவர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பதைக் குழு அவதானித்தது. மேலும், தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நடைமுறை மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முரணான வகையில், தவிசாளரின் முன் அனுமதியைப் பெறாமலேயே இரு அதிகாரிகளும் குழுவின் நடவடிக்கைகளிலிருந்து வெளியேறினர். இச்சம்பவங்களைத் தொடர்ந்து, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கௌரவ தவிசாளரினால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையினையடுத்து, பாராளுமன்றத்தை அவமதித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் இரு அதிகாரிகளும் 2026 பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன்னிலையில் ஆஜராகினர். இந்த நடவடிக்கைகளின் போது, அவர்கள் தமது நடத்தைக்காக மனப்பூர்வமான மன்னிப்பைக் கோரினர். உரிய பரிசீலனையின் பின்னர், அதிகாரிகள் தமது செயல்களின் தீவிரத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையும், பாராளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கௌரவம் மற்றும் தாபிக்கப்பட்ட நடைமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துள்ளமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையும் கவனத்திற்கொண்டு, ஒழுக்கநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளருடன் இணைந்து அவர்களது மன்னிப்பை ஏற்றுக்கொண்டது.பாராளுமன்றக் குழுக்களின் முன்னிலையில் ஆஜராகும் அனைத்து தனிநபர்களும் மிக உயர்ந்த நடத்தை தரநிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் எல்லா நேரங்களிலும் நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று இந்தக் குழு வலியுறுத்த விரும்புகிறது.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுஇலங்கை பாராளுமன்றம்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks