E   |   සි   |  

2026-08-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக கிடைத்துள்ள 31 முன்மொழிவுகளை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழு நிபுணர் குழுவை நியமித்தது

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு, தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கிடைத்துள்ள 31 முன்மொழிவுகள் மற்றும் இதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழுக்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளது.

கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த விசேட குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

2004, 2007 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பாராளுமன்ற விசேட குழுக்களின் அறிக்கைகள் மற்றும் தனிநபர்கள், அமைப்புகள் ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 31 முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைக்காக கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல், சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை குழுக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல், மின்னணு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துதல், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்து மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

விசேட குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கிடைத்துள்ள 31 முன்மொழிவுகளையும் முந்தைய பாராளுமன்ற விசேட குழுக்களின் அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நடைமுறைக்கு ஏற்ற பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையொன்றைத் தயாரிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பரிந்துரைகளை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க குழு தீர்மானித்தது.

இக்கூட்டத்தில், குழு உறுப்பினரான அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ருவந்திலக ஜயக்கொடி மற்றும் கதிரவேலு சண்முகம் குகதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-21

SLIATE நிறுவனங்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உபகுழு கூடியது

நாடு முழுவதிலும் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் (ATI) நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உபகுழு அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (SLIATE) தற்போதைய தொழிற்பாடுகள், வளப் பயன்பாடு, மாணவர் தக்கவைப்பு மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பாடநெறிகளை அமைத்தல் ஆகியவை குறித்து ஆராய்வதற்காக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப் - COPE) இந்த உபகுழு நியமிக்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாப்பலகம அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ATI நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான பரிந்துரைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது, SLIATE அமைப்பிடம் உள்ள வளங்கள் போதியளவில் பயன்படுத்தப்படாமை, காலாவதியான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்கள், அத்துடன் சம்பள மற்றும் கொடுப்பனவு முரண்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், சில ATI நிறுவனங்களின் நிர்வாகப் பிரச்சினைகள், அதிகளவிலான மாணவர்-விரிவுரையாளர் விகிதம், விடுதி வசதிக் குறைபாடு, வாழ்க்கைச் செலவு மற்றும் மாணவர் நலன்புரிப் பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் பாடநெறிகளை பாதியிலேயே கைவிட்டுச் செல்லுதல் போன்ற பிரச்சினைகள் குறித்தும் அந்நிறுவனங்களின் மாணவர்களும் அதிகாரிகளும் குழுவிடம் தெளிவுபடுத்தினர். வேலைவாய்ப்புச் சந்தையில் HND தகைமைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் அந்நிறுவனங்கள் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், HND பாடநெறிகளை பட்டப்படிப்பு மட்டம் வரை தரம் உயர்த்துதல், பாடத்திட்டங்களைப் புதுப்பித்தல், கைத்தொழில் துறையுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


2026-09-18

பொதுநலவாய 2026 புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருது திரு. சுகத் வசந்த த சில்வாவுக்கு

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மற்றும் சனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றிற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பைப் பாராட்டி, இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுகத் வசந்த த சில்வா அவர்களுக்கு பொதுநலவாய 2026 புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருது (CPA New Parliamentarian Award 2026) கிடைத்துள்ளது.தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நேற்று (செப். 17) நடைபெற்ற 69 ஆவது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இவ்விருது அவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.2024 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது விழிப்புலனற்ற பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தவிசாளராகச் செயற்பட்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்குப் பங்காற்றியுள்ளார்.பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறை ரீதியான சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் இவர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மாற்றுத்திறனாளிகளைப் பங்கேற்கச் செய்து இலங்கையின் முதலாவது தேசிய பங்கேற்பு வரவுசெலவுத் திட்ட ஆலோசனையை நெறிப்படுத்தியமை அவற்றுள் பிரதானமாகும்.


2026-09-17

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருவது தொடர்பான ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும்  வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-17

பகிடிவதைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி  உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks