02

E   |   සි   |  

2026-02-17

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

  • சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்


பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (பெப். 17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகின.

இதனைத் தொடர்ந்து குழு நிலையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவுக்கு திருத்தங்களை முன்வைத்தனர். அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டதுடன், இதன்போது சாமர சம்பத் அவர்கள் தனது திருத்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைய குறித்த சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 152 வாக்குகளும், முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவாக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சட்டமூலத்தின் 4வது பிரிவுக்கு திருத்தம் முன்வைக்கப்பட்டதுடன், இதனை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரினால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டின் பின்னர் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2026 ஜனவரி 07ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் சட்டமூலத்திற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

இச்சட்டத்தின் ஊடாக தேசிய அரசுப் பேரவையின் 1977ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் நீங்குகின்றது. இதற்கு அமைய சட்டத்தின் 3வது பிரிவின் நியதிகளின் படி ஓய்வூதியமொன்றறைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவரானவரும் மற்றும் இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்கின்றவருமான எவரேனும் ஆளுக்கு இச்சட்டம் தொடங்கும் தேதியன்றும் அதன் பின்னரும் அத்தகைய ஓய்வூதியம் நிறுத்தப்படும்.



தொடர்புடைய செய்திகள்

2026-10-07

2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

2027ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக இன்றையதினம் (ஒக். 07) கௌரவ தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.2027 நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் சேவைச் செலவினங்களுக்காக (நான்காயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டு பில்லியன் எழுநூற்றி எழுபத்தி மூன்று மில்லியன் முந்நூற்றி எண்பத்தொட்டாயிரம்  ரூபா) நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல் மற்றும் அரசாங்கம் கடன் பெறுவதற்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான ஏற்பாடுகள் இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஏற்பாடு செய்கிறது.இதற்கமைய, 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு அல்லது வரவுசெலவுத்திட்ட உரை 2026 நவம்பர் 12ஆம் திகதி இடம்பெறும். இதன் பின்னர், நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, நவம்பர் 20ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும். அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவுள்ளது.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூத்தின் ஊடாக 2027 ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான நிதியாண்டுக்கான அரசாங்கச் செலவினங்களை மேற்கொள்வதற்கும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கும், அத்துடன் தொடர்புடைய கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


2026-10-07

களனி குருகுல வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில்

களனி குருகுல வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி நடைபெற்றது. இந்த அமர்வு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.களனி குருகுல வித்தியாலய மாணவ, மாணவியருக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த பாடசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு கருத்துத் தெரிவித்த  கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக மாணவர்கள் தலைமைத்துவம் தொடர்பில் பல முக்கியமான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் அவர்கள் எதிர்காலத் தலைவர்களாக உருவாகுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அத்துடன், மாணவர் பருவத்திலேயே திறன்களையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்ததுடன், பாரம்பரிய சிந்தனைச் சட்டகத்திற்கு அப்பால் சிந்திப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.மேலும், இலங்கைப் பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சூலா ஹேரத் அவர்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.களனி குருகுல வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வை ஆரம்பித்து, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தமது அமைச்சுக்களின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் சபைக்கு விளக்கமளித்தனர்.இதன்போது, மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் அதிதிகளின் தலைமையில் வழங்கப்பட்டன.நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவில், களனி குருகுல வித்தியாலய அதிபர் கலாநிதி குசல பெர்னாண்டோ அவர்கள் நன்றியுரையாற்றியதுடன், நாட்டின் பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய நிகழ்ச்சித்திட்டத் தொடர்கள் குறித்துத் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சித்திட்டத்தில், ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன், ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் சமந்த மல்லஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-10-06

ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்திற்கு தனது கையொப்பத்தையிட்டு கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஒக். 06) சான்றுரைப்படுத்தினார்.இந்தச் சட்டமூலம் கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் கடந்த 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்மூலம், 1992 ஆம் ஆண்டின்  46ஆம் இலக்கச் சட்டத்தின் சட்ட மற்றும் நிர்வாக விதிகள் புதுப்பிக்கப்பட்டு, ஏற்றுமதி கமத்தொழில் பயிர்கள் தொடர்பான சட்டக் கட்டமைப்பும் திருத்தப்படுகிறது.இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்பைப் புதுப்பித்து, 'பணிப்பாளர்’  என்ற பதவிக்குப் பதிலாக 'பணிப்பாளர் நாயகம்’ என்ற பதவியை அறிமுகப்படுத்தவும், இதற்கு மேலதிகமாக பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் ஆகிய பதவிகளை அறிமுகப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.அத்துடன், “ஏற்றுமதி விவசாயப் பயிர்” என்பதற்கான வரைவிலக்கணமும் திருத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு மேலதிகமாக ஏற்றுமதிச் சாத்தியக்கூறுகளைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்ட பயிர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், நெல், மரக்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் மற்றும் குறிப்பிட்ட சில உணவுப் பயிர்கள் உள்ளிட்ட தெளிவாகக் குறிப்பிடப்பட்ட பயிர் வகைகளும், பெருந்தோட்டப் பயிர்களும் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தம்) சட்டமூலமானது, 2026ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்த) சட்டமாக அமுலுக்கு வருகிறது.


2026-10-02

ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவுள்ளது.இந்தப் பாராளுமன்ற அமர்வுவாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் கடந்த செப். 25ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய ஒக்டோபர் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ்  2493/36  மற்றும் 2493/37 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள், 2493/38 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும் பொதுத்தனிசு முகாமைத்துவச் சட்டம் ஆகியவை குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 07ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப. 10.30 மணி  முதல் மு.ப 11.00 மணிவரை வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் பி.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 08ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைகௌரவ ஹர்ஷ த சில்வாதியகம வனத்தைப் பாதுகாத்தல்கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்துபுத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்1983 ‘கறுப்பு  ஜூலை’யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும்,மேலும் இதுபோன்ற இனவன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்கௌரவ லசித் பாஷண கமகேவீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிஇலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்கௌரவ சமிந்த விஜேசிறிஇலங்கை வெளிநாட்டு சேவைக்கான நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்இதனையடுத்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks