E   |   සි   |  

2026-11-27

செய்தி வகைகள் : செய்திகள் 

கொழும்பில் சேகரிக்கப்படும் கழிவுகளை அறுவைக்காடு பகுதிக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்காக இதுவரை 26,151 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை புத்தளம், அறுவைக்காடு பகுதிக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்காக இதுவரை 26,151.89 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், இத்திட்டத்தின் அனைத்து நிர்மாணப் பணிகள், செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை ஒப்பந்ததாரரிடமிருந்து பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் காலப்பகுதியை நீடிப்பது மற்றும் திட்டத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய முறைமை தொடர்பில் China Harbour Engineering Company Limited நிறுவனத்துடன் கலந்துரையாடி தீர்மானிப்பதற்கும், அதற்காகக் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்திலிருந்து நாளாந்தம் அகற்றப்படும் 480 மெற்றிக் தொன் குப்பைகள் கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள கழிவுகளிலிருநு்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



தொடர்புடைய செய்திகள்

2026-11-27

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன

2027ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின் 05வது நாளான இன்று (நவ. 27) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செலவுத் தலைப்புக்கள் (124, 216, 331) மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் (151, 290) திருத்தங்கள் இன்றி, வாக்கெடுப்பு இன்றியும், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் 151ஆம் இலக்க செலவுத் தலைப்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றியும் நிறைவேற்றப்பட்டன.


2026-11-27

உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

கால்நடைகள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடைவதால் உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்திக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் கால்நடைகளின் உற்பத்தித்திறனையும் பண்ணைகளின் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க முடியும் என விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.இதற்கமைய, தேசிய பால் உற்பத்தி வேலைத்திட்டத்தை (Dairy Hub) நடைமுறைப்படுத்துவதன் மூலம் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், உயர் இன கால்நடைகளை உருவாக்குவதற்காக செயற்கைக் கருவூட்டல் சேவைகள் மற்றும் இனப்பெருக்க முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், கால்நடைகளின் போசாக்கு நிலையை உயர்த்துவதற்காக புல் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல், கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்தி தடுப்பதுடன் கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல், பண்ணை முகாமைத்துவம், கால்நடை நலன்புரி மற்றும் பால் உற்பத்தி வினைத்திறனை மேம்படுத்துதல், விவசாயிகளுக்குப் பயிற்சி, தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் விரிவாக்கச் சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கைகள் மூலம் ஒரு கால்நடையிடமிருந்து பெறப்படும் பாலின் அளவையும் ஒட்டுமொத்த பண்ணை உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதன் ஊடாக உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்தியை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடைவது திரவப் பால் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கால்நடைகளின் உற்பத்தித்திறனையும் பண்ணைகளின் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதன் மூலம் அந்தப் பாதிப்பைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடையவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் தெரிவித்தார்.2015 ஆம் ஆண்டில் 1,227,379 ஆகக் காணப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 1,525,717 ஆக அதிகரித்துள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டில் 381,431 ஆகக் காணப்பட்ட எருமைகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 448,606 ஆக அதிகரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், அக்காலப்பகுதியில் ஒட்டுமொத்தத் திரவப் பால் உற்பத்தியில் தொடர்ச்சியான வீழ்ச்சி எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.2023 ஆம் ஆண்டில் 371.73 மில்லியன் லீற்றராகக் காணப்பட்ட ஒட்டுமொத்தத் திரவப் பால் உற்பத்தி, 2025 ஆம் ஆண்டில் 410.16 மில்லியன் லீற்றராக அதிகரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


2026-11-27

இலங்கையில் 03 மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைகளும் 05 புனர்வாழ்வு பிரிவுகளும் இயங்கி வருகின்றன

இலங்கையில் 03 மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைகளும் அவற்றுடன் தொடர்புடைய 05 புனர்வாழ்வு பிரிவுகளும் இயங்கி வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இதன்படி, ராகம, திகன (கண்டி) மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் புனர்வாழ்வு வைத்தியசாலைகள் அமைந்துள்ளதுடன், ஜயந்திபுர (பொலன்னறுவை), வாரியபொல (குருநாகல்), கெந்தகொல்ல (பதுளை), மாங்குளம் மற்றும் மாலிபன் (காலி தேசிய வைத்தியசாலை) ஆகிய இடங்களில் புனர்வாழ்வு பிரிவுகள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்கு பாராளுமன்றத்தில் அமைச்சர் வழங்கிய பதிலின்போதே இவ்விடயங்கள் தெரியவந்தன.2026 ஆம் ஆண்டில் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்காக ராகம புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு 182 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஏனைய புனர்வாழ்வு பிரிவுகளுக்கான தேவைகளும், குறித்த வைத்தியசாலைக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.புனர்வாழ்வு வைத்தியசாலைகளில் அதிகபட்ச சேவையை வழங்குவதற்குத் தற்போது பணியிலுள்ள ஊழியர்கள் போதுமானதாக இல்லை என்பதால், தொழில் சிகிச்சையாளர்கள், உடற்றொழில் சிகிச்சையாளர்கள், பேச்சுச் சிகிச்சையாளர்கள் மற்றும் செயற்கை உறுப்புப் பொருத்துநர்கள், எலும்பியல் சீரமைப்பு நிபுணர்கள் ஆகிய சேவைக் குழுக்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.ராகம புனர்வாழ்வு வைத்தியசாலை, திகன புனர்வாழ்வு வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் செயற்கை உறுப்புகளை உற்பத்தி செய்யும் பிரிவுகள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும், 2025 – 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டக் கட்டமைப்பின் கீழ், ராகம புனர்வாழ்வு வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவு ஆகியவற்றுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


2026-11-26

நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவுத்தலைப்புக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (நவ. 26) நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவுத் தலைப்புக்கள் (110, 228 முதல் 236 வரை மற்றும் 326) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விவாதத்தையடுத்து செலவுத் தலைப்பு 232 திருத்தங்களுடனும், ஏனைய செலவுத் தலைப்புக்கள் திருத்தங்கள் இன்றியும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டன.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks