logo

E   |   සි   |  

2026-01-27

செய்தி வகைகள் : செய்திகள் 

மனித-வனவிலங்கு சகவாழ்வு குறித்து பொட்ஸ்வானாவில் நடைபெற்ற சர்வதேச பாராளுமன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகள் பங்கேற்பு

மனித-வனவிலங்கு சகவாழ்வு தொடர்பில் பொட்ஸ்வானாவின் காபரோனில் 2026 ஜனவரி 19 முதல் 21 வரை நடைபெற்ற சர்வதேச பாராளுமன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் பொட்ஸ்வானா, ஏனைய ஆபிரிக்க நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

காலநிலை மாற்றம், நிலப் பயன்பாட்டு அழுத்தம், வாழ்விட இழப்பு மற்றும் சனத்தொகை மாற்றங்கள் ஆகியவற்றால் தீவிரமடைந்து வரும் ஒரு சமூக-சுற்றுச்சூழல் சவாலான மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்து இந்த மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையில் நிலையான சகவாழ்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கை அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், உள்ளூர் சமூகத் தலைவர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்கள் இதில் ஒன்றிணைந்தனர்.

சுற்றாடல் கௌரவ பிரதி அமைச்சர் எண்டன் சரத் ஜயகொடி மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், குறிப்பாக மனித-யானை மோதல் சவாலை எதிர்கொள்வதில் இலங்கையின் தேசிய கண்ணோட்டங்கள் மற்றும் கொள்கை அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

2026 ஜனவரி 19 ஆம் திகதி, 'மனித-வனவிலங்கு சகவாழ்வு: மோதலுக்கான முக்கிய தூண்டுதல்கள் மற்றும் காரணிகள்' என்ற அமர்வில் கௌரவ பிரதி அமைச்சர் எண்டன் சரத் ஜயகொடி உரையாற்றினார். இதன்போது, மனித-யானை மோதலை முகாமைத்துவம் செய்வதில் இலங்கையின் விரிவான அனுபவத்தை விவரித்த அவர், எதிர்வினையாற்றும் குறுகிய கால தீர்வுகளில் இருந்து விரிவான மற்றும் முன்னோக்கிய கொள்கை மற்றும் சட்ட ரீதியான தீர்வுகளுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வனவிலங்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, மோதல்களைக் குறைப்பதற்கான ஒரு நிலையான அணுகுமுறையாக நிர்வகிக்கப்பட்ட யானை வலயங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட வலயங்களை நிறுவுவதற்கான இலங்கையின் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஆராய்ச்சி அடிப்படையிலான கொள்கை மேம்பாடு, தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் இது போன்ற சவால்களை எதிர்கொள்ளும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

2026 ஜனவரி 20 ஆம் திகதி, 'மனித நடவடிக்கைகளில் வனவிலங்கு தாக்க முகாமைத்துவம்: சமூகம் சார்ந்த இயற்கை வள முகாமைத்துவ மற்றும் நலப்பகிர்வு மாதிரிகள்' என்ற அமர்வில் கௌரவ கின்ஸ் நெல்சன் உரையாற்றினார். இலங்கையில், குறிப்பாக மனித-யானை மோதலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்து அவரது உரையில் கவனம் செலுத்தப்பட்டது. மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையில் வெற்றிகரமான சகவாழ்வை அடைவதற்கு அர்த்தமுள்ள சமூகப் பங்களிப்பு, நியாயமான நலப்பகிர்வு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட சமூகங்களின் சமூக-பொருளாதாரத் தேவைகளுடன் பாதுகாப்பு நோக்கங்களை சமநிலைப்படுத்தும், சமூகத்தை மையமாகக் கொண்ட கொள்கைகள், உள்ளூர் ஆட்சி பொறிமுறைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி முயற்சிகளை வலுப்படுத்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பங்கை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடல்களில், செயலூக்கமான கொள்கை மற்றும் சட்டங்கள், சமூக வலுவூட்டல், இழப்பீடு மற்றும் காப்பீட்டு பொறிமுறைகள் ஊடான பொருளாதார பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த தீர்வுகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கொள்கை புத்தாக்கம் மற்றும் சமூக ஈடுபாட்டின் மூலம் மனித-யானை மோதலைத் தீர்ப்பதில் இலங்கையின் அனுபவங்கள் சர்வதேச பாராளுமன்ற உரையாடலுக்கு வழங்கப்பட்ட பெறுமதிமிக்க பங்களிப்புகளாக அங்கீகரிக்கப்பட்டன.

மனித-வனவிலங்கு சகவாழ்வு குறித்த சர்வதேச பாராளுமன்ற மாநாடு 2026 ஜனவரி 21 ஆம் திகதி நிறைவடைந்தது. நிலையான மற்றும் அமைதியான மனித-வனவிலங்கு சகவாழ்வை மேம்படுத்துவதில் சட்டமன்றங்களின் பங்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய பாராளுமன்ற பரிந்துரைகள் இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்டன.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks