பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-01-26
செய்தி வகைகள் : செய்திகள்
தித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்று 2026.01.20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பொருளாதார அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது.
நிதி அணுகலுக்கான பிரதான தடைகளாக உள்ள அதிக வட்டி வீதங்கள் மற்றும் பிணையில்லாமை ஆகியவற்றுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள தீர்வுகள் குறித்து அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அதிக வட்டி வீதங்களுக்கான தீர்வாக அரசாங்க அல்லது அபிவிருத்திப் பங்காளிகளின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் மறுநிதியளிப்புக் கடன் திட்டங்களை (Re-financing loans) அறிமுகப்படுத்துதல் மற்றும் வட்டி மானியம் (Interests subsidy loans) வழங்கப்படும் கடன் திட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டிற்காக 95,686 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கமைய, தித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக நடவடிக்கைகளை மீண்டும் விரைவாக ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழிற்படு மூலதனக் கடன்களை (Working capital loans) வழங்கும் பணிகள் கடந்த டிசம்பர் 16 முதல் 3 அரச வங்கிகள் மூலம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். தனியார் வங்கிகள் உட்பட மேலும் 13 வங்கிகள் தற்போது இந்தக் கடன்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் 0 சதவீத வட்டியில் வங்கிகளுக்கு நிதி வழங்கப்படுவதாகவும், வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டி வீதத்தில் 25 மில்லியன் ரூபா வரை கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதன்படி 2026 ஆம் ஆண்டிற்காக 10,000 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன் வசதியின் கீழ் 25 மில்லியன் ரூபா வரை 5 சதவீத வட்டி வீதத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடன்களைப் பெற முடியும் என்றும், 2026 ஆம் ஆண்டில் அதற்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும் கடன் பெறும் போது தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிணைகளைச் சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வாக நிறுவப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட கடன் உத்தரவாத நிறுவனம் அந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தற்போது சம்பந்தப்பட்ட கடன் தொகையில் 67 சதவீதத்திற்குப் பிணைப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு 80 சதவீதப் பிணைப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். ஒரு தொழில்முயற்சியாளர் பெறும் கடன் தொகையில் 67 சதவீதத்திற்கு மட்டுமே பிணை கிடைப்பதால், எஞ்சிய 33 சதவீதத்திற்குப் பிணை இல்லாதது நடைமுறை ரீதியாக ஒரு சிக்கலாக இருப்பதால், அது குறித்து அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.
அதேபோன்று இந்தக் கடன்களைப் பெறும்போதும் பிணைகள் குறித்தும் சரியான முறைமை மற்றும் தகவல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இன்னும் முறையாகச் சென்றடையவில்லை என்பது ஒரு சிக்கல் என்றும், அதைச் சரியாகத் தெரியப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
விவசாயச் சமூகத்தின் வாழ்வாதார நிலைமையை மேம்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கவும் கடன் வசதிகளை வழங்குவது பெப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதன் கீழ் 50 இலட்சம் ரூபா கடன் தொகை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படவுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் அதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படும் ஏனைய கடன் திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், அவை தொடர்பாக உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தில் அமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதி அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோன்று திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன, அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சி, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷ மற்றும் அதிகாரிகள் குழுவொன்றும், பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உட்பட அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks