logo

E   |   සි   |  

2026-01-01

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கௌரவ சபாநாயகரின் தலைமையில்

  • அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளை உச்ச வகையில் பாதுகாப்பதாகவும், அதற்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கெரளவ சபாநாயகர் வலியுறுத்தினார்
  • பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாாடுகள் உள்ளிட்ட விடயங்களுக்காக  வருகை தரும் இலட்சக்கணக்கானவர்களுக்கு வசதிகளை வழங்குவது உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் பணியாட் தொகுதியினர் வழங்கிவரும் அர்ப்பணிப்பை பாராட்டுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவிப்பு


பாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஜன. 01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதனால் பத்தாவது பாராளுமன்றத்திற்கு விசேடமான பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வலியுறுத்தினார். இதற்கு அமைய, வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து பாராளுமன்றப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இது விடயத்தில் சாதகமான முன்னேற்றங்களைக் காண முடிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமூக மேம்பாடு ஏற்படும்போது நியாயம் மற்றும் சமத்துவம் பாராளுமன்றத்தில் உள்ள சகல பணியாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தனது உரையில் தெரிவித்தார். இதற்கு அமைய, பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளடங்கலான சகல உழைக்கும் மக்களினதும் உரிமைகளை அதியுச்ச அளவில் பாதுகாப்பதற்கும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தான் தொடர்ந்தும் ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் சிறந்த சேவையை தொடர்ந்து வழங்கும் ஊழியர்களாக மாறுவதற்கு புத்தாண்டில் தைரியம் கிடைக்க  வேண்டும் எனக் கூறி சபாநாயகர் புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, நாடு என்ற ரீதியில் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிச் செல்லும்போது சட்டவாக்கம் என்ற ரீதியில் பாராளுமன்றத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு விசாலமானது எனத் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் சட்டவாக்க நடவடிக்கைகள் மற்றும் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தரும் இலட்சக்கணக்கானவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றியைத் தெரிவித்த அவர், புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்ற பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்களும் அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற பணியாட்தொகுதியினர் உள்ளிட்ட அனைவரும் அரசாங்க ஊழியர்களுக்கான உறுதியுரையை எடுத்துக்கொண்டனர்.

கௌரவ பிரதிச் சாபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, திணைக்களங்களின் பிரதானிகள் உள்ளடங்கலான பாராளுமன்ற பணியாளர்கள், இணைந்த சேவைகளின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks