E   |   සි   |  

2025-12-03

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மாவட்ட மட்டத்தில் உள்ள அரசாங்க நிறுவனங்களை GovPay திட்டத்துடன் இணைப்பதற்கான பொறிமுறையொன்றை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உருவாக்க வேண்டும் - விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

மாவட்ட மட்டத்தில் உள்ள அரசாங்க நிறுவனங்களை GovPay திட்டத்துடன் இணைப்பதற்கான ஒருங்கிணைப்புப் பொறிமுறையொன்றை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உருவாக்க வேண்டும் என விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன வலியுறுத்தினார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (நவ. 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே அக்குழுவின் தலைவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள GovPay திட்டத்தில் மாவட்ட மட்டத்தில் உள்ள பல அரச நிறுவனங்கள் இணைந்துகொள்வது குறித்த தெளிவுபடுத்தல்கள் அவசியம் எனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதனை முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சு மட்டத்தில் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

அரசாங்க நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தும்போது ஒவ்வொரு அரசாங்க நிறுவனங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான திறமை உள்ள அதிகாரிகளைப் பொறுப்பாக நியமிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர்.

இதேவேளை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. புதிய கண்டுபிடிப்புக்கள் உள்ளிட்ட ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு அமைச்சு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் பற்றி இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன ஹெட்டிஆரச்சி, லசித் பாஷன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, சத்துர கலப்பதி, (ஜனாதிபதி சட்டத்தரணி) எம்.நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-12-03

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்களை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானம்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முன்முயற்சியில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால்  விநியோகிக்கப்படும் அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்களை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முன்முயற்சியில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025 நவம்பர் 25 ஆம் திகதி அனைத்து சீன பெண்கள் சம்மேளனம் (All-China Women's Federation – ACWF) 1,000,000 யுவான் (சுமார் 43 மில்லியன் ரூபாய்) பெறுமதியான பொருட்கள் தொகுதியை நன்கொடையாக வழங்கியிருந்தது. இலங்கை பாராளுமன்ற பணியாளர்களுக்கு தாய் சேய் அறை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஊடாக நாடுபூராகவும் விநியோகிக்கப்படவுள்ள பெண்களுக்கான சுகாதார உற்பத்திகள் இதில் உள்ளடங்கியிருந்தன.  அதற்கமைய, இந்த நன்கொடையின் ஒரு பகுதியாக உள்ள சுகாதார நப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் (Baby Diapers), குழந்தைகளுக்கான துடைப்பான்கள் (Baby Wipes), டிஷ்யூ பேப்பர், மென்மையான பருத்தித் துவாய்கள் (Soft Cotton Towels), கிருமிநீக்கும் கைச்சுத்திகரிப்புத் திரவம் உட்பட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்கள் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களின் தலையீட்டில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்களை விநியோகிக்கவுள்ளன.இது குறித்து கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர், பெண்களை வலுவூட்டுவது மற்றும் சிறுவர்களின் நலனுக்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பெறப்பட்ட இந்த நன்கொடையை, தற்போதைய பேரனர்த்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கத் தீர்மானித்திருப்பது அவர்களுக்கு ஒரு நிவாரணமாக இருக்கும் என்று தெரிவித்தார்.அத்துடன், இந்த நன்கொடையை வழங்குவதற்கு முதன்மைக் காரணமாக இருந்த சீன மக்கள் குடியரசுக்கும், சீனத் தூதுவர் சீ ஷென்ஹொங் (Qi Zhenhong) அவர்களுக்கும் மற்றும் அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்துக்கும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர அவர்கள் விசேட நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களுக்கும், இது தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பாரியளவில் ஆதரவை வழங்கிய பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.


2025-12-03

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள், பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு மதிப்பீடுகள் என்பன அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டன

கீரி சம்பா அரிசிக்குப் பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசியைப் பயன்படுத்துவது எந்தளவுக்கு வெற்றியளிக்கும்? – குழு கேள்வியெழப்பியதுஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள், பொதுத் தனிசு முகாமைத்துவச் சடத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான குறைமதிப்பீடுகள் என்ப அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டன. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (நவ. 27) கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது.1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி  ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2025.10.15ஆம் திகதிய 2458/43 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. சந்தையில் கீரி சம்பா அரிசிக்குக் காணப்படும் கட்டுப்பாட்டுக்கான தீர்வாக 2025.10.15ஆம் திகதி முதல் 2025.10.28ஆம் திகதி வரையில் அரிசி இறக்குமதிக்காக இதன் ஊடாக வழி ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கீரி சம்பாவுக்குப் பதிலாக பொன்னி சம்பா அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இது 64,000 மெற்றிக் தொன் என்றும் அவர்கள் குழுவில் தெரிவித்தனர்.அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் சந்தையில் கீரி சம்பாவின் விலை தொடர்ச்சியாக அதிகரித்த நிலையில் இருப்பது குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. பொன்னி சம்பா இறக்குமதி செய்யப்பட்டாலும், கீரி சம்பாவிற்கு மாற்றாக அதைப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை என்றும் குழு சுட்டிக்காட்டியது. அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை இருந்தாலும், பெரிய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் போலியான விலைப்பட்டியல் மூலம் கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், இந்த சூழ்நிலையைத் தடுக்க தலையிட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.வருடமொன்றுக்குத் தேவைப்படும் அரசியின் அளவு, உற்பத்தி செய்யப்படும் அரிசி மற்றும் உற்பத்திக்கான செலவுகள் குறித்தும் குழு, விவசாய அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இவை தொடர்பான துல்லியமான, புதுப்பிக்கப்படாத தரவுகள் இல்லாமை கடுமையான பிரச்சினையென்றும் குழு சுட்டிக்காட்டியது.அத்துடன், வாகன இறக்குமதி தொடர்பான 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க இறக்குமதி  ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2025.10.24ஆம் திகதிய 2459/46 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மோட்டார் வாகன இறக்குமதியின் போது பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளைக் குறிப்பிட்டு 2013.04.03ஆம் திகதி 1804/17 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2013ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி ஒழுங்குவிதிகளின் 05ஆம் இலக்க ஒழுங்குவிதிக்கு இணங்காது இறக்குமதி செய்ததன் காரணமாக மோட்டார் வாகனங்கள் இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்பொழுது நீதிமன்றத்தில் வழக்கொன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிலைமையின் கீழ் நிதி அமைச்சினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்ட உடன்பாட்டு நிபந்தனை மற்றும் அது தொடர்பாக உரிய தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த ஒழுங்குவிதி வெளியிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த இணக்கப்பாடு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எழுத்துப்பூர்வமாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, எதிர்காலத்தில் தொடர்புடைய ஒப்புதலைப் பரிசீலிப்பதாக குழு அதிகாரிகளுக்குத் தெரிவித்தது.மேலும், 2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 2025.10.24ஆம் திகதிய 2459/52 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது. பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் பிரிவு 35 மற்றும் 31 (7)இன் கீழ் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைய, எந்தவொரு சட்டரீதியான தடையுமின்றி முதநிலை வணிகர்கள் மற்றும் பிற நியமிக்கப்பட்ட சந்தை பங்கேற்பாளர்களுடன் ஈடுபடுவதற்கான அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த ஒழுங்குவிதிகள் அமைந்துள்ளன. நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து குழு இதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.இதேவேளை, 2025 ஆண்டுக்கான ரூ.31.5 மில்லியன் மற்றும் ரூ.18.5 மில்லியனுக்காகப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கும் குறைநிரப்பு மதிப்பீடுகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், கலந்துரையாடல்களின் பின்னர் இவற்றுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டியாராச்சி மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-12-02

பல அரச நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

பல அரச நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர அவர்களின் தலைமையில் 2025.11.21ஆம் திகதி இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன .அதற்கமைய நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள பின்வரும் நிறுவனங்களின் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன:1.    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்2.    தேசிய திட்டமிடல் திணைக்களம்3.    அரச தொழில் முயற்சிகள் திணைக்களம்4.    மதிப்பீட்டுத் திணைக்களம்5.    இலங்கை சுங்கம்6.    வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்7.    அபிவிருத்தி நிதித் திணைக்களம்8.    தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்9.    அரச நிதிசார் கொள்கைத் திணைக்களம்10.    அரச நிதித் திணைக்களம்இந்தத் திணைக்களங்களின் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், தேவைகள் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-11-28

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு, எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது கைவிடப்பட்ட 11 திட்டங்கள் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் அவதானம்

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் குறித்து குழுவின் கவனம்திணைக்களத்தினால் தற்பொழுது பயன்படுத்தப்படும் மற்றும் தினணக்களத்தின் பொறுப்பில் இல்லாத வாகனங்கள் குறித்து அறிக்கை கோரப்பட்டதுகணக்குப் பிரிவில் காணப்படும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்தும் குழு கவனம் செலுத்தியதுநீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு, எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது கைவிடப்பட்ட 11 திட்டங்கள் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 55,078 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டு 4,047.43 மில்லியன் ரூபா செலவில் 11 அபிவிருத்தித் திட்டங்களில் சில கைவிடப்பட்டும், சில தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இவற்றில் உமா ஓயா கீழ் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டம், கீழ் மல்வத்து ஓயா அபிவிருத்தித் திட்டம் மற்றும் யான் ஓயா நீர்த்தேக்க அபிவிருத்தித் திட்டங்களும் உள்ளடங்குவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.இவ்வாறான நிலையில், நாட்டிற்கு முக்கியமான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக முடிக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது. தேவையான முன்னுரிமையை அடையாளம் காணாமல் சில திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க நிதி குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குழு மேலும் வலியுறுத்தியது.அத்துடன், நீர்ப்பாசனக் கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசனக் குளங்களுக்கான வழிகள் தடுக்கப்பட்டிருந்தால் அல்லது அவற்றைத் தடுக்கும் வகையில் சட்டவிரோதமான கட்டடங்கள் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இது பற்றி பிறிதொரு தினத்தில் விரிவாகக் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியது.திணைக்களத்திற்குச் சொந்தமான தற்பொழுது பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் திணைக்களத்தின் பொறப்பில் இல்லாத வாகனங்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதியாகும்போது 2004 வாகனங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், திணைக்களத்தின் வாகனப் பதிவுகளின்படி கிடைக்கக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை 1560 என்று குழு சுட்டிக்காட்டியது. இதற்கமைய, 464 வாகனங்கள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லையென்பதைக் குறிப்பிட்ட குழு, இது தொடர்பான அனைத்துத் தரவுகளையும் கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.கணக்குப் பிரிவுப் பணியாளர்களுக்குக் காணப்படும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியதுடன், இந்த நியமனங்களுக்கான கோரிக்கையை முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதுடன், அதன் பிரதியொன்றைத் தமக்கு அனுப்புமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, சுகத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, (வைத்தியர்) காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத், ஓஷானி உமங்க, லால் பிரேமநாத் மற்றும் சுனில் ரத்னசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks