பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-11-07
செய்தி வகைகள் : செய்திகள்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (நவ. 07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சம்பிரதாய பூர்வமாக படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 5.50 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.
புதிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமான இது சுதந்திர இலங்கையின் 80வது வரவுசெலவுத்திட்டமாக வரலாற்றில் பதிவாகிறது. வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆளுநர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.
2026-07-21
மாணவர் பாராளுமன்றம் தொடர்பில் மாணவர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று கொழும்பு – 10 அல்-ஹிதாயா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும், குறித்த கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் திருமதி ஏ.எஃப்.சரூக் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.இந்தச் செயலமர்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் எஸ்.எல். ஸியாத் அஹமட் பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கினார்.தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரி ஏ.எஸ்.எம்.யஸ்ரி மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி நடைமுறையிலான முன்னுதாரணங்களுடன் விரிவான விளக்கத்தை வழங்கினார். இச்செயலமர்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் மாணவர் பாராளுமன்றம் குறித்துத் தமக்குக் காணப்படும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக்கொண்டனர்.
2026-07-21
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) ஆகியவற்றினால் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் குறித்த விடயங்கள் அடங்கியதாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை சட்டமா அதிபர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஆற்றப்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டன.இதற்கமைய, வெளிநாட்டு பணமனுப்பல்களின் பிரகாரம், வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குரியதாக 2022 மே 01ஆம் திகதி தொடக்கம் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட உத்தேச திட்டம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2025.ஒக்டோபர் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 (4) இன் ஏற்பாடுகளுக்கு அமைய சட்டத்துறை தலைமையதிபதியின் அவதானிப்புக்கள் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.அத்துடன், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட சம்பவங்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்துவது தொடர்பான தீர்மானத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை சபை, காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, லங்கா சதொச லிமிடட், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய சேமிப்பு வங்கி ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளன. 2026.04.07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையியற் கட்டளை 1119(4) மற்றும் 120 (4) ஆகியவை தொடர்பான திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2026-07-21
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழல் (திருத்த) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஜுலை 21) சான்றுரைப்படுத்தினார்.1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டம், அத்துடன் 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க தேசிய சூழல் (திருத்த) சட்டங்கள் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு கணிசமாக வலுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சுற்றாடல் மற்றும் நிறுவன ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்பதைக் கருத்திற்கொண்டு இந்தத் திருத்தச் சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தச் சட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல், கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஒழுங்குமுறை பொறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும் பொறிமுறைகளை நவீனமயப்படுத்துதல் ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய இச்சட்டமூலம் சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க தேசிய சூழல் (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.
2026-07-20
இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகளுக்காக 2026ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.இலங்கைத் தூதுக் குழுவிற்கு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தலைமைதாங்கினார்.இந்திய பாராளுமன்றத்தின் நிறுவனக் கட்டமைப்பு, அதன் நிர்வாகச் செயன்முறைகள் மற்றும் பாராளுமன்ற செயலகத்தின் பணிகள் தொடர்பில் இலங்கைத் தூதுக் குழுவினர் விரிவான அறிவைப் பெற்றுக் கொண்டனர். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் உறுப்பினர் சேவைகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட சேவைகள் தொடர்பிலும் இக்குழுவினருக்கு சிறந்த அனுபவப் பகிர்வு கிடைக்கப்பெற்றது.இந்த நிகழ்ச்சியின் போது பாராளுமன்றக் குழுக்களின் பங்கு, குழுச் செயலகங்களின் செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம், சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், இந்திய பாராளுமன்றத்தின் துறைசார் நிரந்தரக் குழு முறைமை, தலைமை தாங்கும் அதிகாரிகளின் வகிபாகம் மற்றும் அதிகாரங்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள், அத்துடன் பாராளுமன்ற செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.அத்துடன், இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், இந்தியப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி அலைவரிசையான ‘சன்ஸத் தொலைக்காட்சியின்’ தயாரிப்பு செயன்முறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவத்தைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது, லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு சபைகளின் பாராளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் நேரடி அனுபவத்தைப் பெற்றனர்.இலங்கைத் தூதுக் குழுவினர் பாராளுமன்ற நூலகக் கட்டடம், லோக் சபா மற்றும் ராஜ்ஜ சபாவின் சபாமண்டபங்கள் மற்றும் பாராளுமன்ற வளாகத்தின் முக்கியவாய்ந்த இடங்களையும் நேரடியாகப் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியானது இலங்கை மற்றும் இந்திய பாராளுமன்றங்களுக்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாக அமைந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks