04

E   |   සි   |  

2026-02-10

செய்தி வகைகள் : செய்திகள் 

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அரசியலமைப்பின் பிரிவு 153அ இன் கீழ், கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் பின்வரும் நியமனங்களுக்கு பொருத்தமான நபர்களை  அரசியலமைப்பு பேரவை, கௌரவ சனாதிபதிக்கு பரிந்துரைக்கும்: 

i.    பிரதி கணக்காய்வாளர் தலைமையதிபதியாக அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்த கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் ஒய்வு பெற்ற இரண்டு அலுவலர்கள்;

ii.    உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதி மன்றம் அல்லது இலங்கை மேல் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியொருவர்; அத்துடன் 

iii.    இலங்கை நிருவாக சேவையின் ஓய்வுபெற்ற வகுப்பு I அலுவலர்.

இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள்;

அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம்
அரசியலமைப்புப் பேரவை அலுவலகம்
இலங்கைப் பாராளுமன்றம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே

எனும் முகவரிக்கு, 2026 பெப்ரவரி 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். 

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ எனக் குறிப்பிட வேண்டும்.



தொடர்புடைய செய்திகள்

2026-03-30

சீனாவில் நடைபெற்ற ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் 2026 வருடாந்த மாநாட்டில் கௌரவ சபாநாயகர் பங்கேற்பு

பிராந்தியத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் தலைவர் கௌரவ பான்கீ - மூன் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்ஒத்துழைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியை வலியுறுத்தி சபாநாயகர் பிரதான மாநாட்டில் உரையாற்றினார்இலங்கை – சீனா உறவுகளையும், அபிவிருத்திக்கான ஒத்துழைப்பையும் வலுப்படுத்த சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் தலைவருடன் இருதரப்புக் கலந்துரையாடல்இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் 2026 மார்ச் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சீன மக்கள் குடியரசின் ஹைனான் மாகாணத்தில் நடைபெற்ற ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் (Boao Forum for Asia Annual Conference 2026) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.இந்தத் தூதுக் குழுவில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான ஜயலத் பெரேரா ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.2026 மார்ச் 25ஆம் திகதி கௌரவ சபாநாயகர், ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் தலைவர் கௌரவ பான்கீ - மூன் மற்றும் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜாங் ஜுன் அவர்களையும் சந்தித்தார். அதிகரித்து வரும் உலகளாவிய நிலையற்ற தன்மையின் இக்காலத்தில், ஆசியாவில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கு ஆசியாவிற்கான போவோ மன்றத்தின் முக்கியத்துவத்தை பான் கி-மூன் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். தற்போதைய சவால்களை எதிர்கொள்ள வலுவான அரசியல் தலைமை அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இலங்கையின் பிராந்தியப் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் தான் இலங்கைக்கு மேற்கொண்டமையை நினைவுகூர்ந்த பான் கி-மூன், மோதலுக்குப் பின்னர் அந்நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தையும் பாராட்டினார்.பிராந்தியம் மற்றும் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள சிக்கலான சவால்களை நிவர்த்தி செய்வதற்கு கலந்துரையாடல்கள், ஒத்துழைப்புக்கள் மற்றும் கொள்கை ரீதியிலான தலைமைத்துவங்களின் அவசியம் முக்கியமானது என்பதை கௌரவ சபாநாயகர் இங்கு வலியுறுத்தினார்.  போவோ மன்றம் மற்றும் அதன் நிறுவனர்களின் பயனுள்ள ஈடுபாட்டின் பங்கையும், அமைதி மற்றும் பன்முகத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதில் பான் கி-மூனின் உலகளாவிய தலைமைத்துவத்தையும் சபாநாயகர் பாராட்டினார். இலங்கையின் அனுபவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், ஒரு நிலையான மற்றும் செழிப்பான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் நல்லிணக்கம், அனைவரினதும் உள்ளடக்கம் மற்றும் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் மதிப்பை வலியுறுத்தினார். மேலும், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். காலநிலை மாற்றம் மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கு மேம்படுத்தப்பட்ட உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியத்தைச் சுடு்டிக்காட்டிய அவர், சமாதானமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கூட்டு நடவடிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்பு ஆகியவை இன்றியமையாதவை என்றும் வலியுறுத்தினார்.2026 மார்ச் 26 திகதி கௌரவ சபாநாயகர் அவர்கள், “பகிரப்பட்ட எதிர்காலத்தை வடிவமைத்தல் : புதிய போக்குகள், புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய கூட்டாண்மைகள்”  என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாட்டின் முதன்மை அமர்வில் உரையாற்றினார். புவிசார் அரசியல் சூழ்நிலைகள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, காலநிலை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் விரைவான முன்னேற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில், பன்முகத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.அனைவரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல், தொழில்நுட்பத்தின் அறநெறி சார்ந்த ஆளுகை, காலநிலை மாற்றம் தொடர்பில் விரைவான மாற்று நடவடிக்கைகள் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றின் அவசியத்தையும் சபாநாயகர் வலியுறுத்தினார். கூட்டாண்மை, புத்தாக்கம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் மூலம் உலகளாவிய முன்னேற்றத்தை வழிநடத்தும் ஒரு மையமாக ஆசியாவிற்கு குறிப்பிடத்தக்க ஆற்றல் உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கையில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களைக் குறிப்பிட்ட சபாநாயகர், பேரண்டப் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், வலுவான ஆளுகையை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் டிஜிட்டல் மற்றும் முதலீட்டுக்கு உகந்த பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றுலா, டிஜிட்டல் சேவைகள், சரக்குப் போக்குவரத்து மற்றும் மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்படுமாறு பிராந்தியப் பங்காளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் தலைவர் கௌரவ ஜாவோ லிஜி அவர்கள் பிரதான அமர்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கௌரவ சிங்கப்பூர் பிரதமர்  லோரன்ஸ் வோங், அஜர்பைஜான் தேசிய சட்டமன்றத்தின் கௌரவ சபாநாயகர் ஜாஹிபா கஃபரோவா  மற்றும் கஜகஸ்தானின்  கௌரவ முதல் துணைப் பிரதமர் ரோமன் ஸ்க்லியார் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.இந்த மாநாட்டிற்கு இணையாக, கௌரவ சபாநாயகர் அவர்கள், சீனாவின் தேசிய காங்கிரஸ் நிலைக் குழுவின் தலைவர் கௌரவ ஜாவோ லேஜி அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலையும் நடத்தினார். சபாநாயகராக சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகப்பூர்வ பயணம் இது என்பதைக் குறிப்பிட்ட சபாநாயகர், இது நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பட்டுப் பாதைத் திட்டத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் கலாசார பரிமாற்றங்கள் ஊடாக 2,000 வருடங்களுக்கு மேலான காலத்தில் நீண்டகால ஒத்துழைப்பு காணப்படுகின்றமையையும் சபாநாயகர் இங்கு நினைவுகூர்ந்தார். குறிப்பாக, தித்வா புயலுக்குப் பிறகு சீனா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார்.இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதால், இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளைப் பெறும் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக சீனா திகழ்கிறது என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். சீன நாட்டினருக்கான விசா இல்லாத அனுமதி இதற்கு சாதகமாகப் பங்களித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சீன தேசிய காங்கிரசின் நிலைக் குழுத் தலைவர் ஜாவோ லெஜி, இருதரப்புப் பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கை நாட்டினருக்கு விசா இல்லா முறைமை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.2001-ல் நிறுவப்பட்ட ஆசியாவுக்கான போவோ மன்றம் ஆசியா மற்றும் அதற்கப்பால் உள்ள அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் கல்வித்துறையினரிடையே உரையாடலுக்கான ஒரு உயர்மட்டத் தளத்தை வழங்கும் ஒரு அரசு சாரா மற்றும் இலாப நோக்கற்ற சர்வதேச அமைப்பாகும். பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய உலகமயமாக்கல் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் இந்த மன்றத்தின் 25-வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கிறது.ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் வருடாந்த மாநாடு, உலகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை ஒன்றிணைத்து, முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், வளர்ச்சிக்கான பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு முன்னணி தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


2026-03-23

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றி தீர்மானம்

ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடும்பாராளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் இத்தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைய 2026 ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.45 மணிவரை விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.அத்துடன், 2026.03.17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுதொகை சட்டமூலத்திற்கு அரசியலமைப்பின் உறுப்புரை 121 இன் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிட்டால் அன்றையதினம் விவாதத்திற்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பி.ப 4.45 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்தங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும். அத்துடன், பி.ப 5.30 மணிக்கு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை விவாதம் இன்றி அனுமதிக்கப்படும்.ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க விடுமுறை தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடாது.2026 ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.00 மணிவரை (357ஆம் அத்தியாயம்) தரைப்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (358ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (359ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.  அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் தீர்மானம் வெளியிடப்பட்டால் குறித்த விடயம் அன்றையதினம் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படும்.இதன் பின்னர் பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை  வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.


2026-03-20

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்தை சபாநாயகர் இன்று (மார்ச் 20) சான்றுரைப்படுத்தினார்.நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் மூலம் இலங்கைக்குள் பணக் கடன் வழங்கும் தொழிலையும், நுண்நிதித் தொழிலையும் ஒழுங்குபடுத்துவது மற்றும் மேற்பார்வை செய்வது வலுவான சட்ட ஏற்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு புதியதொரு ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பணக்கடன் வழங்கும் தொழிலினதும், நுண்நிதித் தொழிலினதும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும், 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்குமான ஏற்பாடுகள் இதன்மூலம் செய்யப்பட்டுள்ளன. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் முதலாவது வாசிப்பிற்காக 2025 நவம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026 மார்ச் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதற்கமைய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் 2026ஆம் ஆண்டு 09ஆம் இலக்க நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் சட்டமாக இன்றுமுதல் (20) அமுலுக்கு வருகின்றது.


2026-03-20

பாராளுமன்ற திறன் விருத்தி முயற்சிகள் குறித்து அமெரிக்கத் தூதுரகத்தின் அதிகாரிகள் கௌரவ சபாநாயகருடன் கலந்துரையாடல்

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (House Democracy Partnership / HDP) கீழ் இலங்கை பாராளுமன்றத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பயிற்சித் திட்டங்கள் குறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை கடந்த மார்ச் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.பாராளுமன்றத்தின் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட தொடர் பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் விருத்தி முயற்சிகள் குறித்து கௌரவ சபாநாயகருக்கு விளக்கமளிப்பது மற்றும் அவரின் ஒப்புதலைப் பெறுவது இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்தது. ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் அதிகாரிகள் குழுவினர் 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்தும் இங்கு நினைவுகூறப்பட்டது.  இக்குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், மேற்பார்வை மற்றும் பொது நிதி தொடர்பில் பாராளுமன்றத்திற்குக் காணப்படும் பொறுப்புக்களை சிறப்பாக மேற்கொள்வதற்கான திறனை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.இந்தச் சந்திப்புக்களின் அடிப்படையில் இலங்கைப் பாராளுமன்றத்திற்குப் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நிபுணர்கள் தலைமையிலான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசியல் பொருளாதார கென்சியூலர் அந்தோனி பிர்னோட், வரவுசெலவுத் திட்டம் மற்றும் நிதிக் கண்காணிப்பு தொடர்பான விடயங்கள், அரசாங்க  நிதி பற்றிய குழு  மற்றும் பாராளுமன்ற வரவுசெலவு அலுவலகத்துடன் இணைந்து, பாராளுமன்ற விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க வல்லுநர்களால் செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இலங்கை-அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் மூலம் இதற்கான வசதி செய்து கொடுப்பதன் மூலம், பாராளுமன்ற உறுப்பினர்களின் பரந்த பங்கேற்பை அடைய முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை மற்றும் அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு சபாநாயகர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், முன்மொழியப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் தனது ஆதரவையும் அவர் வெளிப்படுத்தினார். பாராளுமன்றம் சமீபத்தில் எடுத்துள்ள முற்போக்கான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய ஆகியவற்றின் பரிந்துரைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஊடாக சட்ட நடவடிக்கையை எடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளில் திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் எடுத்துக் கூறினார்.பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் திறனை மேம்படுத்துவதற்கு பாராளுமன்ற கல்வி மையமொன்றை நிறுவுவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டார்.இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். அத்துடன், அமெரிக்கத் தூதுரகத்தின் சார்பில் அரசியல் பொருளாதார கென்சியூலர்   அந்தோனி பிர்னோட், அரசியல் அதிகாரி அடம் மைக்கலோ மற்றும் அரசியல் நிபுணர் நஸ்ரின் மரிக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks