பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இரு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மற்றும் கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றை 17.02.2026ஆம் திகதி சான்றுரைப் படுத்தியிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (பெப். 18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
1972ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுபுநர்களுக்கு, கலன் செயற்படுத்ததப்படாப் பொதுக் காவுனர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்களுக்கு உரிமைமளித்தல் சட்டம் இதன்மூலம் திருத்தப்படுகின்றது.
இதற்கு அமைய, இதுவரை விசேட துறையாகக் கருதப்படும் கொள்கலம் செயற்படுத்துநர்கள் அச்சட்டவாக்கத்தின் ஏற்பாாடுகளின் ஏற்புடமையிலிருந்து நீக்கப்பட்டு, கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படுவர். எஞ்சிய கப்பல் சேவை வழங்குனர்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் ஒழுங்குறுத்தப்படுவர்.
கொள்கலன் செயற்படுத்துனர்களினதும் தற்போதைய உரிமங்களும், பரிசீலிக்கப்படும் விண்ணப்பங்களும் தானாகவே புதிய கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படுவதுடன், இத்துறையின் செயற்பாடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் தொடர்ச்சி உறுதிசெய்யப்படும்.
இதற்கு அமைய 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 05ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
அத்துடன், 05.02.2026 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம், இலங்கையில் கொள்கலன் தொழிற்படுத்துநர்களின் வணிகங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை வழங்குகின்றது. அவ்வாறான வணிகளில் ஈடுபடும் எந்தவொரு நபரும் வணிக கப்பல் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் செல்லுபடியாகும் உரிமைப்பத்திரத்தை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கின்றது.
இது 2026ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
பாராளுமன்ற விசேட குழுவிற்கு (கலாநிதி) உபாலி பன்னிலகே நியமனம்
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலக விலகியமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பாராளுமன்றத்தின் 109ஆவது நிலையியற் கட்டளைக்கு அமைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
2026-05-18
காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் (மே 14) நடைபெற்றது. காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அவர்கள், மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர்கள் தலைமைத்துவத்தில் மிகுந்த அனுபவத்தைப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார். நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவிருக்கும் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு நாட்டில் வீண் விரயத்தைக் குறைப்பது குறித்த புரிதல் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன், ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவிகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ, மாணவர் பருவத்திலிருந்தே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிகாட்டியதோடு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்தும் விளக்கமளித்தார்.இலங்கை பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா புலத்சிங்கள அவர்கள், பாராளுமன்றத்தின் வகிபாகம், அதன் அமைப்பு மற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து மாணவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வின் இறுதியில் காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் அதிபர் என்.ஜீ.ஆர்.சுமேதா காரியவசம் நன்றியுரை நிகழ்த்தினார்.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-14
பாராளுமன்றத்தை மே மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் மே மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.மே 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மே 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.மே 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2481/02, 2482/08 மற்றும் 2482/12 ஆகிய இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் (2026.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட பாராளுமன்றத்தின் 3ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான 11ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளக்கப்பட்டுள்ளன) என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மே 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.ஜீ.முதுகுமாரண, சந்திரதாஸ கலப்பதி, நந்தன குணதிலக, ஜனக் மஹேந்திர அதிகாரி மற்றும் கனகசபை தம்மன்பிள்ளை ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை என்பன எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-05-14
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அஞ்சல் வசதிகளுக்கான புதிய முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இங்கு ரூ. 20 மற்றும் ரூ. 70 பெறுமதியான புதிய முத்திரைகள் வெளியிடப்பட்டன.இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் இந்த முத்திரைகள் வெளியிடப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பலதரப்பட்ட அஞ்சல் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர ஆகியோரும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, அஞ்சல்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார, பிரதி தபால்மா அதிபர் (செயற்பாடு) எச்.எம்.பிரேமச்சந்திர ஹேரத், முத்திரை பணியகத்தின் பணிப்பாளர் எல்.ஜி.என்.த சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-05-13
கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இந்நிகழ்வில், ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் பிலியந்தலை வலயக் கல்விப் பணிப்பாளர் குமுது ஹேமமாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இங்கு உரையாற்றிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர குறிப்பிடுகையில், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக அவர்கள் மத்தியில் நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி அதன் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். மாணவர் பாராளுமன்ற முறைமையானது எதிர்காலத்தில் சுறுசுறுப்பான அரசியல் தலைவர்களை உருவாக்குவதற்கு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், மாணவர் பருவத்தில் படைப்பாற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் குழுக்களின் பிரதித் தவிசாளர் தனது உரையில் வலியுறுத்தினார். மேலும், இலங்கை பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.ஆர்.ஹேரத் அவர்கள் பாராளுமன்றத்தின் வகிபாகம், அதன் அமைப்பு மற்றும் பாராளுமன்றத்தின் பணிகள் முன்னெடுக்கப்படும் முறைமை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியின் நிறைவாக கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் அதிபர் எம்.கே.கே.எம். பெர்னாண்டோ நன்றியுரையாற்றியதுடன், மாணவர்களின் எதிர்காலத்திற்காக இலங்கைப் பாராளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தொடர் நிகழ்ச்சிகளுக்கான பாராட்டுக்களைத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks