2025-09-12
செய்தி வகைகள் : செய்திகள்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) 2025 நவம்பர் 07ஆம் திகதி நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் இன்று (செப். 11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று (11) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக செப்டெம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 2025 நவம்பர் 7ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டுக்காக (வரவுசெலவுத்திட்ட உரை) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 8ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை 6 நாட்கள் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய நவம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் மு.ப 9.30 மணிக்கும், ஏனைய நாட்களில் மு.ப 9.00 மணிக்கும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய இக்காலப் பகுதியில் நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு மேலதிகமாக வாய்மூல விடைக்கான ஐந்து கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்வி ஒன்றுக்காகவும் நேரத்தை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் பி.ப 6.00 மணிவரையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்துவதற்கும், வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் பி.ப 6.00 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதியை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 50:50 என்ற அடிப்படையில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகளுக்காக ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2026-04-29
கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் (ஏப். 27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே, பாராளுமன்றத்தின் ஹன்சாட் பதிப்பாசிரியர் நயனி லொக்குகொடிகார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கு அமைய கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்திற்குப் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ சபாநாயகர், பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இவ்வாறு சின்னம் அணிவிக்கப்பட்டதுடன், சான்றிதழ்களும் கையளிக்கப்பட்டன.இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே நாட்டில் சட்டத்தை சமமாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் ஜனாதிபதி நியத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், ஹன்சாட் பதிப்பாசிரியர் நயனி லொக்குகொடிகார, மாணவர் பாராளுமன்றத்தின் மதிப்பு குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்ததோடு, நாட்டில் அரசியல் அறிவை மேம்படுத்துவதில் மாணவர் பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள், கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் அதிபர், பிரதியதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
2026-04-28
பாராளுமன்றம் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடும் – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்வியட்னாம் நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு டோ லாம் அவர்கள் எதிர்வரும் மே 08ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதாகவும், இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (ஏப். 27) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடவுள்ளது.2026 மே 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள் (2471/52, 2471/53, 2471/54, 2471/55 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2475/28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) என்பன விவாதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படவுள்ளன. பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக (எதிர்க்கட்சி) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மே 6ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நுரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மே 7ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மு.ப 11.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2471/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது), (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2470/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) மற்றும் (351ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2026.05.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது) என்பவற்றை விவாதத்திற்கு எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சுவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பன தொடர்பான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மே 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.05 மணியளவில் வியட்னாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதிமேதகு டோ லாம் அவர்கள் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்றையதினம் பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை கீழ்வரும் 07 தனியார் பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்தனியார் உறுப்பினர் பிரேரணைஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்கள்தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்.சமிந்த விஜேசிறி அவர்கள்வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்.ரவி கருணாநாயக்க அவர்கள்புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்.லால் பிரேமநாத் அவர்கள்அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.ரோஹண பண்டார அவர்கள்பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்.நலின் பண்டார ஜயமஹ அவர்கள்பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்.ரவீந்திர பண்டார அவர்கள்பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்.
2026-04-23
இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனர் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் (Nayyar Naseer), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (ஏப். 21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் சுனைரா லதீஃப் (Zunaira Latif) மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.கலாசார பாரம்பரியம் மற்றும் நட்பு நிறைந்த இலங்கை போன்றதொரு நாட்டில் உயர்ஸ்தானிகராகப் பணியாற்ற முதல் தடவையாகக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சியடைவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவிவரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் பயனுள்ள நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் தாம் உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கை சந்தித்த ஒவ்வொரு நெருக்கடியான காலகட்டத்திலும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் வழங்கி வந்த தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு நன்றியைத் தெரிவித்தார். யுத்த சூழல் முதல் தித்வா சூறாவளித் தாக்கம் வரையில் நாடு எதிர்கொண்ட பல்வேறு சவால்களின்போது, பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை உண்மையான நட்பின் வெளிப்பாடாகும் என்பதையும் சபாநாயகர் நினைவுகூர்ந்தார்.தற்போதைய சர்வதேச சூழலில் உலக நல்லிணக்கத்தை உருவாக்குவதில், பாகிஸ்தான் ஒரு செயல்திறன் மிக்க மத்தியஸ்தராக ஆற்றிவரும் முக்கிய வகிபாகத்தை கௌரவ சபாநாயகர் இங்கு பாராட்டினார். மேலும், இலங்கை-பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் நிறுவப்பட்டது, இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது அவர் வலியுறுத்தினார்.மேலும், பண்டைய காந்தாரத்தைச் சேர்ந்த கலைப்படைப்பான பாகிஸ்தானின் லாகூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலையை (Fasting Buddha Statue) இலங்கையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கௌரவ சபாநாயகர் அவர்கள் இங்கு முன்வைத்தார். இதன் மூலம் குறித்த சிலையை இலங்கை பக்தர்கள் தரிசிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.அழகான இயற்கைச் சூழலையும், விருந்தோம்பல் குணம் கொண்ட மக்களையும் கொண்டுள்ள இலங்கை, சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் துறையில் தனது அனுபவத்தையும் அறிவையும் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உதவித்தொகை பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்ளும் திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், சபை முதல்வர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.“தித்வா" சூறாவளித் தாக்கத்தின் பின்னர் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற தமது அனுபவத்தை நினைவு கூர்ந்த அமைச்சர், நாட்டில் முன்மொழியப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பில் இரு நாடுகளிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடைமுறை நடவடிக்கைகள், அத்துடன் பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான அனுபவப் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
2026-04-23
இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்துடனும் தூதுக் குழுவினர் கலந்துரையாடல்பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் கௌவர சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (ஏப். 21) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது.இந்தத் தூதுக் குழுவில் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் வலினா பௌலி ககன் (Ms. Vanina Paoli-Gagin), குறித்த சங்கத்தின் பிரதித் தலைவர் டிடியர் மெரி (Mr. Didier Marie), செனட்டர் லோரன்ஸ் முலர் ப்ரோன் (Ms. Laurence Muller-Bronn) ஆகியோருடன், பல்வேறு அதிகாரிகளும் உள்ளடங்கியிருந்தனர்.தூதுக்குழுவினரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், கடந்த எழுபது ஆண்டுகளாக பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் நீடித்துவரும் இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்தார். பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் வகிபாகத்தை அவர் வலியுறுத்தினார். தித்வா புயல் தாக்கத்திற்குப் பின்னர் பிரான்ஸ் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட சபாநாயகர், புயலுக்குப் பிந்தைய சூழ்நிலையையும், தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியால் எழும் சவால்களையும் அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாண்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ரீதியான உறவுகளை எடுத்துரைத்த சபாநாயகர், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பிரான்ஸ் முக்கிய சந்தையாகத் தொடர்ந்தும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் முறைப்பாடுகளைக் காண்காணிப்பதற்கான வலுவான திட்டங்கள் மூலம் வசதிவாய்ப்புக்களை அதிகரிக்கும் அதேநேரம், சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பை இலங்கை தொடர்ந்தும் உறுதிசெய்து வருவதாக அவர் தெரிவித்தார். எயார் பிரான்ஸ் நிறுவனத்துடனான தொடர்புகளை மேம்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையில் வான் வழியான இணைப்பை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு அடையாளம் காணப்பட்டது.GSP+ சலுகை மூலம் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பை பாராட்டிய சபாநாயகர், மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நிலையான வர்த்தக வாய்ப்புகள் மூலம் இலங்கையின் தொழில்துறைகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் அதிகரித்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.இலங்கையில் தமக்கு வழங்கிய சிறப்பான உபசாரத்திற்கு பாராட்டைத் தெரிவித்த வலினா பௌலி ககன், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவதில் பிரான்ஸ் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தமது இலங்கை விஜயத்தின் போது நடத்தவுள்ள சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நீர் சுத்திகரிப்புத் திட்டம், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுதல் மற்றும் ஆடைத் தொழில்துறைக்கு ஆதரவளிப்பதில் காணப்படும் ஆர்வம் உள்ளிட்ட விடயங்களையும் இத்தூதுக் குழுவினர் வெளிப்படுத்தினர். பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மைகளைத் தொடர வேண்டும் என்ற தங்கள் நோக்கத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.அதேநேரம், பிரான்ஸ் தூதுக் குழுவினர் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினர். இந்தச் சந்திப்பிற்கு குறித்த சங்கத்தின் தலைவரும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார கௌரவ அமைச்சருமான சரோஜா போல்ராஜ் மற்றும் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் வலினா பௌலி ககன் ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர்.இந்தக் கலந்துரையாடலில் பொருளாதார ஈடுபாடு, நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் சமூகக் கொள்கை உள்ளிட்ட பரந்த அளவிலான ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் பற்றி ஆராயப்பட்டது.இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கு பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு கௌரவ அமைச்சர் போல்ராஜ் அவர்கள் நன்றி தெரிவித்தார். பாலின சமத்துவம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகக் கொள்கைகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை அவர் எடுத்துரைத்ததோடு, இத்துறைகளில் இரு நாடுகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டினார்.வர்த்தகம், முதலீடு, கல்வி, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் போன்ற முக்கியத் துறைகளில் பிரான்சுடனான உறவை வலுப்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மேலும் வலியுறுத்தியதோடு, இருதரப்பு மற்றும் உலகளாவிய மட்டங்களில் இந்தப் கூட்டாண்மையின் வலுவான ஆற்றலையும் சுட்டிக்காட்டினார்.இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் லால் பிரேமநாத், ஹெக்டர் அப்புஹாமி, தனுர திசாநாயக்க மற்றும் தர்மபிரிய திசாநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.இதனைத் தொடர்ந்து கௌரவ சபாநாயகர் மற்றும் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற மதியபோசன விருந்துபசாரத்திலும் பிரான்ஸ் தூதுக் குழுவினர் பங்கேற்றதுடன், பாராளுமன்றத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கௌரவ ரெமி லம்பெர்ட் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் இந்தச் சந்திப்புக்களில் கலந்துகொண்டனர்.