2025-09-02
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள ஐந்து நிறுவனங்களின் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பிரதியமைச்சர் சதுர அபேசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதற்கு அமைய, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை ஏற்றுதி அபிவிருத்தி சபையின் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, பி.சி.சி இலங்கை லிமிடட் நிறுவனத்தின் 2021/2022 மற்றும் 2022/2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, தேசிய உப்பு நிறுவனத்தின் 2021/2022 மற்றும் 2022/2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை போன்றவை இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டன.
இக்குழுக் கூட்டத்தில் நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட முறைகளின் படி முதலீட்டாளர்களுக்குக் காணிகளை வழங்குவதில் பல சிக்கல்கள் காணப்படுவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இதற்கு அமைய, புதிய தொழில்களுக்கு ஒரு முதலீட்டாளருக்குக் காணிகளை வழங்க 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச கருத்துக்களின்படி, ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 3% பொதுவாக தொழில்துறைகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 0.01% என்ற விகிதத்திலேயே காணப்படுவதாக செயலாளர் கூறினார்.
இதற்கு முன்னர் காணப்பட்ட தேசிய கொள்கைத்திட்டத்திற்கு அமைய கைத்தொழில்களுக்கு ஏற்ற காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமல், அரசியல் அல்லது வேறு காரணங்களால் பல்வேறு சிக்கல் நிறைந்த சூழ்நிலைகள் எழுந்துள்ளது என்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எனவே, நாடு முழுவதிலும் உள்ள கைத்தொழில்களுக்கு ஏற்ற வகையில் 50,000 ஏக்கர் காணிகளை ஒதுக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்கு அமைய, இது தொடர்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி விரைவில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபணரங்கள் அதிகாரசபையின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் அதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. எதிர்காலத்தில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவனம் ஆகியவற்றை ஒன்நிணைக்கத் தீர்மானித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தற்போதைய செயல்திறன் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் ஏற்றுமதியை அபிவிருத்தி செய்து அதனை மேம்படுத்துவதற்காக உள்ள ஒரேயொரு நிறுவனம் இது என்றும், ஆடைகள், தேயிலை, ரப்பர், வாசனைத் திரவியங்கள், தகவல் தொழில்நுட்பம், இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதிகள் குறித்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கைக் கொண்ட அமெரிக்காவின் வரிக் கொள்கையை முறையாக நிர்வகிப்பதன் மூலம் நிலைமையை சமாளிக்க முடிந்திருப்பது ஒரு பெரிய சாதனை என்றும், 2023 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 15 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2028 ஆம் ஆண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் இலக்குடன் செயற்பட்டு வருவதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய உப்பு நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் அதிக செயல்திறனுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காலநிலை மாற்றத்தால், கடந்த காலங்களில் இயற்கை உப்பு உற்பத்தியில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, ஆனையிறவு பகுதியில் இயற்கை செயல்முறைக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கையாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பு உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இந்த ஆண்டுக்கான தேசிய உப்பு நிறுவனத்தினால் இலக்கு வைக்கப்பட்ட வருமானம் ரூபா 1 பில்லியன் என்றும், இது கடந்த ஆண்டை விட 50% அதிகரிப்பாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், பி.சி.சி லங்கா லிமிடட் நிறுவனம் உயர் மட்டத்திலான தேங்காய் எண்ணெய்களை உற்பத்தி செய்துவரும் நிறுவனம் என்பதுடன், 192 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த நிறுவனத்திற்கு தரச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படவில்லையென அதன் தற்போதைய தலைவர் குழுவில் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலையால் பல ஏற்றுமதி வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, SLS மற்றும் ISO உள்ளிட்ட தரச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அவசர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இக்குழுக் கூட்டத்தில் அதன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சட்டத்தரணி சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, கந்தசாமி பிரபு, விஜேசிரி பஸ்நாயக்க, சுரங்க ரத்நாயக்க, திலிண சமரகோன் ஆகியோரும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-08-18
உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
2026-08-18
கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 16) நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் செயலமர்வுகளின் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரிஎல்லே, எஸ். எம். மரிக்கார், லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.இளைஞர் சமூகத்தினர் கல்வி மற்றும் உயர் கல்வி, அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் நடவடிக்கைகள், இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இளைஞர்களின் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் எதிர்கால பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது தொடர்பில் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஆவணப்படுத்தி, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திடம் திறந்த இளைஞர் அறிக்கையாளர்கள் (Youth Rapporteurs) நியமிக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் மேற்கொண்டிருந்ததுடன், இதற்கான நிதியுதவியை தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) வழங்கியிருந்தது.
2026-08-11
இலங்கையில் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனுடனும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த மேற்பார்வைக் குழுவில், காணித் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, அரச காணிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பொன்றின் ஊடாக வலையமைப்பில் இணைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரச காணிகளின் உரிமை, எல்லை நிர்ணயம் மற்றும் தொடர்புடைய தகவல்களை ஒரே தரவுக் கட்டமைப்பின் கீழ் பேணுவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமறைப்படுத்த முடியும் எனவும், GPS ஆயத்தொலைவுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் காணித் தரவுக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் காணப்படும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காணி முகாமைத்துவத் துறையில் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் தரவுக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் மேலும் அதிகரிக்க முடியும் என குழு வலியுறுத்தியது.அத்துடன், 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களின் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகளைப் போக்குவரத்து செய்வதையும் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கும், விலங்குகளின் போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால் மற்றும் வாய் நோய் போன்ற விலங்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்மொழிவொன்றும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் தனியார் காணி வரைபடங்களை இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் வைப்பது, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, ரொஷான் அக்மீமன, சுசந்த குமார நவரத்ன, கிட்டினன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் ருவன்திலக ஜயகொடி ஆகியோரும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-08-11
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் நிதி முகாமைத்துவம், நிறுவன ஆளுகை, உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு, டிஜிட்டல் கட்டமைப்புகளின் முகாமைத்துவம், ஒழுக்காற்று விசாரணைகள், வெளிநாட்டு கல்வி விடுமுறையைப் பெற்றுக்கொண்ட விரிவுரையாளர்களின் பிணை ஒப்பந்தங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பேராதனைப் பல்கலைக்கழகம் உள்நாட்டு தரவரிசையில் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், உலகளாவிய தரவரிசையில் பின்னடைவை எதிர்கொள்வதாகக் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இது பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்ததன் காரணமாக ஏற்பட்ட நிலைமையல்ல என்றும், சர்வதேச போட்டித்தன்மை அதிகரித்துள்ளதன் காரணமாக ஏற்பட்ட நிலைமையாகும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தரவு முகாமைத்துவம் தொடர்பிலும் குழு விசேட கவனம் செலுத்தியது. ERP கட்டமைப்பின் நிலையான சொத்துக்கள் குறித்த மொடியுலை நடைமுறைப்படுத்தும்போது சேவை வளங்குனரின் திறன் போதுமானதாக இல்லாமை, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை, தனியார் துறையுடன் ஒப்பிடுகையில் நிலவும் சம்பள வேறுபாடுகள் காரணமாக திறமையான தொழில்நுட்ப அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் காணப்படும் சிரமம், கட்டமைப்புகளைப் புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாத மென்பொருள் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நிரந்தரமானதும் நிபுணத்துவம் வாய்ந்ததுமான தொழில்நுட்பக் குழுவொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பிலும் குழு கடுமையான கவனம் செலுத்தியதுடன், சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாமல் இருப்பது மற்றும் சட்டரீதியான, நிர்வாகரீதியான தாமதங்கள் காரணமாக நிறுவனத்திற்கு நிதி மற்றும் நிர்வாக ரீதியில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்தது.வெளிநாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத விரிவுரையாளர்கள் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. இதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பில் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 201 மில்லியன் ரூபாய் தொகையை மீளப் பெற்றுக்கொள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முடிந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்தப் பிரச்சினையை தனியொரு பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரம் தீர்க்க முடியாத காரணத்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு அனைத்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் வகையில் தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், பிணை ஒப்பந்தங்களை மீறிய விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி, அவர்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையவழி ஊடாக இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் பங்களிக்கச் செய்வது போன்ற மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.இறுதியாக, பல்கலைக்கழகத்தின் ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேலும் வலுப்படுத்துவதற்காக, கணக்காய்வு பரிந்துரைகள் மற்றும் குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும் கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டிஆரச்சி, தினேஷ் ஹேமந்த, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷண எகொட விதான, எம். கே. எம். அஸ்லம் மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.