02

E   |   සි   |  

2025-03-08

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மதுவரியை உயர்த்துவது தொடர்பான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

  • சிகரெட் தொடர்பில் உற்பத்தி வரியை உயர்த்துவதற்கு எடுத்த நடவடிக்கையை நியாயப்படுத்தவும் – குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
  • மூன்றாம் தரப்பு காப்புறுதி (3rd Party) ஊடாக சம்பந்தப்பட்ட காப்புறுதித் தொகையைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தவும் –அதிகாரிகளுக்குக் குழு அறிவுரை


மதுவரியை உயர்த்துவதற்கு நிதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (மார்ச் 06) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 22ஆம் பிரிவின் கீழ் 2025/01 மதுவரி அறிவிப்பு, 1988ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் கட்டளை,  2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் 112ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதி என்பன இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.

இதற்கமைய, 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழான கட்டளை மற்றும் (52வது அத்தியாயம்) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான 2025/01 மதுவரி அறிவிப்பு என்பனவும் குழுவில் கவனத்தில் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழான கட்டளையின் ஊடாக மோட்டார் வாகனம், சிகரெட், குளிர்பானம் மற்றும் புகையிலை உள்ளிட்ட ரூபாவின் பெறுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தி வரியின் கீழ் சகல பொருட்களுக்கான உற்பத்தி வரியை 5.9% அதிகரிப்பதற்கு இடமளிக்கின்றது என்றனர். மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 22ஆம் பிரிவின் கீழ் 2025/01 மதுவரி அறிவிப்பு கீழ் மதுபானங்கள் மீதான மதுவரியை 5.9% இனால் அதிகரிக்க அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், உரிய தரவுகள் இல்லாமல் சிகரெட்டுகள் மீதான உற்பத்தி வரி அதிகரிக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது என்றும், சிகரெட்டுகள் மீதான உற்பத்தி வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிகரெட்டுக்களுக்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் நடத்தப்பட்ட மதிப்பாய்வுகளுக்கு அமைய, வரி அதிகரிப்பினால் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்காது என்றும், நிறுவனத்திற்குக் கிடைக்கும் வருமானமே அதிகரிக்கும் என்றும் கூறினார். இதற்கமைய, இந்த வரி அதிகரிப்பினால் அரசாங்கம் எவ்வாறு பயனடையும் என்பது குறித்த நியாயப்படுத்தல்களை அதிகாரிகள் குழுவுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசாங்க நிதி பற்றிய குழுவின் அடுத்த கூட்டத்தில் நிதி அமைச்சின் அதிகாரிகள் இது குறித்த விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும், 1988ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் கட்டளையை அன்றையதினம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவும் குழு தீர்மானித்தது.

மேலும், (52வது அத்தியாயம்) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான 2025/01 மதுவரி அறிவிப்பின் மூலம் மதுபானங்கள் மீதான மதுவரியை அதிகரிக்கும் முன்மொழிவு குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் கௌரவ உறுப்பினர்கள், இந்த வரி அதிகரிப்பின் மூலம் தனிநபர்கள் சட்டவிரோத மதுபானங்களைப் பயன்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் வாய்ப்புள்ளது என்பதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், சட்டவிரோத மதுபான உற்பத்தியைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்கள் மற்றும் சோதனைகள் முறையாக நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர். இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில், நாட்டில் மதுபான உற்பத்தி 22% அதிகரித்திருப்பதுடன் வருமானம் 23% அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் புதிய வகை மதுபானத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் 112ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதி என்பனவும் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதன் ஊடாக  இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அதிகரித்த செலவுகளை ஈடுசெய்ய தவணைக் கட்டனத்தை காப்புறுதி நிறுவனங்களின் தலா எழுத்துமூல கட்டணத்தை 0.125% இலிருந்து 0.2% ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்ற உண்மையைத் தலைவர் குழுவில் முன்வைத்தார். MBSL நிதி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் தொடர்பாக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கில் நடந்துகொண்டமை தொடர்பில் குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த நிறுவனத்தின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து குழுவிற்குத் தெரிவிக்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மூன்றாம் தரப்பு காப்புறுதித்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட ஈட்டுத்தொகையைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.  மூன்றாம் தரப்பு காப்புறுதித் திட்டத்தைக் கொண்டவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் அதற்கான ஈட்டுத்தொகையை எளிதாகப் பெறும் வகையில் விதிமுறைகள் வகுக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தப்பட்டது. நாட்டில் காப்புறுதியை ஒரு தொழிலாக வளர்ப்பதற்கு, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு எதிர்காலத்திற்கான திட்டத்தைத் தயாரித்து முன்வைக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

காப்புறுதி நிறுவனங்களில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை வங்கிகளின் ஊடாக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தலைவர் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இது தொடர்பில் போதியளவு காலத்தைப் பெற்று சம்பந்தப்பட்ட கைத்தொழில் நிறுவனத்துடன் கலந்துரையாடி ஒழுங்குவிதிகளைத் தயாரிக்குமாறு இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

சூதாட்ட வரி குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பௌதீக ரீதியாகக் காணப்படும் சூதாட்ட விடுதிகளில் வரி அறவிடப்பட்டாலும், அதிக எண்ணிக்கையான சூதாட்ட வணிகங்கள் ஒன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுவதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அதன்படி, ஒன்லைன் சூதாட்ட வணிகங்கள் மூலம் எவ்வித வரியும் வசூலிக்கப்படவில்லை என்பதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். இதற்காக சூதாட்ட அதிகாரசபையை நிறுவுவதற்கு இந்தக் குழு பல ஆண்டுகளாக முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்ட தலைவர், இதற்கான  சட்டமூலத்தை விரைவில் பூர்த்தி செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிப்பதாகவும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும, சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-10-02

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 29) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.குறிந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும், நிதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.ஆணைக்குழுவின் வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை அங்கீகரித்தல், நிதி மற்றும் செயற்பாட்டு சுயாதீனம், நிதியக் கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31ஆம் பிரிவின்படி, ஆணைக்குழுவின் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் நிதி அமைச்சின் ஊடாக அல்லாமல் நேரடியாக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளைப் பெற்றுக்கொண்டு சபாநாயகர், 10 நாட்களுக்குள் அதனைப் பாராளுமன்றத்திற்கு (அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், பாராளுமன்றத்தினால் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்படும் திருத்தங்களுடன், தேசிய வரவு செலவுத் திட்ட ஆவணத்தில்/ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்காக நிதி அமைச்சரிடம் அது அனுப்பி வைக்கப்படும்.2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் நிதி அமைச்சரின் அவதானிப்புகளுடன் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு செப்டெம்பர் மாதம் வரை காலதாமதம் ஏற்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதனால் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் கால அட்டவணைக்கு பாதிப்பு ஏற்படுவதால், எதிர்வரும் ஆண்டுகளில் வரவு செலவுத் திட்டச் செயன்முறையை உரிய காலத்திற்குள் முன்னெடுப்பதற்காக, ஆணைக்குழுவின் மதிப்பீடுகளை மே 30ஆம் திகதிக்குள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டின் திறைசேரி சுற்றறிக்கையொன்றினால் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வாகனங்களை கொள்வனவு செய்தல்/குத்தகைக்கு எடுத்தல், பிராந்திய அலுவலகங்களுக்காக கட்டடங்களை வாடகைக்கு எடுத்தல் மற்றும் கடமைத் தேவைகளின் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.குறித்த நடவடிக்கைகளுக்காக நிதி அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதன் மூலம் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.ஆணைக்குழுவின் நிதியத்தின் தன்மை மற்றும் அதன் பயன்பாடு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கென தனியான நிதியம் நிறுவப்பட்டுள்ளமை மற்றும் ஒருங்கிணைந்த நிதியம் மற்றும் ஆணைக்குழுவின் பொதுநிதியத்தின் ஊடாக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வழங்கப்பட வேண்டும் என குழுவின் தவிசாளர் இந்தக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் குழுவினால் விசாரிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடனான கடப்பாடுகள் மற்றும் நாட்டின் ஊழல் எதிர்ப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.இதற்கமைய, ஆணைக்குழுவிற்காக 971 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2026 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் 23 பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக தற்போது காணப்படும் அரசாங்கக் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அவற்றில் சில கட்டடங்களைப் புனரமைத்து பயன்படுத்துவதற்கும், ஏனைய கட்டடங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.மேலும், ஜப்பான் அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் கீழ், பிராந்திய அலுவலகங்களுக்குத் தேவையான கணினிகள் மற்றும் நிழற்படப் பிரதியெடுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட 109 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திசாநாயக்க தெரிவித்தார்.அத்துடன், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியவர்களில் சுமார் 34,000 பேர் தாமதக் கட்டணங்களை அறவிடுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தச் செயன்முறையின் மூலம் பெறப்படும் அபராதத் தொகைகள் ஆணைக்குழுவின் நிதியத்திற்கு வரவு வைக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.ஆணைக்குழுவின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. முன்னதாக குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக, ஆணைக்குழுவின் தவிசாளரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தவிசாளரின் (President of the Court of Appeal) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு சமமானதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.குழு உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோர் இணையவழித் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கூட்டத்தில் இணைந்துகொண்டனர்.


2026-10-02

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்  ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்  நஜித் இந்திக அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 30) பாராளுமன்றத்தில் கூடியபோதே குறித்த சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இலத்திரனியல் முறையில் சமர்ப்பித்தல் மற்றும் அதற்கான பொதுமக்களின் அணுகல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மேலும், சட்டத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக உள்ள தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்களைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதைத் தொடர்ந்து, ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலத்திற்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.


2026-10-02

பரீட்சைகள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் தொடர்பில் கோபா குழுவின் கவனம் செலுத்தப்பட்டது

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) முன்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கடந்த செப். 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தியது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் செயன்முறையின் வினைத்திறனை மேம்படுத்துதல், வினாத்தாள் மதிப்பீட்டுச் செயன்முறை, உள்ளக மற்றும் வெளிப்புற பரீட்சார்த்திகளை ஈடுபடுத்துதல் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளின் இரகசியத்தன்மையைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளுக்குத் தேவையான இடவசதிகள், தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அச்சிடும் வசதிகள், பரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள் மற்றும் கட்டணங்களைத் திருத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துதல் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிடுவதற்காக புதிய OMR/OCR முறைமையை அறிமுகப்படுத்துதல், தனியான மதிப்பீட்டு நிலையமொன்றை நிறுவுதல் மற்றும் நிறுவன ரீதியான பரீட்சைகளை வினைத்திறனுடன் நடத்துதல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர்.இதற்கு மேலதிகமாக, பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களின் பாட அறிவு மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.பரீட்சைகள் திணைக்களத்தின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக முன்னதாக வழங்கப்பட்ட பரிந்துரைகளைத் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு வலியுறுத்தியது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அத்தாவுத, டி. கே. ஜயசுந்தர, லால் பிரேமநாத், சுசந்த குமார நவரத்ன, ஓஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி மற்றும் சுனில் ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-10-02

வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரணை நடத்தி முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தல்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குக் காரணமான விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணையை நடத்தி, அந்தத் தாமதம் எவ்வாறு ஆரம்பமானது, அதற்குப் பாதிப்பை ஏற்படுத்திய நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணிகள், அத்துடன் தொடர்புடைய கேள்விப்பத்திர மற்றும் கொள்முதல் செயன்முறை தொடர்பான முழுமையான அறிக்கையை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் காரணங்களை கேட்டறிந்த குழு, அதற்கான காரணங்கள், தாமதம் ஆரம்பமான சந்தர்ப்பம், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய கேள்விப்பத்திர மற்றும் கொள்முதல் செயன்முறை குறித்து விரிவான அறிக்கையொன்றைத் தயாரித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. 2026 மார்ச் 10ஆம் திகதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தற்போது அச்சிடுவதற்காக நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை சுமார் 678,000 ஆக உள்ளதுடன், நாளொன்றுக்கு சுமார் 4,600 அனுமதிப்பத்திரங்களை மட்டுமே அச்சிடக்கூடிய நிலையில் இருப்பதால், நிலுவை மேலும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் இரண்டு புதிய அச்சு இயந்திரங்களை நிறுவி, நாளாந்த அச்சிடும் திறனை 8,200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.பொதுமக்களுக்குத் திறமையான சேவையை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான தாமதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. திணைக்களத்தின் நிர்வாகத் திறன், அதில் காணப்படும் வெற்றிடங்கள், கொள்முதல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் பொதுச் சேவைகளை வழங்கும்போது ஏற்படும் தேவையற்ற தாமதங்களைத் தடுப்பது தொடர்பிலும் குழு விசாரித்தது.இதனிடையே, வலுசக்தி அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கூரை மீது பொருத்தப்படும் சூரியப்படலங்கள்  மற்றும் உப மின் நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட மின்கல மின்சக்தி சேமிப்பு அமைப்புகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. சூரிய மின்சக்தி உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களினால் மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் அதிர்வெண் கட்டுப்பாடு தொடர்பில் எழும் தொழில்நுட்ப சவால்கள் குறித்தும், பகல் நேரத்தில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவதன் காரணமாக ஏற்படக்கூடிய எதிர்திசை மின்சக்திப் பாய்வு நிலைமையை நிர்வகிப்பதற்கு மின்கல மின்சக்தி சேமிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.நுகர்வோர் மட்டத்தில் மின்சாரப் பயன்பாடு மற்றும் உற்பத்தியை திறம்பட நிர்வகிப்பதற்காக சுமார் 400,000 ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 180 அலகுகளுக்கும் அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. கொழும்பு மற்றும் கோட்டே போன்ற பகுதிகளில் விநியோக மின்மாற்றிகளின் திறன் வரம்புகள் காரணமாக சூரிய மின்சக்தி அமைப்புகளை விரிவுபடுத்துவதில் காணப்படும் தடைகளை நீக்குவதற்காக, மின்மாற்றி மட்டத்தில் சிறிய அளவிலான மின்கல அமைப்புகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மின்கல அமைப்புகளுக்கான தற்போதைய வரிக் கொள்கையின் கீழ், ஒரு மெகாவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட அமைப்புகளுக்கு இறக்குமதி வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், வீட்டு மற்றும் சிறிய வர்த்தக மட்டத்திலான அமைப்புகளுக்கு அதிக வரிகள் விதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது. எனவே, சிறிய அளவிலான மின்கல அமைப்புகளுக்கும் வரிச் சலுகைகளை வழங்குவது அல்லது வரிகளைக் குறைப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், மின்கல தொழில்நுட்பம் தொடர்பில் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மட்டங்களில் பயிற்சி பாடநெறிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக சூரிய, காற்றாலை மற்றும் நீர்மின்சாரம் போன்ற குறைந்த செலவிலான மின்சார உற்பத்தி முறைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, மஞ்சுல சுரவீர ஆராச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, தனுஷ்க ரங்கநாத், அசித நிரோஷண எகொட விதான, ஜகத் விதான, சாந்த பத்ம குமார சுபசிங்க மற்றும் சட்டத்தரணி கீதா ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks