பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-16
செய்தி வகைகள் : குழு செய்திகள்
தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.
தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களைக் குறைப்பது, நிர்வாக செயற்திறனை மேம்படுத்துவது மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜித் இந்திக தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.இக்கூட்டத்தில் சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களைப் நிரப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் கைதிகளை திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரசாங்க இரசாயணப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதத்தை குறைப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு சுட்டிக்காட்டியது.அத்துடன், நீதிமன்றம், ஸ்ரீலங்கா பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் பிரதி குழுக்களின் தலைவர் கௌரவ ஹேமாலி வீரசேகர மற்றும் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்க, எம்.கே.எம். அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
2026-07-13
பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாக அதிகரிப்பதற்குத் தேவையான கொள்கை மற்றும் சட்ட ரீதியான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது தொடர்பாகவும், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுப் பட்டியல்களில் மட்டுமன்றி, தேர்தலில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களிடையேயும் குறைந்தபட்சம் 33 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.இந்த முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.மேலும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக வேட்புமனுப் பட்டியல் மட்டத்தில் அல்லது கட்டாய ஆசன ஒதுக்கீட்டின் மூலம் அல்லது கலப்பு தேர்தல் முறைமையின் கீழ் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் குழு உறுப்பினர்களின் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் போது காணப்படும் சமூக மனப்பாங்குகள், தேர்தல் செலவுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவு போன்ற சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாமிந்திராணி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினீ குமாரி விஜேரத்ன, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுத, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, சட்டத்தரணி ஹசாரா லியனகே, தீப்தி வாசலகே, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி கீதா ஹேரத் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-13
நெல் கொள்வனவில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பல புதிய நடைமுறைகளை அமுல்படுத்துவது குறித்து, கௌரவ அமைச்சர் கே. டி. லால் காந்த அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 08) பாராளுமன்றத்தில் கூடிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஆராயப்பட்டது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள உத்தரவாத விலைக்கு அமைவாக நெல் கொள்வனவை திறம்பட மேற்கொள்வது, மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது, விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வது ஆகியவற்றிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.வியாபாரிகள் விவசாயிகள் போன்று காண்பித்து அரசாங்கத்துக்கு நெல் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உர மானியப் பயனாளி விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை நெல் கொள்வனவு நிலையங்களுக்கு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், விவசாயி பயிரிட்டுள்ள ஏக்கர் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு அவர் விற்பனை செய்யக்கூடிய நெல் அளவை உறுதிப்படுத்துவதன் மூலம், மோசடியான முறையில் அதிகளவு நெல்லை விற்பனை செய்வதைத் தடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.நெல் கொள்வனவின்போது எடையை அடிப்படையாகக் கொண்ட தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில், கூட்டுறவு மற்றும் தனியார் களஞ்சியங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குழுவுக்குத் தெரிவித்தனர்.கூட்டுறவுச் சங்கங்களும் நெல் சந்தைப்படுத்தல் சபையும் இணைந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்வதன் மூலமும், சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலமும், போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளுக்கு மேலும் திறம்பட்ட மற்றும் நியாயமான சேவையை வழங்க முடியும் எனவும் குழு வலியுறுத்தியது.அத்துடன், களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பழமையான கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்தல், அவற்றை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள், மேலும் வனவிலங்கு மற்றும் தொல்பொருள் பாதுகாப்புப் பகுதிகளை அண்டியுள்ள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் போது நிலவும் சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த சேனரத் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks