பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நம்வபர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் மக்களின்வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவுசெய்யப்படும் 29 உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட 2024.09.24ஆம் திகதிய 2403/13 ஆம் இலக்க வர்த்தானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நாளில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அன்றையநாள் மிகவும் விசேடமானதாகும்.
முதலாவது அமர்வுநாளில் சபாமண்டபத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகிறது. முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். செங்கோல் சபா மண்படத்தில் வைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக சபையில் முன்னெடுக்கப்படும்.
அதன் பின்னர் அரசியலமைப்பின் 64(1) உறுப்புரை மற்றும் நிலையியற் கட்டளை இலக்கம் 04, 05 மற்றும் 06 ஆகியவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் சபாநாயகரை வாக்களின்பின் மூலம் நியமித்தல், சபாநாயகரின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை அதன் பின்னர் பிரதி சாபாநாயகரும் குழுக்களின் தலைவரும், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்வது இடம்பெறும்.
சபாநாயகர் நியமனம்
பாராளுமன்றத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் சபாநாயகராகத் தெரிவுசெய்து நியமிக்க முடியும். எனினும், உறுப்பினர் குறித்த முன்மொழிவுக்கு அமைய தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த உறுப்பினர் சபாநாயகராகச் சேவையாற்றுவதற்கு விரும்புகின்றாராவென்பதை முன்கூட்டியே நிச்சயப்படுத்திக் கொள்ளல் வேண்டும். எவராவது உறுப்பினர் ஒருவரின் பெயரை சபாநாயகராகத் தெரிவுசெய்யுமாறு உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்து மற்றொருவர் வழிமொழியவேண்டும் என்பதுடன், இது தொடர்பில் விவாதம் மேற்கொள்ள முடியாது.
முதலில் சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்யவேண்டும் என செயலாளர் நாயகம் சபைக்கு அறிவிக்க வேண்டும். இதன்போது எவராவது ஓர் உறுப்பினர் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்றால் குறித்த உறுப்பினரின் பக்கம் செயலாளர் நாயகம் பார்த்து நிற்க அந்த உறுப்பினரின் யோசனை சபைக்கு முன்வைக்கப்படும். ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வேறு நபர்களின் பெயர்கள் உள்ளனவா என செயலாளர் நாயகம் சபையிடம் வினவுவது கட்டாயமாகும். அவ்வாறு வினவும்போது பிறிதொரு நபரின் பெயர் முன்வைக்கப்பட்டிருக்காவிட்டால் குறித்த உறுப்பினர் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த உறுப்பினரின் பெயரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் இருவரும் கையில் பிடித்துச் சென்று அவரை அக்கிராசனத்தில் அமர்த்துவது வழமையாகப் பின்பற்றப்படும் சம்பிரதாயமாகும்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், இதனை பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேற்கொண்டு வைப்பார். இவ்வாறு பதவிச்சத்தியம் செய்துகொண்ட சபாநாயகர் அக்கிராசனத்தில் அமர்வதற்கு முன்னர் தான் தெரிவுசெய்யப்பட்டமைக்கு நன்றிதெரிவித்து சிறியதொரு உரையாற்றுவதும் சம்பிரதாயமாகும். தெரிவுசெய்யப்பட்ட புதிய சபாநாயகருக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், சபாநாயகரும் நன்றி தெரிவித்து உரையாற்றுவார். அதன் பின்னர் சபா மண்டபத்திலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை எடுத்துக்கொள்வர்.
சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பங்கள் இரண்டு பாராளுமன்ற முறைமையில் காணப்படுகின்றன. அவையாவன, சபாநாயகர் தெரிவு, பிரதிச் சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு போன்றவற்றின் போதும், பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் சந்தர்ப்பதிலுமாகும்.
அவ்வாறான வாக்கெடுப்பின் போது ஐந்து நிமிடங்கள் வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்காக சபையில் சமுகமளித்திருக்கும் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகரிடமிருந்து வாக்குச்சீட்டொன்று வழங்கப்படும். இந்த வாக்குச்சீட்டில் சபாநாயகராகத் தெரிவுசெய்ய விரும்பும் நபரின் பெயர் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினரின் கையொப்பம் என்பன இடப்பட்டு வெளியில் தெரியாதவாறு மடிக்கப்பட்டு வாக்குப்பெட்டியில் இடவேண்டும். வாக்களிப்பு நடத்தப்படும்முறை மற்றும் வாக்குகளின் எண்ணிக்கையை மேற்கொள்வதற்கான பொறுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையே சாரும். செயலாளர் நாயகத்தின் மேசையிலேயே (Table of Parliament) வாக்குகள் எண்ணப்படும். மேசையில் வாக்குகள் எண்ணப்பட்டதும், அதன் முடிவுகள் சபைக்கு அறிவிக்கப்படும். எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குச்சீட்டில் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினரின் கையொப்பம் இடப்பட்டிருக்காவிட்டால் அவை செல்லுபடிற்ற வாக்குகளாகக் கணக்கெடுக்கப்படும்.
சபாநாயகர் பதவிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்ற உறுப்பினரின் வாக்குகள் நீக்கப்பட்டு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவார். அதேநேரம், பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தால் மேலே குறிப்பிடப்பட்டது போல ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறைந்த வாக்குகளைப் பெற்ற உறுப்பினர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு எஞ்சிய உறுப்பினர்களுக்கிடையில் மீண்டும் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இறுதியில் அதிக வாக்குகளைப் பெறும் உறுப்பினர் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவார்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று உறுப்பினர்கள் போட்டியிடும்போது இரண்டு உறுப்பினர்களுக்கு மத்தியில் சம எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைக்பெற்றிருந்தால், சமமான வாக்குகள் உள்ள அவ்வேட்பாளர்களுக்கிடையே எவர் விலக்கப்பட வேண்டியவர் என்பது செயலாளர் நாயகத்தினால் தீர்மானிக்கக்கூடியவாறான திருவுளச் சீட்டின்மூலம் நிர்ணயிக்கப்படுதல் வேண்டும். இரண்டு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் போட்டியிடும் இருவரும் சமமான வாக்குகளைப் பெறும் சந்தர்ப்பத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இருந்தபூதும் அந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் யாரை சபாநாயகராகத் தெரிவுசெய்வது என்பதை திருவுளச் சீட்டின் மூலம் தீர்மானிக்கும் பொறுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குக் காணப்படுகின்றது. இதில் திருவுளச் சீட்டு போடும் முறை பற்றித் தீர்மானிக்கும் உரிமையும் செயலாளர் நாயகத்துக்குக் காணப்படுகின்றது.
வாக்கெடுப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்களை ஆகக் குறைந்தது ஒரு மாதகாலம் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேண வேண்டியதும், பாராளுமன்றத்திடமிருந்து பெறக்கூடிய ஏதேனும் பணிப்பிற்கமைய செயலாளர் நாயகம் வாக்குச்சீட்டுப் பத்திரங்களை அழித்துவிட்டு அதனைப் பாராளுமன்றத்திற்குச் சான்றுப்படுத்தலும் செயலாளர் நாயகத்தின் கடமையாகும்.
பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட் உறுப்பினர்கள் அனைவரும் முதலாவது பாராளுமன்ற நாள் அமர்வில் ஷபாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் அட்டவணை எனும் புத்தகத்தில் கையொப்பமிடுதல் வேண்டும். இதில் சபாநாயகர் முதன்முதலில் கையொப்பமிடுவார் என்பதுடன், அடுத்து பிரதமர் கையொப்பமிட்டதும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிடுவது சம்பிரதாயமாகும். இந்தப் பெயர் அட்டவணைப் புத்தகம் பாதுகாப்பான ஆவணமாகப் பேணப்படும்.
முதலாவது பாராளுமன்ற அமர்வு தினத்தில் பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய வேண்டும். இவர்களின் தெரிவுகள் இடம்பெறும்போது சபாநாயகர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அக்கிராசனத்தில் இருப்பதனால் குறித்த அறிவிப்பு மற்றும் வாக்கெடுப்புப் போன்றன சபாநாயகரின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படும். பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளர் பதவிக்கு ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டிருந்தால், வேறு எவரினதும் பெயர்கள் முன்மொழியப்படுகின்றனவா என சபையிடம் வினவவேண்டிய பொறுப்பு சபாநாயகருடையதாகும். அவ்வாறு வேறு பெயர்கள் முன்மொழியப்படாவிட்டால் குறித்த உறுப்பினர் பிரதி சபாநாயகர் பதவிக்குத் தெரிவுசெய்யப்படுவார்.
ஏதாவது சந்தர்ப்பத்தில் இந்தப் பதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டி ஏற்பட்டால் சபாநாயகரின் தெரிவின்போது பின்பற்றப்பட்ட வாக்களிப்புமுறை பின்பற்றப்படும். இதன்போது வாக்கெடுப்பு நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பை வெளியிடுவது செயலாளர் நாயகத்திற்குப் பதிலாக சாபாநாயகர் என்பது விசேடமாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட செயற்பாடுகள் பூர்த்தியடைந்ததும் முதல்நாள் அமர்வுகள் ஒத்திவைக்கப்படும். ஒத்திவைக்கப்படும் நாள் பெரும்பாலும் அடுத்த பாராளுமன்ற அமர்வுநாளாகவிருக்கும்.
இருந்தபோதும், அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் அன்றையதினம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்படுவதாயின், முதல் நாளின் பிரதான பணிகள் முடிவுக்குவந்ததும் தற்காலிகமாக சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குத் தலைமைதாங்கி கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்த முடியும்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார்.
2026-09-01
கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் 2026 ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற இரண்டாவது அனைத்து பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.கம்போடியாவின் செனட் சபை மற்றும் தேசிய பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடு, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஓசியானியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த சட்டவாக்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது. “சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பிற்குமான ஒருமைப்பாடு: சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.கம்போடிய அரச மாளிகையில் அந்நாட்டின் மன்னர் அதிமேதகு ‘Preah Samdech Preah Boromneath Norodom Sihamoni’ அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து மாநாட்டின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போது, ISC-2 மாநாட்டின் தலைவரும் கம்போடிய செனட் சபையின் தலைவருமான கௌரவ ‘Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen’ அவர்களுடனான சுமூகமான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கம்போடிய பிரதமர் கௌரவ ‘Samdech Mohaborvor Thipadei Hun Manet’ அவர்களுடனும் சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது.இந்த மாநாட்டில் பிரதான உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாரம்பரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் வலுவானதுமான பங்களிப்பாக அமையும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டவாக்க நிறுவனங்கள் தனித்துவமான பங்கை வகிக்க வேண்டும் என்றும், கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக தொடர்பாடல் வழிகளைத் திறந்த நிலையில் பேண வேண்டும் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். மேலும், உண்மையானதும் நிலையானதுமான சமாதானம் என்பது போர் இல்லாத நிலையை மாத்திரம் குறிப்பிடுவதாக அமையாது என்றும், அவ்வாறான சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு பிரஜையும் புறக்கணிக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் தொடர்பிலும் கவனம் செலுத்திய கௌரவ சபாநாயகர், அணிசேராக் கொள்கை, நட்புறவு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் வரலாற்று ரீதியான வெளிநாட்டுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார். காலநிலை மாற்றம், இணையக் குற்றங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன சவால்களை எந்தவொரு நாடும் தனித்து தீர்க்க முடியாது என்றும், அவற்றை எதிர்கொள்வதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். உலகளாவிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதன் மூலம் பரந்தளவிலான சமூக நீதியையும் பகிரப்பட்ட பொருளாதார செழிப்பையும் அடைந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கம்போடியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மில்டன் டிக் அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.பாராளுமன்ற அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், மேலும் அதிகரித்த தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.அத்துடன், கௌரவ சபாநாயகர் விக்கிரமரத்ன அவர்கள் நேபாள தேசிய பேரவையின் தலைவர் கௌரவ நாராயண் பிரசாத் தஹால் அவர்களையும் சந்தித்தார். இதன்போது, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.மாநாட்டின் நிறைவில் “நோம் பென் பிரகடனம்” (Phnom Penh Declaration) உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டவாக்கக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவது இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
2026-08-28
பாராளுமன்றம் செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஆக. 20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டன.இதற்கு அமைய செப்டெம்பர் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.அதன் பின்னர், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 09ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை, .ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெண்களின் வலுவூட்டல் சட்த்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறும்.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 11 வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைநலீன் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுக்ள ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவருதல்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்இலங்கை பைத்துல்மால் நிதியம் என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல்அஜித் பி.பெரேராஇலங்கை குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல்ஹர்ஷ.த சில்வாதியகம வனத்தைப் பாதுகாத்தல்சுஜீவ திசாநாயக்கபிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்ததல்நந்த பண்டாரமலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல்ரீ.கே.ஜயசுந்தரகித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-08-28
இலங்கை பாராளுமன்றத்தின் ஒன்பது திணைக்களங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் 25 பேர் கொண்ட குழுவினர், புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றமான லோக்சபா செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. லோக்சபாவின் கௌரவ சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், லோக்சபா செயலகத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ உத்பல் குமார் சிங் அவர்களால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் பயனாக, இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்குழுவுக்கு இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தலைமை தாங்கினார். இரண்டாவது தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் தலைமையில், தற்போது புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்திட்டங்களும் லோக்சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்த இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவை, லோக்சபா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.ஆரம்ப தினத்தன்று இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினர், இந்திய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.ஆளுமை விருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நிர்வாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பரந்தளவிலான விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், பாராளுமன்றத்திற்கான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல், பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் பணிகள், லோக்சபா செயலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்குகின்றன.மேலும், பாராளுமன்ற குழுச் செயலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடு மற்றும் நிர்வாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படுகிறது.செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) பணிகள், வரவுசெலவு மற்றும் கொடுப்பனவுக் (B&P) கிளை, அத்துடன் சட்டவாக்க மன்றங்களின் தலைமைதாங்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உட்கட்டமைப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.கல்வி மற்றும் நிறுவன ரீதியான பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவிற்கான கலாசார விஜயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் இரு பாராளுமன்றங்களின் அதிகாரிகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பாராளுமன்ற நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சன்சத் தொலைக்காட்சி நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.தொடர்ச்சியான தொகுதிகளாக இரு நாட்டு பாராளுமன்ற செயலகள்க்கு இடையிலான வளர்ந்து வரும் நிறுவன ரீதியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.