பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-04-04
செய்தி வகைகள் : குழு செய்திகள்
தற்போது நடைமுறையில் உள்ள அரச நிறுவங்களை மீள்கட்டமைப்பு செய்யு திட்டம் மற்றும் மீள்கட்டமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்தில் கொள்ளப்பட்டது. இந்தக் குழு அண்மையில் (ஏப். 01) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் கூடிய போதே இந்த விடயம் கருத்திற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு செய்ய நியமிக்கப்பட்ட அலகின் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அரச தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இந்தப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்ததுடன், அவர்களின் பணிகள் தொடர்பில் குழுவுக்கு விளக்கமளித்தனர். அதற்கமைய, தற்போது 07 நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்வதற்குத் வேலைத்திட்டத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அலகின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். Srilankan Airlines Ltd, Sri lanka Telecom PLC, Sri Lanka Insurance Corporation Ltd, Hotel Developers Ltd, Canwill Holdings (Pvt) Ltd, Litro Gas and Litro Gas Terminals Ltd, Lanka Hospitals Corporation PLC ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு மீள்கட்டமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. மீள்கட்டமைப்பு செய்வதன் கீழ் அலகுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்து கருத்து தெரிவித்த அந்த அதிகாரிகள், இந்த நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து சுயாதீனமாக்குவது மற்றும் அதனையடுத்து கேள்விப்பத்திரம் கோரல் ஊடாக தனியார் துறையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாகும் எனக் குறிப்பிட்டனர். அத்துடன், ஏற்கனவே பல நிறுவனங்கள் தொடர்பில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கு (EOI) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மீள்கட்டமைப்பு நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு அம்சங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதற்கமைய, கடந்த 10 வருடங்களில் மீள்கட்டமைப்புக்கான நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் முழுமையான தரவுகள் அடங்கிய அறிக்கையை குழுவிடம் வழங்குமாறு அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அலகின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், இந்நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு அரச நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்யும் நடவடிக்கையின் மூலம் வழங்கப்படும் பங்களிப்பு குறித்து அறிக்கை தயாரித்து குழுவுக்கு வழங்குமாறும் குழுவினால் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், இந்த அரச நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்யும் செயற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை மேலதிக கலந்துரையாடலுக்காக தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்துவதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். குழுவின் தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயங்கள் குறித்து குழுவில் விரிவாக கலந்துரையாடுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் வெளிப்படித்தன்மையுடனும் வினைத்திறனுடனும் முன்னெடுக்க முடியும் என சுட்டிக்காட்டினார். இலங்கை மத்திய வங்கியின் கடன் தகவல் பணியகத்திற்கு (CRIB) வழங்கப்பட்ட பரிந்துரையின் பிரகாரம், பொதுமக்கள் தாம் CRIB இல் உள்ளடங்குவதா இல்லையா எனத் தெரிந்துகொள்ளும் வகையில் தொலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக இதற்கு உதாரணமாக குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எதிர்வரும் காலங்களில் அந்த செயற்பாடுகளை செயற்படுத்தத் தேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கெளரவ (வைத்தியகலாநிதி) கயாஷான் நவனந்த, கௌரவ டபிள்யூ.எச்.எம். தர்மசேன, கௌரவ சஹன் பிரதீப் விதான, வண. அதுரலியே ரத்ன தேரர், கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், கௌரவ அசங்க நவரத்ன, கெளரவ ஜகத் பிரியங்கர மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-12-16
இலங்கை மின்சார சபைக்கு சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம்நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாகச் சீரமைக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய புனரமைப்புப் பணிகளுடன் சேர்த்து, அதற்காக சுமார் 190 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.நாட்டில் நிலவும் அனர்த்தத்தின் தன்மையை ஆய்வு செய்வதற்கும், அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (டிச. 11) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், இந்த அனர்த்த நிலைமையினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள 316 வீதிகளுக்கும் 40 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினர். இருப்பினும், இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், புகையிரதப் பாதைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதேச வீதிகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். பிரதேச வீதிகளை மீண்டும் சீரமைக்கும் போது அதற்கான நிதியைப் பெறுவதற்கு அமைச்சின் தலைமையில் ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் இங்கு வலியுறுத்தினார். அதற்கமைய, தற்போது உலக வங்கி மூலம் 2 பில்லியன் ரூபா கடனாகப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் பல நிறுவனங்களிடமிருந்து இந்த புனரமைப்புகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.அத்துடன், இந்த அனர்த்த நிலைமையினால் இலங்கை மின்சார சபைக்குச் சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உலக வங்கியிடமிருந்து இதற்காக ஒரு கடன் தொகையைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், அந்தத் தொகையை கடனாகப் பெறாமல், ஒரு மானியமாகப் பெற முயற்சிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கடன் தொகையாக அந்த நிதியைப் பெறுவதன் மூலம் பாவனையாளர்களின் மின்சாரக் கட்டணத்தில் ஒரு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்தத் தொகையை மானியமாகப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்துக்கும் இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 252 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அந்தத் திருத்தப் பணிகளுக்குச் செலவிடப்படும் தொகையை அவர்களுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மீட்டெடுக்க முடியும் என்பதால், மேலதிக கடன் அல்லது மானியம் எதுவும் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் மேலும் தெரிவித்தனர்.இதேவேளை, இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவுவில் தெரிவித்தனர். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 156 நீர் வழங்கல் திட்டங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவை அனைத்தும் பராமரிப்பு செய்யப்பட்டு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குழுவில் தெரிவித்தார். அத்துடன், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் மானியமாகப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் குழுவில் தெரிவித்தார்.அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது அதற்குத் தேவையான ஆதரவை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார ஜயமஹ, அஜித் பி. பெரேரா மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோரும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
2025-12-09
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகள் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டன.குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 26) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.இதற்கு அமைய, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்களுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் நிதி அறிக்கைகள் ஆராயப்பட்டன.அத்துடன், பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வது மற்றும் அதிபர்களைச் சேவையில் இணைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ்.இராதாகிருஷ்ணன், ரோஹினி குமாரி விஜேரத்ன, அபூபக்கர் ஆதம்பாவா, துரைராசா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ உள்ளிட்டோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-12-09
2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி சட்டத்தின் 71வது பிரிவின் கீழான ஒழுங்குவிதி பற்றி ஆராய்வதற்கு குழுவின் விசேட கூட்டம்2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2025 செப்டெம்பர் 04ஆம் திகதி 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் மற்றும் 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 2025 டிசம்பர் 03ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழு கூடியது.இக்கூட்டம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஒழுங்குவிதி குறித்து கலந்துரையாடிய குழு, மருந்துகளைப் பதிவுசெய்யும் செயற்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் தெளிவுத் தன்மை என்பனவற்றை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனையடுத்து, 2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் குறித்தும் குழு கவனத்தில் எடுத்துக்கொண்டது. இத்திட்டத்திற்கு அமைய 2026ஆம் ஆண்டில் 3,508 கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது, 3,484 நிதிக் கணக்காய்வுகள், 11 செயல்திறன் கணக்காய்வுகள், 1 சுற்றாடல் கணக்காய்வு, 12 விசேட கணக்காய்வுகளை உள்ளடக்கியுள்ளது.சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கி கூட்டுறவுகள் என்பன தொடர்பான கணக்காய்வுகளும் 2026ஆம் ஆண்டு முதல் கணக்காய்வாளர் நாயகத்தின் விடயதானத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுகளை மேற்கொள்வதற்குப் போதுமான பணியாளர்கள் உள்ளனரா என்பது குறித்தும் குழு கரிசனை வெளியிட்டது. இதற்குப் பதிலளித்த பதில் கணக்காய்வாளர் நாயகம், தற்சமயம் இருக்கும் பணியாளர் எண்ணிக்கையைவிட 10%–15% பணியாளர்களுக்கான தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார். பிராந்திய அலுவலகங்கள் மூலம் முன்னோடி கணக்காய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை பெப்ரவரி மாத இறுதிவரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், அதன் பிறகு ஆட்சேர்ப்பு மூலமாகவோ அல்லது வெளியிலிருந்து பணிக்கு அமர்த்துவதன் ஊடாகவோ பணியாளர்களுக்கான தேவை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.மேலும், வருடாந்த வேலைத்திட்டம் கணக்காய்வுச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும், அதன் படி எந்தவொரு மறுஆய்வு அல்லது பரிந்துரையும் சபாநாயகர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து, கணக்காய்வாளர் நாயகத்தின் மதிப்பீட்டிற்கு உட்பட்டு சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுப் பணிகளுக்கு வெளியாட்களுக்கு வழங்குவதை ஆதரிப்பதென்ற கருத்தை சபாநாயகரிடம் முன்வைப்பதற்கும் குழு இணங்கியது. இதற்கமைய, முன்னோடித் திட்டத்தை செயற்படுத்தி, 2026 பெப்ரவரி இறுதியில் அது பற்றிய அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக, 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகள் மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிக் குழுவின் கண்காணிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதேவேளை, அவசரகால அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் சீர்குலைந்த வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான ஒதுக்கீடுகளை குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் வழங்குவதற்கான தீர்மானம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 05ஆம் திகதி விசேட கூட்டமொன்றைக் கூட்டியிருந்தது.2025 சனவாி மாதம் 01 ஆம் திகதியில் தொடங்கி 2025 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியில் நிறைவடைகின்ற நிதியாண்டின் பயன்பாட்டிற்காக, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து அல்லது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தற்றுணிவின் பிரகாரம் அரசாங்கத்தால் பெறப்பட்ட ஏதேனும் தொகையிலிருந்து ஐம்பதாயிரம் மில்லியன் ரூபாவினை (ரூபா 50,000,000,000) விஞ்சாத மேலதிக ஒரு தொகை செலுத்தப்பட வேண்டுமென்றும், அத்தகைய தொகை செலவிடப்படுமென்றும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி சட்டத்தின் 71வது பிரிவின் கீழான ஒழுங்குவிதி பற்றியும் குழுவில் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2025-12-05
புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்காக நிதி அமைச்சு மற்றும் வங்கிகள் இணைந்து ஒரு கூட்டுத்திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார்.கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு 2025.11.25 ஆம் திகதி கௌரவ அமைச்சரின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர், இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் புதிய தொழில்முயற்சியாளர்களுக்குக் கடன் வழங்குவதற்காக எண்பதாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகையை பயனுள்ள வகையில் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தக் கூட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அத்துடன், இந்தக் கடன் வசதிகள் எந்தெந்தத் துறைகளுக்கு வழங்கப்படவுள்ளன என்றும் சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் செயன்முறை குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஒரு செயலமர்வை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த எதிர்பார்ப்பதாகவும் கௌரவ அமைச்சர் மேலும் தெரிவித்தார்.மேலும், நாட்டின் அனைத்துத் தொழிலாளர்களினதும் தகவல்களை ஒரே ஒரு அமைப்பிற்குள் சேகரிப்பதற்காக, கைத்தொழிலாளர்களுக்கான தேசியத் தரவு முறைமை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கௌரவ அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி அவர்கள் தெரிவித்தார். அதற்கமைய, அந்தத் தரவு முறைமையில் பதிவுசெய்து கொள்வதற்காக அனைத்துத் தொழில் முயற்சியாளர்களையும் அறிவுறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அந்தத் தரவு முறைமையில் பதிவுசெய்து கொள்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அத்துடன், தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்குப் பிணையில்லாத கடன் வசதிகளை வழங்குவது குறித்தும் குழுவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.அத்துடன், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அந்தத் தொழிற்சாலையின் பிரதானிகள் குழுவில் தகவல்களைச் முன்வைத்தனர். அதற்கமைய, தொழிற்சாலையில் இருந்த குறைபாடுகளைச் சரிசெய்து, இதுவரை காணப்பட்ட மாதாந்த 150 - 180 மெட்ரிக் டொன் உற்பத்தித் திறனை 400 மெட்ரிக் டொன் வரை அதிகரிக்க முடிந்துள்ளதாக அந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.அத்துடன், இந்நாட்டில் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய ஆலோசனைக் கையேடு குறித்தும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி அவர்கள் கருத்துத் தெரிவித்தார். தற்போது குழப்பமான வகையில் நடைமுறையில் உள்ள அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை மேலும் முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அடுத்த ஜனவரி மாதம் இந்தக் கையேடு அறிமுகப்படுத்தப்படும் என்றும் கௌரவ அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

