logo

E   |   සි   |  

2010-04-22

செய்தி வகைகள் : செய்திகள் 

ஏழாவது பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று மு.ப. 08.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

பதில் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுவதாக அறிவித்து மேன்மைதங்கிய சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பிரகடனங்களை வாசித்ததோடு சபாநாயகர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

பிரதம அமைச்சர் கெளரவ டீ.எம். ஜயரத்ன அவர்கள், கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முன்மொழிய அதை கெளரவ கரு ஜயசூரிய அவர்கள் வழிமொழிந்தார். வேறு உறுப்பினர் எவரும் பிரேரிக்கப்படாததால் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் உரிய முறையில் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என பதில் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பிரகடனப்படுத்தினார். அதனையடுத்து, புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட்டவர்களினால் அக்கிராசனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். கெளரவ சபாநாயகர் அக்கிராசனத்திற்கு வந்து அதில் அமர முன்னர் மிகச் சுருக்கமாக சபைக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கெளரவ சபாநாயகர் தலைமை வகித்தார். அதனை அடுத்து, கெளரவ சபாநாயகர் அக்கிராசனத்திலிருந்து எழுந்து சட்டப்படி உறுதிப்பிரமாணம் செய்து மேசையிலுள்ள புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

அதன் பின்னர், கெளரவ உறுப்பினர்கள் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டு, மேசை மீதுள்ள புத்தகத்திலும் கையொப்பமிட்டனர்.

அதனையடுத்து, அரசாங்க தரப்பு மற்றும் எதிர் தரப்பு கட்சித்தலைவர்களினால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டன. கெளரவ சபாநாயகர் அதற்கு பதிலுரை ஆற்றினார்.

பின்னர், சபை பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவுசெய்வதில் ஈடுபட்டது. கெளரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள், கெளரவ பியங்கர ஜயரத்ன அவர்கள் பிரதி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முன்மொழிய அதை கெளரவ ஜோன் அமரதுங்க அவர்கள் வழிமொழிந்தார். வேறு உறுப்பினர் எவரும் பிரேரிக்கப்படாததால் கெளரவ பியங்கர ஜயரத்ன அவர்கள் உரிய முறையில் பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என கெளரவ பாராளுமன்ற சபாநாயகர் சபைக்கு பிரகடனப்படுத்தினார்.

அதனை அடுத்து, சபை குழுக்களின் பிரதித் தவிசாளர் ஒருவரை தெரிவுசெய்வதில் ஈடுபட்டது. கெளரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள், கெளரவ சந்திரகுமார் முருகேசு அவர்கள் குழுக்களின் பிரதித் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முன்மொழிய அதை கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழிமொழிந்தார். வேறு உறுப்பினர் எவரும் பிரேரிக்கப்படாததால் கெளரவ சந்திரகுமார் முருகேசு அவர்கள் உரிய முறையில் குழுக்களின் பிரதித் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என கெளரவ பாராளுமன்ற சபாநாயகர் சபைக்கு பிரகடனப்படுத்தினார்.

பின்னர், புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை கெளரவ சபாநாயகர் அங்கீகரிப்பதாக கெளரவ சபாநாயகர் அறிவித்தார்.

அதனையடுத்து, கெளரவ பிரதம அமைச்சர் 2010 மே மாதம் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 0930 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என்ற பிரேரணையை பிரேரித்தார்.

அதனையடுத்து, 0955 மணியளவில் பாராளுமன்றமானது 2010 மே 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks