2026-10-01
பரீட்சைகளில் சித்தியடைவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், பாடசாலையில் பெற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய திறன், சமூக மற்றும் உணர்வுசார் திறன்களைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு அண்மையில் (செப். 29) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், தற்போதைய கல்வி முறைமையின் மூலம் பரீட்சைகளில் சித்தியடையக்கூடிய பிள்ளைகளை உருவாக்க முடிந்துள்ள போதிலும், அவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான திறன்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் பாடசாலையில் பெற்றுக்கொள்ளும் அறிவை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தும் திறன், சமூக மற்றும் உணர்வுசார் திறன்கள், அத்துடன் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பான புரிதல் ஆகியவற்றை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு இடையில் காணப்படும் வளங்களின் ஏற்றத்தாழ்வைக் குறைத்து, அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நியாயமான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, கவர்ச்சிகரமான மற்றும் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கக்கூடிய இடமாக மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பிள்ளைகளின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆளுமை விருத்திக்காக பாடசாலை விளையாட்டு வசதிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், இளைஞர் தலைமுறையினர் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் செயற்பாட்டுமிக்க பிரஜைகளின் பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். அரசியல் என்பது கட்சி அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும், சமூகத்தில் செயற்பாட்டுமிக்க பிரஜைகளாகத் தலையீடு செய்வதும் அதன் முக்கியமானதொரு பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, இலங்கை பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இங்கு உரையாற்றிய பிரதி சபாநாயகர், பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் சட்டத்திற்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரசியல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைக்கு இளைஞர் தலைமுறையினர் செயற்பாட்டுடன் பங்களிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு தொழிலையும் கௌரவத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும், ஏனையவர்களின் தொழில்களை மதித்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதன் அவசியத்தையும் பிரதி சபாநாயகர் வலியுறுத்தினார். சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மனப்பாங்கில் மாற்றம் அவசியம் எனவும், ஒழுக்கமும் நாகரிகமும் கொண்ட சமூகத்தை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து வைக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மாணவர்கள் தமது அமைச்சுக்களின் ஊடாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட கௌரவ அதிதிகளின் கரங்களினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி செயலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே, ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, மேல் மாகாண பிரதம செயலாளர் கே.ஜி. பிரதீப் புஷ்பகுமார, இலங்கை பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (தொடர்பாடல்) சமந்த மல்லவஆரச்சி, வலயக் கல்விப் பணிப்பாளர் உதென ஹெட்டிஆராச்சி, பிரதி கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ரஞ்சித் பிரேமதிலக்க, பிரதி கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஹசினி விஜய விக்ரம, பிரதி கல்விப் பணிப்பாளர் (பாடசாலை நிர்வாகம்) சாமலி எதிரிசிங்க, உதவிக் கல்விப் பணிப்பாளர் (சமூக விஞ்ஞானம்) ஏ.கே.எஸ்.கே. ரூபதேவ, கொழும்பு கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான கலாநிதி கே.டபிள்யூ. கிரிஷான் சிந்தக மற்றும் நதீஷா நிர்மலீ உள்ளிட்டோரும் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-30
வரவுசெலவுத் திட்டத்தின் முதலாம் மதிப்பீடு ஒக்டோபர் 07ஆம் திகதிவரவுசெலவுத் திட்ட உரை நவம்பர் 12ஆம் திகதி2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு (வரவுசெலவுத் திட்ட உரை/வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) 2026 நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் அண்மையில் (செப். 25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடுக்காக ஒக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2026 நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவுசெலவுத் திட்ட உரை) மேற்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, நவம்பர் 20ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும். அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவுள்ளது.அதற்கமைய, அனைத்து நாட்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான 5 கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஒரு கேள்விக்குமாக நேரம் ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, விவாதம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்கெடுப்புகள் நடைபெறும் இரண்டு நாட்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் 50:50 என்ற விகிதாசார அடிப்படையில் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.மேலும், இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையிலும், குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையிலும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டது.அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், அது குறித்த தினத்தின் இறுதியில் பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2026-09-25
நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (செப். 24) சான்றுரைப்படுத்தினார்.அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்று (24) மற்றும் இன்று (25) ஆகிய இரு தினங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் திருத்தப்படுகிறது.அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையும் திருத்தப்படுகிறது. இதற்கு அமைய, பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமாக அமுலுக்கு வருகிறது.இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்திலும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் இன்றையதினமும் இடம்பெற்று, மேலதிக வாக்குகளால் இச்சட்டுமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயது 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நீதித்துறை திருத்தச் சட்டமூலத்திலும் 4ஆம் பிரிவைத் திருத்துவதன் மூலம், மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்களையும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களையும் நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.
2026-09-25
நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 25) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.13ற்கு ஆரம்பானது. வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து குழுநிலையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரைக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாவது திருத்தத்ச் சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.இதன் பின்னர், சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.53 மணிக்கு இடம்பெற்றது. குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மூன்றாவது மதிப்பீடு 96 மேலதிக வாக்குகளால் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முதலாவது மதிப்பீடுக்காக ஓகஸ்ட் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இச்சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் (24) இன்றையதினமும் (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.
2026-09-25
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தூதுக்குழுவினர் செப்டெம்பர் 24ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்து, கௌரவ சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான பேராசிரியர் ஸ்வென் சிமொன் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரால்ஃப் சீக்காட்ஸ், ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) குழுவின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான ஆலோசகர் பெஞ்சமின் ஒப்பர்மான், KAS சிங்கப்பூரின் ஆசியாவுக்கான பிராந்திய அரசியல் கலந்துரையாடல் திட்டத்தின் கொள்கை ஆலோசகர் ஜோனாஸ் நிட்ஷ்கே, KAS பிரஸ்ஸல்ஸின் சர்வதேச அபிவிருத்திக் கொள்கை கலந்துரையாடல் திட்ட முகாமையாளர் ஸ்வென் நிக்கொலாய், சட்டத்தரணியும் IDAG நிறுவனத்தின் பதிவாளரும் பணிப்பாளருமான சி.ஏ.ஹெட்டியாராச்சி மற்றும் IDAG நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் எஸ்.விமலாகுணரத்ன ஆகியோரும் இத்தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினரை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்றதுடன், இலங்கை பாராளுமன்றத்திற்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் இரு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.இச்சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்மட்டப் பரிமாற்றங்களை சபாநாயகர் நினைவுகூர்ந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈடுபாட்டிற்கு தனது பாராட்டைத் தெரிவித்தார். இது இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கும் சர்வதேச தரநிலைகளைப் பேணுவதற்கான அதன் முயற்சிகளுக்கும் பங்களிப்புச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல், ஊழலை எதிர்த்துப் போராடுதல், நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் மற்றும் பெண்களின் உரிமைகளை மேலும் மேம்படுத்துவதற்கான பொறிமுறைகளை நிறுவுதல் உள்ளிட்ட துறைகளில் இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுக்குழுவிற்கு விளக்கமளித்தார். இயலாமையுடைய நபர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிகளவிலான உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமை, ஜனநாயக ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகியன குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இலங்கையின் அரசியல் மற்றும் சமூகச் சூழல், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் சுமுகமான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டனர்.இக்குழுவினர் கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்தனர். அரசியலமைப்புத் திருத்தச் செயற்பாடு, இலங்கையின் அரசியல் முறைமை மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமை தொடர்பில் சுமுகமான கலந்துரையாடலையும் நடத்தியிருந்தனர்.இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றமும் ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்கு பிரதி சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இலங்கை மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் இத்தகைய ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தூதுக்குழுவினர் தனித்தனியான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோரையும், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, சம்பிக்க ஹெட்டிஆராச்சி ஆகியோரையும் சந்தித்திருந்தனர்.இக்கலந்துரையாடல்களில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமை, நாடு எதிர்நோக்கும் சவால்கள், அரசியலமைப்பின் இருபத்திரண்டாவது திருத்தத்தின் பின்னணி மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினர் சபாநாயகர் கலரியிலிருந்து சபை நடவடிக்கைகளையும் பார்வையிட்டதுடன், சபாநாயகர் சபையில் அறிவிப்பை வெளியிட்டு அவர்களை வரவேற்றார்.மேலும், தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர். இதன்மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.