பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பாராளுமன்றம் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இந்தப் பாராளுமன்ற அமர்வுவாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் கடந்த செப். 25ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கு அமைய ஒக்டோபர் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ் 2493/36 மற்றும் 2493/37 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள், 2493/38 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும் பொதுத்தனிசு முகாமைத்துவச் சட்டம் ஆகியவை குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 07ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப. 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பி.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 08ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
| பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள் | தனியார் உறுப்பினர் பிரேரணை |
| கௌரவ ஹர்ஷ த சில்வா | தியகம வனத்தைப் பாதுகாத்தல் |
| கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து | புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல் |
| கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன் | 1983 ‘கறுப்பு ஜூலை’யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும்,மேலும் இதுபோன்ற இனவன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல் |
| கௌரவ லசித் பாஷண கமகே | வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல் |
| கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி | இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல் |
| கௌரவ சமிந்த விஜேசிறி | இலங்கை வெளிநாட்டு சேவைக்கான நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் |
| கௌரவ ரவி கருணாநாயக்க | இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல் |
இதனையடுத்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-10-09
ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ஒக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர, இலங்கையுடன் ஆசிய மன்றம் நீண்டகாலமாக பேணிவரும் பங்குடைமைக்கும், நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.அண்மையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு பிரதிநிதிகள் குழுவினர் பாராட்டுத் தெரிவித்ததுடன், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமையையும் பாராட்டினர்.இச்சந்திப்பில், இலங்கையில் ஆசிய மன்றம் முன்னெடுத்து வரும் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த எதிர்பார்க்கும் முக்கிய துறைகள் தொடர்பில் பிரதிநிதிகள் குழுவினர் விளக்கமளித்தனர். அவற்றில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றம், பெண்களின் பொருளாதார வலுவூட்டல், பராமரிப்புப் பொருளாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவை அடங்குகின்றன.சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் உறுதிப்பாடுகளுடன் இணைந்து, பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பேணுதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதும் சமமானதுமான பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதிநிதிகள் குழுவினருக்கு விளக்கமளித்தார்.அத்துடன், நல்லாட்சியை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக பொது நிறுவனங்களை வலுப்படுத்துதல், நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், ஊழலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அரசாங்க வருவாய் திரட்டலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பணியாளர்களை உருவாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கும் கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன் அடிப்படையிலான கல்வியை விரிவுபடுத்துதல் ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் டிஜிட்டல் மாற்றத்தையும் முன்னேற்றுவது தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பொதுச் சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இந்தச் சந்திப்பில் ஆசிய மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தூதுவர் கெத்லீன் ஸ்டீபன்ஸ், சபையின் தலைவர் தூதுவர் ரொபர்ட் ஓ. பிளேக் ஜூனியர் உள்ளிட்ட ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகளும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-10-09
2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE Tax) மூலம் அரசாங்கம் 569,193 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்தார். 2022ஆம் ஆண்டில் 25,546 மில்லியன் ரூபாவும், 2023ஆம் ஆண்டில் 144,955 மில்லியன் ரூபாவும், 2024ஆம் ஆண்டில் 197,572 மில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டில் 201,120 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தினால் வரியாக ஈட்டப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களால் வாய்மூல விடைக்கான வினாக்களாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ், மாதாந்தம் 150,000 ரூபாவைத் தாண்டிய வருமானத்தைப் பெறும் அனைத்து ஊழியர்களினதும் வருமான மூலம் தனியாள் முற்பண வருமான வரிக்கு (APIT – Advance Personal Income Tax) உட்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், வேறு எந்தவொரு மூலத்திலிருந்தும் வருமானம் பெறும் நபர்களின் வரி விதிக்கத்தக்க வருமானம் சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டும் பட்சத்தில், அவர்களும் தனிநபர் வருமான வரிக்கு உட்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.அரசாங்கத்தின் நிதித் தேவைகள் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, PAYE வரியின் வருடாந்த வரி விலக்கு வரம்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.இதன்படி, 2019ஆம் ஆண்டு வரை 1,200,000 ரூபாவாக இருந்த வரி விலக்கு வரம்பு, 2020ஆம் ஆண்டில் 3,000,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2022/2023ஆம் ஆண்டில் அந்த வரம்பு மீண்டும் 1,200,000 ரூபா வரை குறைக்கப்பட்டது. அதேவேளை, 2025ஆம் ஆண்டில் வரி விலக்கு வரம்பு 1,800,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.எதிர்காலத்தில் PAYE வரியின் வரி விலக்கு வரம்பு மற்றும் வரி வீதங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின், அரசாங்க வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி ஒருங்கிணைப்பு (Fiscal Consolidation) செயற்பாட்டின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு அது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026-10-09
சிறுநீரக நோயாளர்கள் 53,604 பேருக்கு மாதாந்தம் தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக, இவ்வருடம் ஆகஸ்ட் மாதமளவில் அடையாளம் காணப்பட்டிருந்ததாக கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட வாய்மூல விடைக்கான வினாக்களுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்போர் பட்டியல் எதுவும் இல்லை எனவும், விண்ணப்பிக்கும் சிறுநீரக நோயாளர்களின் தகைமைகளின் அடிப்படையில் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2026-10-09
சமூகப் பாதுகாப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்களிலும் 658,081 பேர் இணைந்துள்ளதாகவும், 2026 ஜூலை மாதம் வரையில் ஓய்வூதியம் பெறும் 37,474 பேருக்கு ஓய்வூதியமாக 39,000,500 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். இதற்கமைய ஆரஸ்ஸாவ முன்திட்டமிடல் திட்டத்தில் 551,549 பேரும், சுரெகும ஓய்வூதியத் திட்டத்தில் 106,532 பேரும் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார அவர்களால் முன்வைக்கப்பட்ட வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இத்தகவல்களை வழங்கினார். ஆரஸ்ஸாவ திட்டமானது 17 வயது வரையிலான சிறுவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்திட்டமிடல் ஓய்வூதியத் திட்டமாகும். இதன் கீழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பொறுப்பின் கீழ் சிறுவர்களை இத்திட்டத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள முடியும். இதன்படி, அவர்கள் 18 வயதை அடையும் போது கணக்கு முதிர்ச்சியடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சுரெகும ஓய்வூதியத் திட்டமானது 18 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அரச ஓய்வூதியம் பெறாத, முறைசாராத் துறையில் பணியாற்றும் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், குறிப்பிட்ட இலக்குக் குழுக்களின் தேவைகளுக்கு ஏற்ப கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks