E   |   සි   |  

2023-12-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அஸ்வெசும இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சமூக நலன்புரி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள, அது பற்றிய அனுவம் வாய்ந்த சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளை இணைத்துக் கொள்ளவும் – வழி வககைகள் பற்றிய குழுவினால் பரிந்துரை

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்காக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், நலன்புரி நன்மைகள் சபையின் பிரதிநிதிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் புறக்கணித்திருந்தமையால் குறித்த செயற்பாடு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டதுடன், அவர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் கொடுப்பனவு போன்ற பிரச்சினைகளால் அவர்களின் சேவையைப் பெறமுடியவில்லை. இந்த நடைமுறையைப் பயிற்சி அதிகாரிகளின் ஊடாக மேற்கொண்டதன் காரணமாக நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். கிராம மட்டத்தில் சமூக நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அஸ்வெசும இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு சட்டரீதியான தடைகள் இல்லை என்பது இங்கு தெரியவந்தமையால் பயனாளிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்து வறுமை போன்ற விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை ஆரம்பிக்குமாறும் ஆலோசனை வழங்கிய குழுவின் தலைவர், மின்சாரப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்களைக் கொண்டு வறுமையை அளவீடு செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தான் ஆரம்பம் தொட்டு வலியுறுத்தி வருவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும், சரியான அளவீட்டை அடிப்படையாக எடுக்கும்போது அதனை எவராலும் மறுக்கவோ அல்லது சவாலுக்கு உட்படுத்தவோ முடியாது என்றும் தெரிவித்தார்.

வறியோருக்கான பட்டியலைத் தயாரிக்கும் தேசிய பணியில் இணைந்துகொள்ளத் தயாரா என்றும் குழுவின் தலைவர் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளிடம் வினவினார். அஸ்வெசும செயற்பாட்டின் இரண்டாவது கட்டத்தில் தாம் இணைந்துகொள்கின்றபோதும், 2002ஆம் ஆண்டு 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 21 மற்றும் 22 பிரிவுகளுக்கு அமைய பணியாற்றும்போது பொய்யான தகவல்களின் அடிப்படையில் தாம் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவதற்கும், தண்டனைக்கு உட்படுத்தப்படுவதற்குமான வாய்ப்புக்கள் இருப்பதால் இது குறித்த சட்ட ஏற்பாட்டை நீக்கித்தருமாறும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை காலமும் குறித்த சட்டப்பிரிவின் ஊடாக எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அசௌகரியமும் ஏற்படவில்லை எனக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த சட்டத்தைத் திருத்துதல், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையில் எழுத்துமூல இணக்கப்பாட்டை ஏற்படுத்துதல் மற்றும் நம்பிக்கை, நாட்டின் தேவையின் அடிப்படையில் சுமுகமான இணக்கப்பாட்டுக்கு அமைய பொறுப்பை நிறைவேற்றுதல் போன்று மாற்றுத் தெரிவுகளில் ஒன்றைத் தெரிவுசெய்ய வேண்டும் என்றும், வறியவர்களின் சூழலை நன்கு உணர்ந்து செய்யப்படவேண்டிய நடவடிக்கை என்பதால் குறித்த பணியை முன்னெடுப்பது முக்கியமானது என்றும் அவர் எடுத்துக் கூறினார்.

எவ்வாறாயினும், வாய்மொழி உடன்படிக்கைக்கு பதிலாக சட்டரீதியான குறித்த சட்டத்தைத் திருத்த வேண்டியதன் அவிசியத்தையும் சமுர்த்தி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதன்படி, 2002ஆம் ஆண்டு 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 21 மற்றும் 22 பிரிவுகளைத் திருத்துமாறு நிதி அமைச்சுக்குக் குழு பரிந்துரைத்திருப்பதாகவும், இந்தப் பரிந்துரை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ அசோக் அபேசிங்க, எஸ்.எம்.எம்.முஷாரப், கௌரவ நாளக பண்டார கோட்டேகொட ஆகியோரும் குழுவின் தலைவருடைய அனுமதியைப் பெற்று இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2026-09-25

மூன்று நியமனங்களுக்கு உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான இலங்கையின் புதிய தூதுவராக அன்சுல் பானு ஜான் அவர்களின் நியமனத்திற்கும், கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சந்தன ரோஹண குமார அம்பகொல்ல அவர்களின் நியமனத்திற்கும் உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக நுசித் குமாரதுங்க அவர்களை நியமிப்பதற்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.


2026-09-24

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது ஊடக நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வழிகாட்டி

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களது கண்ணியம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது. கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களின் சிறந்த நலனுக்கு முன்னுரிமை வழங்குதல், உண்மைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையைப் பேணுதல், அத்துடன் சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் தேவையற்ற வகையில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்தல் ஆகியவை இந்த் தேசிய வழிகாட்டியின் பிரதான நோக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அத்துடன், இயலாமையுடைய சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின்போது அவர்களது கண்ணியம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதனிடையே, தமிழ் மொழி பேசும் பிரதேசங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக தமிழ் மொழியைப் பயன்படுத்தக்கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்து பயிற்றுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பெண்களும் சிறுவர்களும் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும்போது எதிர்கொள்ளும் மொழிசார் சிரமங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.நாடு முழுவதும் இயங்கும் சிறுவர் இல்லங்களின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பை முறையாக மேற்கொள்வதற்காக மத்தியப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்தின் பொறுப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.மேலும், ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வது தொடர்பில் காணப்படும் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தொழில்நுட்பக் குழுவொன்றின் ஊடாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகளை மீளச் செலுத்தும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், 2027ஆம் ஆண்டளவில் அனைத்து முன்பள்ளிகளுக்கும் பொதுவான தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுவான பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைமையொன்றை ஏற்படுத்துதல் மற்றும் முன்பள்ளிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளில் காணப்படும் தாமதங்களைக் குறைப்பதற்காக சட்ட வைத்திய அறிக்கைகள் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல், சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான விசேட பொறிமுறையொன்றை உருவாக்குதல் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.சிறுவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனையை சட்டரீதியாகத் தடை செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-23

“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்)" ஆகிய சட்டமூலங்களுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி

பாராளுமன்றத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) ஆகிய சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்  ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு நேற்று (செப். 22) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டன.சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க அவர்கள் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டவரைவு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.2026.09.22 அன்று கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் குறித்தும் சட்டமா அதிபர் குழுவிற்கு விளக்கமளித்தார். அத்துடன், இரு சட்டமூலங்களுடனும் தொடர்புடைய விடயங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் நீதித்துறையின் ஆற்றலை விரிவுபடுத்துதல், மேன்முறையீட்டு நீதிக்கான பிராந்திய மட்டத்திலான அணுகலை மேம்படுத்துதல், விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்தல், நீதிபதிகளின் அனுபவத்தைத் தக்கவைத்தல் மற்றும் நீதிபதிகளை நியமிக்கும் நிறுவன ரீதியான செயன்முறையை மேம்படுத்துதல் ஆகியவை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையையும் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும், மாகாண மட்டத்திலான மேல் நீதிமன்றங்களின் நீதித்துறை ஆற்றலை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் ஆரம்ப நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதுடன், 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குப் பின்னர் மாகாண சிவில் மேல் நீதிமன்றங்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன.இதன் விளைவாக வழக்குகள் குவிந்து காணப்படுவதும், அவற்றை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதங்களும் காரணமாக மேலதிக நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்கள் மற்றும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிப்பதற்காக நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் 4ஆவது பிரிவைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது.சட்டரீதியான ஓய்வுபெறும் வயதெல்லைகளைத் திருத்துவதன் மூலம் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதும் இந்தத் திருத்தங்களின் மற்றுமொரு நோக்கமாகும்.இதற்கமைய, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க,  வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், தர்மப்பிரிய விஜேசிங்க, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.டி. சூரியபண்டார மற்றும் சந்தன சூரியஆரச்சி ஆகியோரும், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர்  ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம மற்றும் கயான் ஜனக ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-23

இயலாமையுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விசேட குழுவின் கவனம்

இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போது இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட குழு அண்மையில்  பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த.த சில்வா, தினேஷ் ஹேமந்த மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போதும், அவர்களது இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைத்து பயன்படுத்தும் போதும் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இங்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள், இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்ப வழங்கப்படும் மருத்துவப் பரிந்துரைகள் மற்றும் அதற்கமைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட மட்டத்தில் மேற்கொள்வது, பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்கான பார்வைப் பரப்பளவு உள்ளிட்ட மருத்துவத் தகைமைகளை கருத்திற்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கக்கூடிய வாகன வகைகளை விரிவுபடுத்துவது, வாகனங்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துவது மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.செவித்திறன் குறைபாடுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போதுள்ள சட்ட நிலைமை, விசேட அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சைகை மொழி பெயர்ப்பாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஊனமுற்ற நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைக்கும் செயன்முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஒரு நபருக்கு பல வாகனங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், மருத்துவப் பரிசோதனை செயன்முறையை எளிமைப்படுத்துதல் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான இணையவழி முறைமையை மேம்படுத்துதல் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள், பிரதேச மட்டத்தில் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு, இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்து உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks