பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-12-01
செய்தி வகைகள் : குழு செய்திகள்
நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சங்கங்களின் பிரதிநிதிகள் துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதற்கமைய, மௌபிம சுரக்ஷா ஒன்றியம், தேசிய நுகர்வோர் முன்னணி, ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணி, கறுவா ஏற்றுமதியாளர்கள் சங்கம், கொம்யூனிகேஷன் உரிமையாளர்களின் சங்கம், கட்டுமான சேவையாளர்கள் சங்கம், அகில இலங்கை வாடகை வீட்டாளர்களின் சங்கம் மற்றும் கீழை நாட்டு காணி உரிமையாளர்களின் சங்கம் என்பன இந்தக் குழுக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பதிரன தலைமையில் கூடிய போதே இந்தத் தரப்பினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, இந்த ஒவ்வொரு தரப்பினரும் தமது முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் குழுவில் முன்வைத்தனர். மௌபிம சுரக்ஷா ஒன்றியத்தின் குழுவினர் குறிப்பிடுகையில், இந்நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், விசேடமாக வீட்டு விவசாயப் பொருளாதாரத்தின் விருத்தி தொடர்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். தேசிய நுகர்வோர் முன்னணி குறிப்பிடுகையில், சந்தையிலுள்ள பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது இடைத்தரப்பினர் பாரிய இலாபம் பெறுவதாகவும் இந்த நிலை இல்லாமல் செய்யப்பட்டு, பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினர். இந்நாட்டின் கல்வியில் நீதி தொடர்பான பகுதியொன்று உள்வாங்கப்படுவது முக்கியமானது என ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
ஏற்றுமதித் துறையுடன் தொடர்புபட்ட சிறிய அளவிலான ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கறுவா ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். Uber, PickMe போன்ற கையடக்கத் தொலைபேசி செயலிகள் (App) இந்நாட்டில் தயாரித்து செயற்படுத்துவது இந்நாட்டில் அந்நியச் செலாவணியை சேகரிப்பதற்கு சிறந்த முறையாகும் என கொம்யூனிகேஷன் உரிமையாளர்களின் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.
கட்டுமான சேவையாளர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகையில், மூலப்பொருட்களின் விலைகளை நிலையானதாக பேணுவது முக்கியமானது எனத் தெரிவித்தனர். அத்துடன், விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் குழுவில் கேட்டுக்கொண்டனர். பெரும்பாலான வாடகை வீட்டாளர்களுக்கு இந்நாட்டில் வாக்குரிமை இல்லை என அகில இலங்கை வாடகை வீட்டாளர்களின் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். அத்துடன், பிள்ளைகளை பாடசாலைகளுக்குச் சேர்க்கும் போது பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும், வங்கிக் கடன் பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளதாகவும், இதற்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.
தேயிலைத் தொழிற்துறை தற்பொழுது முடங்கியிருப்பதாகவும், இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கீழை நாட்டு காணி உரிமையாளர்களின் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
இதன்போது குழுவின் தலைவர், இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுவருவதாகக் குறிப்பிட்டதுடன், ஒரு சில விடயங்கள் தொடர்பில் வருகை தந்திருந்த அரசாங்க அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2026-07-21
இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கை நடைமுறைப்படுத்தல்களை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுஇயலாமையுடைய நபர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலும், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சே அவர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை நிறுவியமைக்காக பாராளுமன்றத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன், இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய அபிவிருத்தியை அனைத்து துறைகளிலும் தேசிய முன்னுரிமையாகக் கருதுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். சட்ட மறுசீரமைப்பு, அணுகல் வசதிகள், கல்வி, வேலைவாய்ப்புகள், சமூக மட்டத்திலான புனர்வாழ்வு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் நிறுவன ரீதியான ஆதரவையும் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.யுனிசெஃப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி பெகோனா அரெலானோ அவர்கள் குறிப்பிடுகையில், விசேடமாக சுகாதாரம், போஷாக்கு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இயலாமையுடைய சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய கொள்கைகளை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ள கண்காணிப்புப் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.அத்துடன், UNFPA, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள், இளைஞர் விவகாரங்கள், கல்வி, இயலாமை நிலையிலுள்ள நபர்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்தைத் தெளிவுபடுத்தினர்.கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலமும் சைகை மொழி தொடர்பான சட்டமூலமும் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்தச் சட்டமூலங்களை 2026 செப்டெம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், அரசாங்க நிறுவனங்களில் அணுகல் வசதிகளை மேம்படுத்துதல், ஊனமுற்ற நபர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் இந்த வருடத்திற்குள் ஊனமுற்ற சிறார்களுக்காக பத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அதேபோன்று, அரசாங்க அமைச்சுக்களின் ஊடாக ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்தல், தேசிய ஊனமுற்றோர் தரவுத் தொகுதியை நிறைவு செய்தல் மற்றும் ஊனமுற்ற நபர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை ஊக்குவிப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்றை நடத்துதல் உள்ளிட்ட எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.கலந்துரையாடலின் நிறைவில், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், ஒன்றியத்தின் கருப்பொருளான “தடையற்ற சமூக வாழ்க்கை” என்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.இந்த நிகழ்வில், ஒன்றியத்தின் கௌரவ பிரதித் தலைவர்களான கயந்த கருணாதிலக்க மற்றும் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்கள், அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், UNFPA, UNICEF, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-20
மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த விசேட குழுவில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தற்பொழுது காணப்படும் விகிதாசார முறை மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றாமல் வைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப வழிமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.முன்மொழியப்பட்ட இந்தத் தேர்தல் முறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் எழக்கூடிய சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் குழு விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஆய்வுக்குப் பின்னர் எதிர்காலக் கூட்டத்தில் இவ்விடயத்தை மீண்டும் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 33% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக வலியுறுத்தியது. இதற்கமைய, தொடர்புடைய தேர்தல் வழிமுறைகளை வகுக்கும்போது இந்தக் கொள்கை முடிவு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, சட்டத்தரணி சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராசபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
2026-07-20
நெல் கொள்வனவு செயன்முறை மற்றும் நாட்டின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், விவசாய உற்பத்திக்கும் சந்தைத் தேவைக்கும் இடையிலான சமநிலையின்மையைக் குறைப்பதற்காகத் துல்லியமான தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.பயிரிடப்படும் பயிர் வகைகள், பயிரிடப்படும் அளவுகள் மற்றும் சந்தைத் தேவைகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலதிக உற்பத்தி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்க முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டது.அரிசி உற்பத்தியைப் பொறுத்தவரையில் சம்பா, கீரி சம்பா, நாடு மற்றும் சிவப்பு அரிசி போன்ற அரிசி வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள் தொடர்பிலும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைத் திட்டமிடுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதேவேளை, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கோரிக்கைக்கு அமைய, 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுtதவிசாளரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவும் பரிசீலிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, கிட்ணன் செல்வராஜ் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோரும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


