பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-07-18
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் செயற்பாடுகள் இந்நாட்டின் அரச சேவையை மேம்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
2019- 2020 ஆம் ஆண்டுகளில் செயற்திறனை வெளிப்படுத்தியிருந்த 65 அரச நிறுவனங்களுக்கு தங்க மற்றும் வௌ்ளி விருதுகளை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன மற்றும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இன்று (18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் நவீனமயப்படுத்தல் என்பவற்றுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை பழமையான முறையின் கீழ் முன்னெடுக்க முடியாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து அரசாங்க நிறுவனங்களும் ஒரு நோக்கத்தின் கீழ் ஒரே திட்டமிடலுடனான பிரிவுகளாக ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அரச செலவீனங்களை கட்டுப்படுத்தல், ஒவ்வொரு ரூபாவிற்கும் உச்ச பெறுமதியை பெற்றுக்கொடுத்தல் , வருமானத்தை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளின் வாயிலாக நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டியது அவசியம் என்றும், அதற்கான வலுவான நிர்வாகக் கட்டமைப்பொன்று நாட்டுக்கு அவசியப்படுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொள்வதற்காக வலயத்தின் பரந்த பொருளாதார கூட்டிணைவான RCEP இல் இணைவது மற்றும் இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
இங்கு உரையாற்றிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண, விருதுகளைப் பெற்றுக்கொண்ட அரசாங்க நிறுவனங்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், 2015ஆம் ஆண்டில் இருந்ததைவிட அரசாங்க நிறுவனங்கள் 98 வீதம் முன்னேற்றம் கண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பொதுக் கணக்குகளைப் பராமரிக்கும் முறைமை, நிதிக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் என்பன பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் செயல்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட முறையில் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்படுவதுடன், அதற்கமைய, கணக்காய்வாளர் நாயகத்தினால் பகுப்பாய்வு மற்றும் விசாரணை செய்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைய சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய அரச நிறுவனங்களுக்கு இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய, 833 அரச நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 2019 ஆம் ஆண்டில் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிறுவனங்களுக்கு தங்க விருதுகளும் 30 நிறுவனங்களுக்கு வெள்ளி விருதுகளும், 2020 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிறுவங்களுக்கு தங்க விருதுகளும் 30 நிறுவனங்களுக்கு வெள்ளி விருதுகள் வழங்கப்பட்டன.
அரசாங்க அமைச்சுக்கள், அரசாங்கத் திணைக்களங்கள், அரசாங்கத்தின் விசேட செலவின அலகுகள், மாவட்ட செயலகங்கள், மாகாண சபை நிதியங்கள், மாகாணசபைகளின் அமைச்சு திணைக்களம்சார் விசேட செலவின அலகுகள், மாகாண சபைகளின் நியதிச்சட்டநிறுவனங்கள், மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
எட்டாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் எண்ணக்கருவுக்கு அமைய அரச நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்திறனை முறைமைப்படுத்தும் நோக்கில் அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் கணினிமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் 2015 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகளின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட சுமார் 1000 அரச நிறுவனங்கள் Zoom தொழிநுட்பத்தினூடாக இணைந்துகொண்டனர்.
இதில் இதன்போது, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்ரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-25
நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 25) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.13ற்கு ஆரம்பானது. வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து குழுநிலையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரைக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாவது திருத்தத்ச் சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.இதன் பின்னர், சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.53 மணிக்கு இடம்பெற்றது. குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மூன்றாவது மதிப்பீடு 96 மேலதிக வாக்குகளால் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முதலாவது மதிப்பீடுக்காக ஓகஸ்ட் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இச்சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் (24) இன்றையதினமும் (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.
2026-09-25
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தூதுக்குழுவினர் செப்டெம்பர் 24ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்து, கௌரவ சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான பேராசிரியர் ஸ்வென் சிமொன் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரால்ஃப் சீக்காட்ஸ், ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) குழுவின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான ஆலோசகர் பெஞ்சமின் ஒப்பர்மான், KAS சிங்கப்பூரின் ஆசியாவுக்கான பிராந்திய அரசியல் கலந்துரையாடல் திட்டத்தின் கொள்கை ஆலோசகர் ஜோனாஸ் நிட்ஷ்கே, KAS பிரஸ்ஸல்ஸின் சர்வதேச அபிவிருத்திக் கொள்கை கலந்துரையாடல் திட்ட முகாமையாளர் ஸ்வென் நிக்கொலாய், சட்டத்தரணியும் IDAG நிறுவனத்தின் பதிவாளரும் பணிப்பாளருமான சி.ஏ.ஹெட்டியாராச்சி மற்றும் IDAG நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் எஸ்.விமலாகுணரத்ன ஆகியோரும் இத்தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினரை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்றதுடன், இலங்கை பாராளுமன்றத்திற்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் இரு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.இச்சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்மட்டப் பரிமாற்றங்களை சபாநாயகர் நினைவுகூர்ந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈடுபாட்டிற்கு தனது பாராட்டைத் தெரிவித்தார். இது இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கும் சர்வதேச தரநிலைகளைப் பேணுவதற்கான அதன் முயற்சிகளுக்கும் பங்களிப்புச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல், ஊழலை எதிர்த்துப் போராடுதல், நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் மற்றும் பெண்களின் உரிமைகளை மேலும் மேம்படுத்துவதற்கான பொறிமுறைகளை நிறுவுதல் உள்ளிட்ட துறைகளில் இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுக்குழுவிற்கு விளக்கமளித்தார். இயலாமையுடைய நபர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிகளவிலான உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமை, ஜனநாயக ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகியன குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இலங்கையின் அரசியல் மற்றும் சமூகச் சூழல், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் சுமுகமான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டனர்.இக்குழுவினர் கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்தனர். அரசியலமைப்புத் திருத்தச் செயற்பாடு, இலங்கையின் அரசியல் முறைமை மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமை தொடர்பில் சுமுகமான கலந்துரையாடலையும் நடத்தியிருந்தனர்.இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றமும் ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்கு பிரதி சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இலங்கை மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் இத்தகைய ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தூதுக்குழுவினர் தனித்தனியான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோரையும், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, சம்பிக்க ஹெட்டிஆராச்சி ஆகியோரையும் சந்தித்திருந்தனர்.இக்கலந்துரையாடல்களில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமை, நாடு எதிர்நோக்கும் சவால்கள், அரசியலமைப்பின் இருபத்திரண்டாவது திருத்தத்தின் பின்னணி மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினர் சபாநாயகர் கலரியிலிருந்து சபை நடவடிக்கைகளையும் பார்வையிட்டதுடன், சபாநாயகர் சபையில் அறிவிப்பை வெளியிட்டு அவர்களை வரவேற்றார்.மேலும், தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர். இதன்மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.
2026-09-24
பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீபு லெவ்வை முஹம்மது ஹிபான் அவர்கள் இன்றையதினம் (செப். 24) கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம். எஸ். அப்துல் வாஸித் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.தொழில்ரீதியாக சட்டத்தரணியான ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் மட்டக்களப்பு, ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ளார். மேலும், அவர் ஸ்ரீலங்கா காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளராகவும் தற்போது செயற்பட்டு வருகின்றார்.
2026-09-23
இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுவலுசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு இன்று (செப். 23) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபா நிதி மானியத்தை வழங்குவதற்கான குறைநிரப்பு மதிப்பீடும் அங்கீகரிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு 2026.09.22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டிற்குத் தேவையான நிதியொதுக்கீடானது, 2026 ஆம் ஆண்டிற்காக நிரல் அமைச்சுகளுக்கு (Line Ministries) ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்படமாட்டாது என அடையாளம் காணப்பட்ட நிதியொதுக்கீடுகளின் மூலமே பெறப்படுகின்றது. அதற்கமைய, இந்நிதியொதுக்கீட்டு பரிமாற்றமானது 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொத்தச் செலவின எல்லைக்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்சக் கடன் பெறும் எல்லைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு நேற்று (22) அரசாங்க நிதி பற்றிய குழுவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், அதற்கான குழுவின் அங்கீகாரமும் வழங்கப்பட்டது.இதேநேரம், இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலமும் திருத்தமும் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாக இது அமைந்துள்ளது.ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் நிறுவனக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் புதிய பதவிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள பதவிகளைத் தரமுயர்த்துதல் மேற்கொள்ளப்பட்டபோது, “பணிப்பாளர்” என்ற பதவிப் பெயர் “பணிப்பாளர் நாயகம்” என மாற்றப்பட்டிருந்த போதிலும், 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தில் அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் திருத்தப்படவில்லை.அத்துடன், தொடர்புடைய ஏனைய திருத்தப்பட வேண்டிய பதவிப் பெயர்களும் திருத்தப்படாமல் இருந்தன. இந்தச் சட்டமூலத்தின் மூலம் அவ்வாறான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், குறித்த சட்டத்தில் “அறிவிக்கப்பட்ட விவசாயப் பயிர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் வரைவிலக்கணங்கள், தற்போதைய உற்பத்தி மற்றும் சந்தை நிலைமைகளை கருத்திற்கொள்ளும்போது நடைமுறைக்கு ஒவ்வாத தன்மைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய மற்றும் எதிர்கால ஏற்றுமதி விவசாயத் துறைக்கு பொருத்தமான வகையில் குறித்த வரைவிலக்கணத்தை மீள வரையறுத்து திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.அதற்கமைய, சட்டத்தின் 19 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள “ஏற்றுமதி விவசாயப் பயிர்” என்ற பதத்தின் வரைவிலக்கணத்திற்குப் பதிலாக, உணவுப் பயிர் வகையைச் சேர்ந்த நெல், மரக்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் மற்றும் மேலதிக உணவுப் பயிர்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, உள்நாட்டு நுகர்வுக்கு மேலதிகமாக ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட பயிராக அடையாளம் காணப்பட்டு, இந்தச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் “அறிவிக்கப்பட்ட விவசாயப் பயிராக” பொறுப்பான அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு பயிரைக் குறிக்கும் வகையில் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்டப் பயிராக அடையாளம் காணப்படும் எந்தவொரு பயிரும் இதற்குள் உள்ளடக்கப்படக் கூடாது என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
விருது வென்றவர்கள்




