பார்க்க

E   |   සි   |  

2026-09-23

செய்தி வகைகள் : செய்திகள் 

வலுசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு பாராளுமன்ற அங்கீகாரம்

  • இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

வலுசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு இன்று (செப். 23) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபா நிதி மானியத்தை வழங்குவதற்கான குறைநிரப்பு மதிப்பீடும் அங்கீகரிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு 2026.09.22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டிற்குத் தேவையான நிதியொதுக்கீடானது, 2026 ஆம் ஆண்டிற்காக நிரல் அமைச்சுகளுக்கு (Line Ministries) ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்படமாட்டாது என அடையாளம் காணப்பட்ட நிதியொதுக்கீடுகளின் மூலமே பெறப்படுகின்றது. 

அதற்கமைய, இந்நிதியொதுக்கீட்டு பரிமாற்றமானது 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொத்தச் செலவின எல்லைக்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்சக் கடன் பெறும் எல்லைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு நேற்று (22) அரசாங்க நிதி பற்றிய குழுவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், அதற்கான குழுவின் அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

இதேநேரம், இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலமும் திருத்தமும் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாக இது அமைந்துள்ளது.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் நிறுவனக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் புதிய பதவிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள பதவிகளைத் தரமுயர்த்துதல் மேற்கொள்ளப்பட்டபோது, “பணிப்பாளர்” என்ற பதவிப் பெயர் “பணிப்பாளர் நாயகம்” என மாற்றப்பட்டிருந்த போதிலும், 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தில் அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் திருத்தப்படவில்லை.

அத்துடன், தொடர்புடைய ஏனைய திருத்தப்பட வேண்டிய பதவிப் பெயர்களும் திருத்தப்படாமல் இருந்தன. இந்தச் சட்டமூலத்தின் மூலம் அவ்வாறான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சட்டத்தில் “அறிவிக்கப்பட்ட விவசாயப் பயிர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் வரைவிலக்கணங்கள், தற்போதைய உற்பத்தி மற்றும் சந்தை நிலைமைகளை கருத்திற்கொள்ளும்போது நடைமுறைக்கு ஒவ்வாத தன்மைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய மற்றும் எதிர்கால ஏற்றுமதி விவசாயத் துறைக்கு பொருத்தமான வகையில் குறித்த வரைவிலக்கணத்தை மீள வரையறுத்து திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டத்தின் 19 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள “ஏற்றுமதி விவசாயப் பயிர்” என்ற பதத்தின் வரைவிலக்கணத்திற்குப் பதிலாக, உணவுப் பயிர் வகையைச் சேர்ந்த நெல், மரக்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் மற்றும் மேலதிக உணவுப் பயிர்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, உள்நாட்டு நுகர்வுக்கு மேலதிகமாக ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட பயிராக அடையாளம் காணப்பட்டு, இந்தச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் “அறிவிக்கப்பட்ட விவசாயப் பயிராக” பொறுப்பான அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு பயிரைக் குறிக்கும் வகையில் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்டப் பயிராக அடையாளம் காணப்படும் எந்தவொரு பயிரும் இதற்குள் உள்ளடக்கப்படக் கூடாது என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

2026-09-24

பாராளுமன்ற உறுப்பினராக ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீபு லெவ்வை முஹம்மது ஹிபான் அவர்கள் இன்றையதினம் (செப். 24) கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம். எஸ். அப்துல் வாஸித் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.தொழில்ரீதியாக சட்டத்தரணியான ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான்  அவர்கள் மட்டக்களப்பு, ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ளார். மேலும், அவர் ஸ்ரீலங்கா காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளராகவும் தற்போது செயற்பட்டு வருகின்றார்.


2026-09-23

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்)  சட்டமூலத்திற்கு கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் நேற்று (செப். 22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இது தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம்  கடந்த செப்டெம்பர் 09ஆம் திகதி இடம்பெற்று சபையில் நிறைவேற்றப்பட்டது.பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை அறிமுகப்படுத்திய 2009ஆம் ஆண்டின் 35ஆம் ஆண்டு இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமைதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.இதற்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூலம் 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டம் நீக்கப்படுவதுடன், குறித்த உதவியும் இரத்துச் செய்யப்படுகிறது. மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதுடன், பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படும்.அதன்படி, மேற்குறிப்பிட்ட சட்டமூலம் 2026ஆம் ஆண்டு 22ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்)  சட்டமாக நேற்று (22) முதல் நடைமுறைக்கு வருகிறது.


2026-09-22

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.09.22

“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்)" ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்)" ஆகிய சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் கலாநிதி  ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (22) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.இந்த அறிவிப்பு பின்வருமாறு;அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்”  மற்றும் “நீதித்துறை (திருத்தம்)”எனும் சட்டமூலங்கள் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானித்துள்ளது;•    அரசியலமைப்பின் 83-வது உறுப்புரையின் ஏற்பாடுகளின்படி, "அரசியலமைப்பிற்கான இருபத்திரண்டாவது திருத்தச் சட்டமூலம்" அல்லது அதன் எந்தவொரு பகுதியையும்  மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை.•    “அரசியலமைப்பிற்கான இருபத்தி இரண்டாவது திருத்தம்” மசோதாவின் வாசகம் 2 இல் உள்ள காப்பு வாசகத்தின் படி, அதில் தோன்றும் “හැට හතට එලඹෙන දිනය” என்ற சொற்றொடர் “හැට හත සම්පූර්ණ කළ දිනය” என்ற சொற்றொடரால் மாற்றப்படும்.•        "அரசியலமைப்பிற்கான இருபத்திரண்டாவது திருத்தச் சட்டமூலத்தின்" வாசகம் 2க்கு இரண்டாவது காப்பு வாசகமாக பின்வருவன சேர்க்கப்பட வேண்டும்:"மேலும், முதல் காப்பு வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வருட பதவிக்கால வரம்பு, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் எந்தவொரு நபருக்கும் பொருந்தாது."மேலும், உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானித்துள்ளது:•    "நீதித்துறை (திருத்த)" சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல; எனவே, இதனை பாரளுமன்றத்தின் எளிய பெரும்பான்மை மூலம் நிறைவேற்றலாம்.உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன்.


2026-09-21

செப்டம்பர் 22, 23 ஆகிய திகதிகளுக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம்

செப்டம்பர் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற வாரத்தில், செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளுக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இன்று (செப். 21) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாம் மதிப்பீடு), செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகச் சட்டமூலத்தைச் சமர்பிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் 2497/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான “ட்ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் இரண்டாம் வாசிப்பின் பின்னர், சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.அத்துடன், செப்டம்பர் 23 ஆம் திகதி புதன்கிழமை மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபா நிதி மானியத்தை வழங்குவதற்கான குறைநிரப்பு மதிப்பீடும் அங்கீகரிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு 2026.09.22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டிற்குத் தேவையான நிதியொதுக்கீடானது, 2026 ஆம் ஆண்டிற்காக நிரல் அமைச்சுகளுக்கு (Line Ministries) ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்படமாட்டாது என அடையாளம் காணப்பட்ட நிதியொதுக்கீடுகளின் மூலமே பெறப்படுகின்றது. அதற்கமைய, இந்நிதியொதுக்கீட்டு பரிமாற்றமானது 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொத்தச் செலவின எல்லைக்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்சக் கடன் பெறும் எல்லைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளுக்குத் தீர்மானிக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks