2023-07-01
செய்தி வகைகள் : குழு செய்திகள்
குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்றுவரும் இளம் குற்றவாளிகளுக்கு தற்பொழுது காணப்படும் பொதுவான கல்வி முறையின் கீழ் கற்பிப்பது தோல்வியடைந்திருப்பதாகவும், அவர்களுக்காக ஆன்மீக வளர்ச்சி மற்றும் நடத்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், அவர்களுக்குத் தொழிற்கல்வி வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், அதே போல் ஒரு வருட பயிற்சிக் காலம் முடிந்து மீதமுள்ள 2 ஆண்டுகளில் வருமானம் ஈட்டும் முறை போன்றவற்றை அறிமுகப்படுத்துவது, சிறுவர்கள், 3 வருட வதிவிடக் காலப் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறும்போது பொருளாதார வசதிகளுடன் வெளிச்செல்ல முடிந்தால் குற்றச்செயல்கள் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள வட்டரக்க இளம் குற்றவாளிகள் பயிற்சிக் கல்லூரி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவை நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டிலான் பெரேரா தலைமையில் அண்மையில் கூடியது.
16 - 22 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் குற்றம் செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட இளம் குற்றவாளிகள் இந்த நிறுவனத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். தண்டனைக் காலம் சிறைத்தண்டனை அல்ல, 03 ஆண்டுகள் கட்டாயத் தடுத்துவைப்புக் காலம் என்றும், தடுத்துவைப்பு காலத்திற்குப் பின்னர் சிறுவர்கள் வெளி சூழலில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் வட்டரக்க இளம் குற்றவாளிகள் பயிற்சிக் கல்லூரியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ.வி.வஜிரா தமயந்தி தெரிவித்தார்.
நிறுவனத்தின் தரவுகளின்படி, 2013-2022 காலகட்டத்தில் இளம் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் போக்குக் குறைவடைந்து வருவதாகவும், இந்தப் பயிற்சிக் கல்லூரியில் நுழையும் பல சிறுவர்களின் குடும்ப உறவுகள் இல்லாமல் போவதும் தெரியவந்துள்ளது.
வட்டரக்க இளம் குற்றவாளிகள் பயிற்சிக் கல்லூரியில் கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைய பாடசாலைக் கல்வி வழங்கப்படுவதாகவும், இது அவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைய அங்குள்ள சிறுவர்கள் பொதுவான பரீட்சைகளுக்குத் தோற்றுகின்றபோது தேர்ச்சிவீதம் குறைவாகவே காணப்படுகிறது. அதாவது 2014ஆம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சிறுவர்களின் எண்ணிக்கை 16 ஆக இருந்த போதிலும் அவர்களில் ஒருவரே சித்தியடைந்துள்ளார். 2021ஆம் ஆண்டில் ஒரு சிறுவர் மாத்திரமே தேர்ச்சியடைந்துள்ளார்.
பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்கும் சட்டத்தின் மூலம் அவர்களுக்குத் தொழில்முறை கல்வியை திறம்பட வழங்குவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இந்தப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க குழு இணங்கியது.
இளம் குற்றவாளிகளில் எத்தனை பேர் மீண்டும் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்புள்ளது என்ற கேள்வியை குழு எழுப்பியது, இதற்குப் பதில் வழங்கிய அதிகாரிகள் 11 பேரில் 9 பேர் மீண்டும் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்புள்ளது என்றனர்.
இந்தச் சிறுவர்களுக்கான மொழிப் புலமையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக இச்சிறுவர்களுக்கு வெளிநாட்டு வேலைகளுக்குப் பரிந்துரைப்பதற்கான சில வழிமுறைகளை தயாரிப்பது தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
சிறைச்சாலைகளில் காணப்படும் அதிக நெருக்கடியைக் குறைக்க சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தைப் பயன்படுத்த முடியும் எனவும், எனவே அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் குழு சுட்டிக்காட்டியது.
சமூக அடிப்படையிலான திருத்தங்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டியவர்களில், ஆனால் நீதவான்களால் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சுமார் 50% பேர் திருத்தங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம் என்பதும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது மிகவும் சிக்கலான நிலை என சுட்டிக்காட்டிய குழு, இது தொடர்பில் நீதிபதிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தது.
அரச நிறுவனங்களைப் பரிசீலிக்கும் போது, ஒரே நோக்கத்திற்காக பல நிறுவனங்கள் இருப்பதும், அந்த நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகள் இன்மையும் பிரச்சினையாக உள்ளதாக இளைஞர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
திட்டங்களை முன்வைக்கும்போது, பசுமைத் திட்டங்கள், பிளாஸ்டிக் மற்றும் குடிநீர் போத்தல்களை மீள்சுழற்சி செய்யும் திட்டங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் வருமானத்தை உருவாக்கும் செயல்முறைகளை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் முன்மொழிந்தனர்.
மேலும், அரசாங்கத்தின் உதவியுடன் ஓரளவு வருமானம் ஈட்டுபவர்கள் அந்தப் பணத்தில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும், அத்தகைய பணத்தை மற்றவர்களுக்கு முதலீடு செய்வதன் மூலம் இதுபோன்ற திட்டங்களைச் செய்ய அரசாங்க நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரச நிறுவனங்கள் பொது நிதியில் தங்கியிருப்பதை தவிர்த்து, தமது கட்டுப்பாட்டிற்கு தேவையான பணத்தை வழங்க வேண்டும் என இளைஞர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். பல்கலைக்கழகங்கள் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சிகளை கொள்கை வகுப்பாளர்களுடன் இணைப்பது முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கௌரவ ரஜிகா விக்ரமசிங்க ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-08-18
உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
2026-08-18
கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 16) நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் செயலமர்வுகளின் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரிஎல்லே, எஸ். எம். மரிக்கார், லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.இளைஞர் சமூகத்தினர் கல்வி மற்றும் உயர் கல்வி, அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் நடவடிக்கைகள், இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இளைஞர்களின் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் எதிர்கால பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது தொடர்பில் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஆவணப்படுத்தி, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திடம் திறந்த இளைஞர் அறிக்கையாளர்கள் (Youth Rapporteurs) நியமிக்கப்பட்டனர்.இந்த செயலமர்வுக்கு CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் அனுசரணை வழங்கியது.
2026-08-11
இலங்கையில் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனுடனும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த மேற்பார்வைக் குழுவில், காணித் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, அரச காணிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பொன்றின் ஊடாக வலையமைப்பில் இணைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரச காணிகளின் உரிமை, எல்லை நிர்ணயம் மற்றும் தொடர்புடைய தகவல்களை ஒரே தரவுக் கட்டமைப்பின் கீழ் பேணுவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமறைப்படுத்த முடியும் எனவும், GPS ஆயத்தொலைவுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் காணித் தரவுக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் காணப்படும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காணி முகாமைத்துவத் துறையில் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் தரவுக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் மேலும் அதிகரிக்க முடியும் என குழு வலியுறுத்தியது.அத்துடன், 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களின் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகளைப் போக்குவரத்து செய்வதையும் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கும், விலங்குகளின் போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால் மற்றும் வாய் நோய் போன்ற விலங்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்மொழிவொன்றும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் தனியார் காணி வரைபடங்களை இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் வைப்பது, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, ரொஷான் அக்மீமன, சுசந்த குமார நவரத்ன, கிட்டினன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் ருவன்திலக ஜயகொடி ஆகியோரும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-08-11
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் நிதி முகாமைத்துவம், நிறுவன ஆளுகை, உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு, டிஜிட்டல் கட்டமைப்புகளின் முகாமைத்துவம், ஒழுக்காற்று விசாரணைகள், வெளிநாட்டு கல்வி விடுமுறையைப் பெற்றுக்கொண்ட விரிவுரையாளர்களின் பிணை ஒப்பந்தங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பேராதனைப் பல்கலைக்கழகம் உள்நாட்டு தரவரிசையில் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், உலகளாவிய தரவரிசையில் பின்னடைவை எதிர்கொள்வதாகக் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இது பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்ததன் காரணமாக ஏற்பட்ட நிலைமையல்ல என்றும், சர்வதேச போட்டித்தன்மை அதிகரித்துள்ளதன் காரணமாக ஏற்பட்ட நிலைமையாகும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தரவு முகாமைத்துவம் தொடர்பிலும் குழு விசேட கவனம் செலுத்தியது. ERP கட்டமைப்பின் நிலையான சொத்துக்கள் குறித்த மொடியுலை நடைமுறைப்படுத்தும்போது சேவை வளங்குனரின் திறன் போதுமானதாக இல்லாமை, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை, தனியார் துறையுடன் ஒப்பிடுகையில் நிலவும் சம்பள வேறுபாடுகள் காரணமாக திறமையான தொழில்நுட்ப அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் காணப்படும் சிரமம், கட்டமைப்புகளைப் புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாத மென்பொருள் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நிரந்தரமானதும் நிபுணத்துவம் வாய்ந்ததுமான தொழில்நுட்பக் குழுவொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பிலும் குழு கடுமையான கவனம் செலுத்தியதுடன், சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாமல் இருப்பது மற்றும் சட்டரீதியான, நிர்வாகரீதியான தாமதங்கள் காரணமாக நிறுவனத்திற்கு நிதி மற்றும் நிர்வாக ரீதியில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்தது.வெளிநாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத விரிவுரையாளர்கள் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. இதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பில் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 201 மில்லியன் ரூபாய் தொகையை மீளப் பெற்றுக்கொள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முடிந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்தப் பிரச்சினையை தனியொரு பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரம் தீர்க்க முடியாத காரணத்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு அனைத்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் வகையில் தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், பிணை ஒப்பந்தங்களை மீறிய விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி, அவர்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையவழி ஊடாக இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் பங்களிக்கச் செய்வது போன்ற மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.இறுதியாக, பல்கலைக்கழகத்தின் ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேலும் வலுப்படுத்துவதற்காக, கணக்காய்வு பரிந்துரைகள் மற்றும் குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும் கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டிஆரச்சி, தினேஷ் ஹேமந்த, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷண எகொட விதான, எம். கே. எம். அஸ்லம் மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.