பார்க்க

01

E   |   සි   |  

2023-05-18

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சட்டவிரோத குடியகல்வைத் தடுக்க தனியான பிரிவை நடைமுறைப்படுத்தி, அதன் முன்னேற்றத்தை மூன்று மாதங்களில் அறிவிக்குமாறு பாராளுமன்ற விசேட குழு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல்

சட்டவிரோதமான குடியகல்வைத் தடுக்கும் வகையில் ‘பாதுகாப்பான குடியகல்வு ஊக்குவிப்புப் பிரிவை’ (Safe Migration Promotion Unit) மூன்று மாதங்கள் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு  சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தது.

இந்த விசேட குழு அதன் தலைவர் கௌரவ (டாக்டர்) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓமானில் இடம்பெற்றதாக அறிக்கையிடப்படும் ஆட்கடத்தல் வியாபாரம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்யும் நோக்கில் இக்கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள்,  வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தப் பிரிவை அமைப்பதன் ஊடாக சுற்றுலா விசாவில் சென்று பின்னர் வேலைசெய்வதற்கான விசாவைப் பெற்று மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான செயற்பாடுகளைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய இந்த விசேட குழு, இப்பிரிவை முன்னோடித் திட்டமாக மூன்று மாதங்கள் நடைமுறைப்படுத்தி அது குறித்த அறிக்கையைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்டவை இணைந்து அங்கம் வகிக்கும் விசேட செயலணியின் ஊடாக இந்தப் பிரிவை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் ஓமானில் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றும் போலி முகவர்களிடமிருந்து அப்பாவித் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த ஆட்சேபனை இல்லாமைக்கான சான்றிதழ் முறைமையை (No Objection Certificate) மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் குழு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வலியுறுத்தியது. இது தொடர்பில் ஏற்கனவே ஓமான் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும், மீண்டும் இது பற்றிக் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சத்தியக்கடதாசி வழங்கும் முறையை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயுமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு, பாராளுமன்ற விசேட குழு ஆலோசனை வழங்கியது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான புதிய சட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் போது போலி முகவர்களால் ஏமாற்றப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் பிரதேச செயலக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் கௌரவ சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரோஹினி கவிரத்ன, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4



தொடர்புடைய செய்திகள்

2026-11-03

புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவூட்டும் விசேட சந்திப்பு பிரதமர் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது

திருத்தியமைக்கப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம்  கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் (NIE) உள்ளிட்ட கல்வித்துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் கலந்துகொண்டனர்.அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, 2026 ஏப்ரல் மாதமளவில் கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் பாடத்துறை நிபுணர்களைக் கொண்ட தேசியக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பிரதான உபகுழுக்கள் ஊடாக இதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படுவதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, 2026 ஆம் ஆண்டில் தரம் 1 இற்கும், 2027 ஆம் ஆண்டில் தரம் 6 மற்றும் தரம் 2 இற்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்குத் தேவையான ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், கற்றல் தொகுதிகள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களை அச்சிடுதல், பாடசாலைகளில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இதன்போது, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன மற்றும் கல்வித்துறை அதிகாரிகளினால் புதிய கல்வி மறுசீரமைப்புக்களின் அடிப்படை, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, மதிப்பீட்டு முறைமைகள் மற்றும் எதிர்காலச் செயற்திட்டம் தொடர்பில் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.2019 ஆம் ஆண்டில் இந்தச் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டதாகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவினால் 2023 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட புதிய கொள்கைக்கு அமைய தேசிய கல்வி நிறுவகத்தினால் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டதாகவும், இது பல நிறுவனங்களின் கூட்டான முயற்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் மிகவும் முன்னேறிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணையான சீர்திருத்தங்கள் இதன் மூலம் எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.பொதுக் கல்வியின் அடிப்படை நோக்கம் சந்தைக்குத் தேவையான எதிர்காலத் தொழிலாளர்களை உருவாக்குவது மாத்திரமல்ல என்றும், ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் விழுமியங்கள் நிறைந்த முழுமையான ஆளுமையைக் கொண்ட பிரஜைகளையும், நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்காலச் சந்ததியினரையும் உருவாக்குவதே அதன் நோக்கம் என்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.தற்போது நடைமுறையிலுள்ள பாட உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட (Content-based) கல்வி முறைக்குப் பதிலாக, கற்றல் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட (Outcome-based) மற்றும் மாணவர் மையக் கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மனப்பாடம் செய்து பரீட்சைகளுக்குத் தோற்றும் அழுத்தத்தையும், பரீட்சையை மையமாகக் கொண்ட கல்விச் சுமையையும் குறைக்கும் வகையில், கற்றல் அலகுகளுக்கான புள்ளி (Credit) அடிப்படையிலான முறைமையும், ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான மதிப்பீடுகள் (Continuous Assessments) மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான புதிய மதிப்பீட்டுக் கட்டமைப்பும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தரம் 6 முதல் தொழில் துறைகள் தொடர்பான புரிதலை மாணவர்களுக்கு வழங்குவதற்கும், தரம் 12 மற்றும் 13 இல் NVQ Level 4 வரையிலான தொழில் தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அல்லது உயர்கல்விக்குச் செல்வதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் நெகிழ்வான மாற்றுக் கல்விப் பாதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நோக்கில் 'RIES' இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பல கட்டங்களாக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.கல்வியின் அடிப்படை நோக்கம் பிள்ளைகளை எதிர்காலத் தொழிலாளர்களாக உருவாக்குவது மாத்திரமல்ல என்றும், அவர்களை முழுமையான மனிதர்களாகவும் பொறுப்புமிக்க நாட்டைக் கட்டியெழுப்புபவர்களாகவும் உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்றும் இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதமர் வலியுறுத்தினார்.சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்போது எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தனிப்பட்ட மனப்பாங்குகள் அல்லது கருத்துக்களின் அடிப்படையில் மாத்திரம் தீர்மானங்களை எடுக்காமல், விஞ்ஞானபூர்வமான ஆய்வு ஆதாரங்களை (Evidence) ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கலந்துரையாடலில் பங்கேற்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.இந்தத் தேசியப் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.கௌரவ கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்விப் பிரதி அமைச்சர் கௌரவ நளின் ஹேவகே, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா உள்ளிட்ட பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-11-03

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைப்பதற்கான சட்டத் திருத்தங்கள் மற்றும் மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைப்பதற்காக சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.குறித்த குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் கடந்த ஒக். 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பது தொடர்பில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளைப் பங்கேற்கச் செய்து இக்குழுவினால் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மற்றுமொரு கட்டமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள், திறந்த சிறைச்சாலைகள் மற்றும் வேலை முகாம்கள் தொடர்பான நடைமுறைகள், நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்தல் மற்றும் நன்னடத்தையைக் கொண்ட கைதிகளை வேலைவாய்ப்புத் திட்டங்களில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட முன்மொழிவுகள் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.அத்துடன், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பணியாளர் எண்ணிக்கை, போக்குவரத்து வசதிகள் மற்றும் மேலதிக நேரப் பணிகளை அதிகரிப்பதன் மூலம் தேங்கிக் கிடக்கும் அறிக்கைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைப்பதற்கான உரிய சட்ட மற்றும் நிர்வாகத் திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதுடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் இடையில் ஒருங்கிணைப்புடன் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து குழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.


2026-10-30

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட கலந்துரையாடல், அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு மத்தியூ ஜோன் டக்வர்த் உள்ளிட்ட அதிகாரிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின்  பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.ஒன்றியத்தின் பிரதித் இணைத் தலைவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் மற்றும் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவான விளக்கமொன்றை வழங்கினார்.மாவட்ட மட்டத்தில் இயலாமையுடைய நபர்கள் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகளை இணைத்துக்கொண்டு தொடர்ச்சியான ஆலோசனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், வட மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் இந்நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் ஆறு மாவட்டங்களில் இந்நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் பிரதித் இணைத் தலைவர் தெரிவித்தார்.அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்காக, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பங்கேற்புடன் முன்மொழிவுகள் திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சின் வரவுசெலவுத் திட்டத்திலும் இயலாமையுடைய நபர்களின் சமூகத்திற்கெனத் தனியான செலவின ஒதுக்கீட்டுத் தலைப்பொன்றை உள்ளடக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.1996ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்திற்குப் பதிலாக, சர்வதேச தரநிலைகளுக்கு அமைவான புதிய இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றுதல், சைகை மொழிச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் விசேட கல்வித்துறையில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகளையும் ஒன்றியம் முன்னெடுத்து வருகிறது.செவித்திறன் குறைபாடுடையவர்கள் அவசரநிலைகளின்போது 119 பொலிஸ் அவசர அழைப்புச் சேவையைச் சைகை மொழி மூலம் அணுகக்கூடிய வகையில், சைகை மொழிப் பயிற்சி பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் வட்சப் (WhatsApp) காணொளி அழைப்புச் சேவையொன்று ஒன்றியத்தின் தலைவரின் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த. த சில்வா ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி, பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தினால் வழங்கப்படும் 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை ஒரு முக்கிய சாதனையாகும் என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார். மேலும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் ஒரு முக்கியமான வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டார்.கலந்துரையாடலில் பங்கேற்ற அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இயலாமையுடைய நபர்களின் சமூகத்தை ஏனைய சமூகங்களுடன் சமநிலையில் முன்னேற்றுவது ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், அது அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய இலக்காகவும் அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். தரவுக் கட்டமைப்புகளை உருவாக்குதல், சைகை மொழி அகராதிகளைத் தயாரித்தல் உள்ளிட்ட கொள்கை மற்றும் சட்டத் திருத்த நடவடிக்கைகளுக்கு நீண்டகால அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய விரிவான செயற்றிட்டமொன்று (Action Plan) முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்புடன் இலங்கையின் இயலாமையுடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஒன்றியத்தின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர்.


2026-10-29

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் முன்னெடுப்பில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான நாடளாவிய விசேட வேலைத்திட்டம் நவம்பர் 02ஆம் திகதி

இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதையும், அது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் சுகாதார அமைச்சுடன் இணைந்து விசேட தேசிய வேலைத்திட்டத்தை நவம்பர் 02ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவியும் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில், அண்மையில் (22) கூடிய ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.மார்பகப் புற்றுநோயின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இங்கு விளக்கிக் கூறினர். வருடாந்தம் இலங்கையில் ஏறத்தாழ 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகுவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாகச் சிகிச்சை பெறுவதைத் தாமதிப்பது முக்கிய பிரச்சினையாக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதற்கமைய, நவம்பர் 02ஆம் திகதி திங்கட்கிழமை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் சுகாதார மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதுடன், அவற்றில் நேரடியாகவும் பங்கேற்கவுள்ளனர். இதன்போது, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் இளஞ்சிவப்பு நிறச் சின்னங்கள் (Pink Ribbons / Pink Wristbands) மற்றும் ஆடைகளைப் பயன்படுத்தி, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான இளஞ்சிவப்பு மாதத்திற்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.கிராமப்புறங்கள், பெருந்தோட்டப் பகுதிகள், நகர்ப்புற அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குறைந்தளவில் பங்கேற்பு காணப்படும் பகுதிகளைச் சேர்ந்த பெண்களை சுவநாரி மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. தற்போது 35–45 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 50 சதவீதமானவர்களே சுவனாரி மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதால், ஏனைய பெண்களையும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பிரதான மையங்களில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் செயற்படும் மகளிர் சங்கங்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரை ஒருங்கிணைத்து, 35–45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் பரிசோதனைகளுக்கு (Screening Tests) உட்படுத்தும் விரிவான வேலைத்திட்டமொன்றை அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஜனவரி மாதத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னெடுப்பில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பாலின அடிப்படையிலான வரவு செலவுத் திட்டமிடல் (GRP) மற்றும் பராமரிப்புப் பொருளாதாரம் (Care Economy) தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தேசிய பராமரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் வரவு செலவுத் திட்டச் செயன்முறையில் பாலின உணர்திறன் கொண்ட கொள்கைகளை உள்ளடக்குதல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப ஆலோசனை உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கான சட்டம், பராமரிப்புக் கொடுப்பனவுகள் தொடர்பான சட்டம் மற்றும் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, நீதி அமைச்சுடன் இணைந்து அவற்றுக்கான திருத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடல்களில் கௌரவ பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதித் இணைத் தலைவியும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள்,  சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks