E   |   සි   |  

2023-03-10

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு கோப் குழுவினால் பல பரிந்துரைகள்

  1. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் இதுவரை காலதாமதமாகியுள்ள அனைத்து வருடாந்த அறிக்கைகளையும் ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழு பரிந்துரை
  2. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் மாலைதீவு மற்றும் சீஷெல்ஸில் உள்ள பெரும் நிதி இழப்பைச் சந்தித்துள்ள இரண்டு கிளைகளை முறையாக மூடுவதற்கு கோப் குழுவினால் வெளிவிவகார அமைச்சுக்கு அவதானிப்புகளை அனுப்ப நடவடிக்கை
  3. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஜனாதிபதி செயலகத்தினால் தற்போது பயன்படுத்தப்படும் காணி மற்றும் கட்டடம் தொடர்பான குத்தகை ஒப்பந்தம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்ககுக் கோப் குழு அறிவுறுத்தல்
  4. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய போலி தரகர்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அறிவுறுத்தல்
  5. நீண்ட கால காப்பீட்டு வணிகம் மற்றும் பொதுக் காப்பீட்டு வணிகம் இரண்டையும் தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரை
  6. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் எதிர்கால சந்தைப்படுத்தல் மூலோபாயத் திட்டங்கள் குறித்த அறிக்கையை விரைவில் குழுவிடம் சமர்புக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்குப் பரிந்துரை
  7. காப்புறுதி இழப்பீட்டை பெறுவதற்கான நடைமுறை குறித்து காப்புறுதியாளர்களுக்கு முறையாக அறிவிக்க  நடவடிக்கை எடுக்குமாறு கோப் தலைவர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பு
  8. கூட்டுத்தாபனத்தின் மொத்த மனிதவளத்தை கணக்காய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழு அறிவிப்பு
  9. நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் உள்ள 93 பேருக்கு சம்பளம் வழங்க 700 மில்லியன் ரூபா செலவாகும் மேனேஜ்மண்ட் சேர்விஸ் காப்புறுதி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதன் தேவை குறித்த கருத்தை அறிவிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழு பரிந்துரை
  10. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் விலைமனுக் கோரி அமைச்சரவையின் அனுமதியுடன், தனி தரப்பினரிடமிருந்து விலைமனுக் கோரி 100 டொலர் விலைமனுப் பெறுமதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்புடைய அரேபிய நாடுகளிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்தியமை சம்பந்தமாக கூட்டுத்தாபனத்தின் வகிபங்கு தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கோப் குழு பரிந்துரை

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (மார்ச் 08) பாராளுமன்றத்தில் கூடியது.

வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 2019 மற்றும் 2020 நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்காமை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் வினவியதுடன் அவ்வாறு வருடாந்த அறிக்கைகளை தாமதமாக்குவது நிறுவனம் பாராளுமன்றத்தை புறக்கணிப்பதை உணர்த்துகிறது எனக் குறிப்பிட்டார். வருடாந்த அறிக்கைகளை தாமதமாக்குவதால் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்த நிறுவனங்களின் வருடாந்த நிதி நிலைமை தொடர்பில் சரியான புரிதலை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாக கோப் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்பொழுது அந்த அறிக்கைகளை நிதியமைச்சுக்கு முன்வைத்துள்ளதாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இதன்போது குறிப்பிட்டார். மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளிலேயே தாமதமடைந்ததாகவும் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, காலதாமதமாகியுள்ள அனைத்து வருடாந்த அறிக்கைகளையும் ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்தது.

அதேபோன்று, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் மாலைதீவு மற்றும் சீஷெல்ஸில் உள்ள பெரும் நிதி இழப்பைச் சந்தித்துள்ள இரண்டு கிளைகளை இதுவரை முறையாக மூடுவதற்கு முடியாமல் போயுள்ளமை குறித்து குழு கவனம் செலுத்தியது. தற்பொழுது அந்தக் கிளைகள் இயங்குவதில்லை என்பதனால் அதற்காக நிதி செலவிடப்படுவதில்லை எனவும், அவற்றிலுள்ள நிதி அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிதி அதிகாரி சுட்டிக்காட்டினார். அதேபோன்று மாலைதீவு உள்நாட்டு இறைவரி அதிகாரசபையின் வரி அனுமதி நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் உரிய நிறுவனத்தை மூடும் பணிகளை நிறைவுசெய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்தப் பணியை நிறைவு செய்ய கோப் குழுவினால் வெளிவிவகார அமைச்சுக்கு அவதானிப்புகளை அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.

வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஜனாதிபதி செயலகத்தினால் தற்போது பயன்படுத்தப்படும் காணி மற்றும் கட்டடத்தின் குத்தகை ஒப்பந்தம் தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி செயலகத்துக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 798,000,000 ரூபாய் மதிப்பீடு செய்யப்பட நியாயமான பெறுமதிவாய்ந்த சொத்துக்கள் கடந்த ஆண்டில் மீண்டும் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டது எனினும், கொவிட் தொற்று காரணமாக ஜனாதிபதி செயலகத்தினால் மீண்டும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது.  

இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகையில், இரு தரப்பினருக்கும் இடையில் காணப்பட்ட கலந்துரையாடலில் குறித்த காணியை பயன்படுத்திய காலத்துக்கான நிலுவை வாடகையை தவணை முறையில் செலுத்துவதற்கும் 2023 ஜனவரி முதல் புதிய ஒப்பந்தத்திற்கு வருவதற்கும் ஜனாதிபதி செயலகம் இணங்கியதாகத் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களில் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு இதன்போது கோப் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய போலி தரகர்களுக்கு எதிரான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் 2014 இல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் குழு வினவியது.

காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்தப்பட்டிருந்த போது இது இடம்பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் அது தொடர்பில் கண்டறியவில்லை எனவும் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். எனினும் அது தொடர்பில் கண்டறிந்து நிலைமையை அறிக்கையிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

மேலும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கட்டமைப்பில் நீண்ட கால காப்பீட்டு வணிகம் மற்றும் பொதுக் காப்பீட்டு வணிகம் இரண்டையும் தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்காமை தொடர்பில் கோப் குழு அதிகாரிகளிடம் வினவியது.  

இதன்போது கோப் தலைவர் குறிப்பிடுகையில், குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பீட்டு ஆய்வுக்கமைய 2021 இல் இலங்கையில் ஆயுள் காப்புறுதிச் சந்தை 21% இனால் விருத்தியடைந்துள்ளது எனினும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆயுள் காப்புறுதிச் சந்தை 14% இனால் மாத்திரமே விருத்தியடைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். இலங்கையில் ஏனைய காப்புறுதி நிறுவனங்கள் நீண்ட கால காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு என்பவற்றை வேறுவேறாக பேணி வருவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

இதன்போது கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிடுகையில், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம் என்ற வகையில் அவ்வாறு வேறு பிரிப்பது அவசியமில்லை எனினும், அது தொடர்பில் சரியான தீர்மானமொன்றை வழங்குமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் குழு விரிவாகக் கலந்துரையாடியதுடன் இதற்கு விரைவில் தீர்மானமொன்றை வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சந்தைப் பங்குகளை கூட்டுவதற்கான மூலோபாயங்கள் தொடர்பில் கோப் குழு கவனம் செலுத்தியது. கடந்த ஆண்டில் தமது சந்தைப் பங்குகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் தற்போது அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் ஜனவரி வரை ஆயுள் காப்புறுதி சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு விருத்தியடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான மொத்தச் சொத்துக்கள் 184 பில்லியன் ரூபாய் என சுட்டிக்காட்டிய கோப் தலைவர் கூட்டுத்தாபனத்தின் எதிர்கால சந்தைப்படுத்தல் மூலோபாயத் திட்டங்கள் குறித்த அறிக்கையை விரைவில் குழுவிடம் சமர்புக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்குப் பரிந்துரைத்தார்.

காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் போது காப்புறுதி நிறுவனங்களால் சரியாக மக்களை அறிவுறுத்தாமை காரணமாக காப்புறுதியாளர்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாக கோப் குழு உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். விசேடமாக இழப்பீட்டை பெறும்போது சம்பந்தப்பட்ட பட்டியலின் மூலப்பிரதியை சமர்ப்பிக்கத் தவறும்போது காப்புறுதியாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டின்னர். இது தொடர்பில் காப்புறுதியாளர்களுக்கு முறையாக அறிவிக்க  நடவடிக்கை எடுக்குமாறு கோப் தலைவர் இதன்போது அறிவுறுத்தினார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணியாட்கள் தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. நிறுவனத்தில் நிரந்தர பணியாட்கள் 2535 பேரும் ஒப்பந்த அடிப்படையில் 232 பேரும் பணியாற்றுவதாக பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். பணியாட்களின் செயலாற்றுகையை மதிப்பீடு செய்யும் நோக்கில் செயல்திறன் குறிகாட்டியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கூட்டுத்தாபனத்தின் மொத்த மனிதவளத்தை கணக்காய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழு அறிவுறுத்தியது.

காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினரின் சம்பள மட்டத்தை தீர்மானிப்பதற்கு மேனேஜ்மண்ட் சேர்விஸ் காப்புறுதி நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதன் அவசியம் தொடர்பில் கோப் குழு, கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினரிடம் கேள்வியெழுப்பியது. நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் உள்ள 93 பேருக்கு சம்பளம் வழங்க 700 மில்லியன் ரூபா செலவாவதாக இங்கு புலப்பட்டது.

இதன்போது அதிகாரிகள் குறிப்பிடுகையில், காப்புறுதிச் சந்தை மிகவும் போட்டித்தன்மை மிக்கது என்பதால் உயர்மட்ட நிர்வாகத்தினரின் சம்பள விபரத்தின் இரகசியத்தன்மையை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனத் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தை பேணுவது குறித்து சரியான கருத்தை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழுவின் தலைவர்  பரிந்துரைத்தார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிளைகளின் செயலாற்றுகை தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் முறையான மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டிய கோப் தலைவர் உரிய கிளைகள் தொடர்பான சரியான தகவல்களை கணக்காய்வாளருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்தார்.

காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் பயன்படுத்தப்படும் தகவல் தொழிநுட்ப வலையமைப்பு தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள உத்தேச தகவல் தொழிநுட்ப வலையமைப்பு மற்றும் அதற்காக நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது பற்றி கோப் குழு இதன்போது வினவியது.

2015 இல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அரேபிய நாடுகளிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், அதனை விலைமனுக்கோராமல் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியொன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதனை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியிருந்ததுடன், கூட்டுத்தாபனத்தினால் தனித் தரப்பினரிடமிருந்து விலைமனுக் கோரி 100 டொலர் விலைமனுப் பெறுமதியில் வழங்கியமை தொடர்பில் குழு விரிவாகக் கேள்வியெழுப்பியது. கணக்காய்வாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுக்கு அமைய பல மில்லியன் நட்டமடைந்த இந்த கொடுக்கல் வாங்கள் தொடர்பில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் எந்தத் தகவலும் இல்லை என்பது குழுவில் புலப்பட்டது.   

இதன்போது கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிடுகையில், கூட்டுத்தாபனத்தினால் காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் நிர்வாகப் பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதால் அதற்கான கட்டணம் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும்  குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை மீண்டும் குழுவுக்கு அழைக்கும் போது காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கோப் தலைவர் இதன்போது தெரிவித்தார். அதேபோன்று, இது தொடர்பில் தகவல்களை கண்டறிந்து ஆவணங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கோப் குழு பரிந்துரை வழங்கியது.

அதற்கு மேலதிகமாக, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான பொரளை, கின்ஸி வீதியிலுள்ள மெகா பிரான்ச் கட்டடம் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையொன்றை வழங்குமாறு கோப் தலைவர் கணக்காய்வாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ லொஹான் ரத்வத்தே, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா, கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ எஸ்.எம்.எம். முஸ்ஸாரப், கௌரவ ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

3 4

7



தொடர்புடைய செய்திகள்

2026-09-08

இளைஞர் யுவதிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் - திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம்

திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை ஊக்குவிக்கும் நோக்கில் இளைஞர் யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட முன்மொழிவுகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்காக கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெற “Voice to Policy” நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.“Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்டத்திலும், இரண்டாவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மூன்றாவது நிகழ்வு கண்டியிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், சட்டத்தரணிகளான சுசந்த தொடவத்த, சமிந்திரானி கிரிஎல்லே, துஷாரி ஜயசிங்ஹ மற்றும் லால் பிரேமநாத், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, எம்.கே. எம். அஸ்லம் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள், பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்பு, அரசாங்க நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல், சமூக உள்ளடக்கம் மற்றும் நீதி, அரசியல் ஈடுபாடு மற்றும் பிரதிநிதித்துவம் மற்றும் வேறு விடயங்கள் ஆகிய ஐந்து தொனிப்பொருட்களில் கீழ் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டனர். இவ்வாறு அடையாளம் காண்ட பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளையும், அதற்குப் பொறுப்புக் கூறக்கூடிய அரசாங்க நிறுவனங்களையும் அடையாளம் கண்டு ஒன்றியத்தின் உறுப்பினர்களிடம் முன்வைத்தனர். இவர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர் யுவதிகளின் கருத்துக்களைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வது தமது நோக்கம் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட “Voice to Policy” நிகழ்ச்சிகளில் முன்மொழியப்பட்ட கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, இளைஞர் யுவதிகளைப் பாராளுமன்ற செயற்பாடுகளுடன் எதிர்காலத்தில் இணைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.


2026-09-07

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு, இலங்கை பொலிஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் விளக்கம் கோரியது

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கை பொலிஸின் உயர் அதிகாரிகளிடம் அண்மையில் விடயங்கள் கேட்டறிந்தது.குறித்த குழு கௌரவ அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இதற்கு அமைய தித்வா சூறாவளியின் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியத்திஸ்ஸ அவர்களும் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். தித்வா சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-07

இயலாமையடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அடுத்த ஆண்டுக்கான செயற்றிட்டம் மற்றும் கொள்கை முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 13ஆவது கூட்டம், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.2026 ஜூலை முதல் 2027 ஜூன் வரையிலான காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் வரைவு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இச்செயற்றிட்டம் நான்கு பிரதான துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,  பாராளுமன்ற ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை, வரவு-செலவுத் திட்டத்திற்காக குரல் கொடுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல், சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள், அத்துடன் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய அரச சேவைகள் ஆகிய துறைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.IFES நிறுவனத்தின் இலங்கைப் பிரதிப் பணிப்பாளர் இந்திரக உபேசேகர, சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அனோஜிதா சிவாஸ்கரன் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய சபையின் உறுப்பினர் டிக்கிரி குமார ஜயவர்தன ஆகியோர் இதுவரை ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் முன்னிலையில் விளக்கமளித்தனர்.இயலாமையுடைய நபர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளைப் பிராந்திய மட்டத்திலான திட்டமிடலில் உள்ளடக்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட மாவட்ட ரீதியான ஆலோசனை நிகழ்ச்சிகளின் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறான நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், மாவட்ட மட்டத்தில் செயற்படும் அணுகல் தொடர்பான கணக்காய்வுக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஊடாக பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் போது, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தினரின் செயற்பூர்வமான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கட்டிடங்கள் மற்றும் நகரத் திட்டமிடலின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே அணுகல் வசதிகளை உள்ளடக்குவதன் மூலம், பின்னர் மேற்கொள்ள வேண்டிய அதிக செலவிலான மாற்றங்களை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு-செலவுத் திட்டத்திற்காக, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 அமைப்புகளின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட 234 கொள்கை மற்றும் நடைமுறை முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்று ஏற்கனவே ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அந்த முன்மொழிவுகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும், அதன் மூலம் ஆதரவுத் தேவையுடையோருக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கின்றனவா என்பதையும் நெருக்கமாகக் கண்காணிக்க ஒன்றியம் தீர்மானித்தது.இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தற்போதுள்ள சட்ட மற்றும் கொள்கை ரீதியான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் “இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமூலம்” மற்றும் “சைகை மொழி சட்டமூலம்” ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போது காணப்படும் சட்ட ஏற்பாடுகள் மற்றும் தரநிலைகளை சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தனியார் துறை நிறுவனங்களுக்காக அணுகல் தொடர்பான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தி, அவற்றை படிப்படியாக சட்டக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதுடன், தெரிவுசெய்யப்பட்ட சில தனியார் நிறுவனங்களுடன் முன்மாதிரித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.அரச சேவைகளை மேலும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய சேவைகளாக மாற்றுவது தொடர்பிலும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. தொழில் அமைச்சின் “மெஹெவர பியச” கட்டடம் மற்றும் செத்சிறிபாய I மற்றும் II கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகல் தொடர்பான கணக்காய்வு முடிவுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. செத்சிறிபாய III கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், இயலாமையுடைய நபர்கள் அணுகக்கூடிய வகையில் அதனை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.மேலும், தாழ்தளப் பேருந்து சேவைகள், ஆதரவுத் தேவையுடையோர் அணுகக்கூடிய வகையிலான சுற்றுலாத்துறை மற்றும் “மிதுரு நகர” வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் அரச சேவைகளில் அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்கான முன்மாதிரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சுகாதார சேவைகளைப் பெறும்போது ஆதரவுத் தேவையுடையோர் எதிர்கொள்ளும் அணுகல் தடைகளை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.கூட்டத்தின் நிறைவில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகத்தினர் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமான, சுயாதீனமான மற்றும் கண்ணியமான சமூக வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை உருவாக்குவது ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவர்களின் குரலுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் இந்தப் பொறுப்பை தொடர்ந்தும் நிறைவேற்றும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், IFES நிறுவனம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, வைத்தியர் இளைதம்பி ஸ்ரீநாத், சட்டத்தரணி பாக்கியஸ்ரீ ஹேரத் மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-04

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், கணக்காய்வு செயன்முறையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல், திறமையான மனித வளத்தைத் தக்கவைத்தல் மற்றும் அரச நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த  சில்வா அவர்கள் கலந்துகொள்ள முடியாதமை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அச்சந்தர்ப்பத்தில் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், இணையவழி முறையின் ஊடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க  கலந்துகொண்டார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்கதாகவும் தரமானதாகவும் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை பரவலாகப் பயன்படுத்துவதன் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.கணக்காய்வு செயன்முறையை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைப்பதன் மூலம் கணக்காய்வு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதுடன், அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் மேலும் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும் என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், கணக்காய்வுச் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் திறமையான அதிகாரிகள் பயிற்சிக்குப் பின்னர் வேறு துறைகளுக்குச் செல்வதன் காரணமாக ஏற்படும் மனித வளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.திறமையான கணக்காய்வு அதிகாரிகளை சேவையில் தக்கவைத்துக்கொள்வதற்காக பொருத்தமான கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், அரச நிறுவனங்களின் உள்நாட்டுக் கட்டுப்பாட்டு முறைமைகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றைத் திருத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் பொறுப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வின்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் கணக்காய்வு செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.கணக்காய்வு செயன்முறையை நவீனமயமாக்கும்போது தெளிவான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமொன்றைத் தயாரித்து, பணியாளர் தேவைகள் மற்றும் வளங்களை மிகவும் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.இதனிடையே, பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அதன் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல், அத்துடன் சட்ட மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கான ஆணைக்குழுவின் பொறுப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஆணைக்குழுவை முழுமையான செயற்பாட்டு மட்டத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள், பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்திற்கு அமைவாக குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பதால், அந்த உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முழுநேர உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குழுவினால் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks