logo

E   |   සි   |  

2023-03-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

உத்தேச உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்ட மூலத்தில் 25 % இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க சட்டவாக்க நிலையியற்குழு இணக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் சமர்ப்பித்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) தனியார் சட்டமூலங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அமைச்சின் அறிக்கைகள் அண்மையில் பாராளுமன்றத்தில் (பெப். 28) சட்டவாக்க நிலையியற் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டன.

பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் சட்டவாக்க நிலையியற் குழு கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கருத்திற்கொள்ளப்பட்டது.

நிலையியற் கட்டளை 53(4) இன்படி, "சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கின்ற கௌரவ உறுப்பினரின் மூல அபிலாசைக்கு இணங்காத ஏதேனும் வாசகத்தை சட்டமூலத்திற்கு உட்புகுத்துவதற்கு அவகாசம் வழங்கப்படுதலாகாது” என்ற ஏற்பாட்டுக்கு அமைய சட்டமூலங்களின் உள்ளடக்கம் தொடர்பில் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டது. அதற்கமைய, கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சமர்ப்பித்த (126) சட்டமூலத்தின் உள்ளடக்கமாக இருப்பது இளைஞர் பிரதிநிதித்துவம் பற்றியதாக பரிசீலனை செய்து மீண்டும் சட்டமூலமாக வரைவு செய்யுமாறு சட்டவாக்க நிலையியற் குழு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தும் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களத்திலிருந்தும் வருகை தந்திருந்த அலுவலர்களுக்கு குழு ஆலோசனை வழங்கியது.  

மேலும், கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த சமர்ப்பித்த (160) சட்டமூலத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த போதும், தற்பொழுது முதன்மைச் சட்டவாக்கத்தில் மகளிர் பிரதிநித்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமையினால் அது தொடர்பான பகுதியை நீக்கி 25% முழுமையாக இளைஞர் பிரதிநிதித்துவமொன்று பற்றி உள்ளடக்கப்படுதல் வேண்டும் என சட்டவாக்க நிலையியற் குழு கருதியது. அதனால் 160ஆம் சட்டமூலத்தின் அனுசரணையாளர் உறுப்பினரின் உடன்பாட்டுடன் அச்சட்டமூலத்தையும் மீள வரைவு செய்து அறிக்கையொன்றை சபைக்கு வழங்குமாறு வருகை தந்திருந்த அலுவலர்களுக்கு குழு ஆலோசனை வழங்கியது.

அமைச்சர்களான கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, கௌரவ எம்.யு.எம். அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புற, கௌரவ சிசிர ஜெயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) ராஜித சேனாரத்ன, கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, கௌரவ அஜித் மான்னப்பெருமா, கௌரவ சாரதீ துஷ்மந்த, கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ மிலான் ஜயதிலக்க, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ எம். டபிள்யு. டீ. சஹன் பிரதீப் விதான, கௌரவ மதுர விதானகே, கௌரவ சாகர காரியவசம், கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

5



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks