logo

02

E   |   සි   |  

2023-01-26

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

உள்நாட்டு கோழிப் பண்ணைத்துறையைப் பாதுகாக்கும் அதேநேரம் நியாயமான விலையில் முட்டைகளை வழங்குவது குறித்து நான்கு அம்ச விடயங்களை கலந்துரையாட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு

  • சந்தையில் முட்டைக்கு நியாயமான விலையை நிர்ணயிக்கும் நோக்கில் உற்பத்திக்கான செலவினத்தை மதிப்பீடு செய்யுமாறு பரிந்துரை
  • உள்நாட்டு கோழிப் பண்ணைத் துறையைப் பாதுகாப்பது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடல்
  • சந்தையில் காணப்படும் முட்டைத் தட்டுப்பாடு குறித்து கூர்ந்தாய்வு
  • பாவனையாளர்களுக்கு நியாயமான விலையில் முட்டையை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது

 

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்று (25) கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) நான்கு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 19.01.2023ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடைபெற்றிருந்ததுடன், இதில் பின்வரும் விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது,

1. சந்தையில் முட்டைக்கு நியாயமான விலையை வழங்கும் நோக்கில் உற்பத்திச் செலவை மதிப்பீடு செய்யப் பரிந்துரை

கடந்த கோப் குழுவில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய வர்த்தக மற்றும் கமத்தொழில் அமைச்சின் செயலாளர்கள், முட்டை தொடர்பான செலவீனங்களை கணக்கில் கொண்டு முட்டைக்கான விலையைத் தீர்மானிக்கும் விலைச் சூத்திரத்தை இங்கு முன்வைத்தனர்.

முன்வைக்கப்பட்ட விலைச்சூத்திரம் மற்றும் அது தொடர்பான ஆழமான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, விலைச்சூத்திரத்தை பயன்படுத்துவதில் காணப்படும் நடைமுறை ரீதியான அக்கறைகள் இருப்பதால் விலைச் சூத்திரத்தை மீளாய்வு செய்யுமாறு கோப் குழுவின் தலைவர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார பணிப்புரை வழங்கினார்.

குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு விலைச் சூத்திரத்தை மீளாய்வு செய்வதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

2. உள்நாட்டு கோழிப் பண்ணைத்துறையின் பாதுகாப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்

உள்நாட்டு கோழிப் பண்ணைத்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கோப் குழு வலியுறுத்தியதுடன், அதிகாரிகளும் இதனை ஏற்றுக் கொண்டனர்.

கோழிப் பண்ணைத்துறை ஸ்திரம் அடையும் வரை ஒன்றரை மாத காலங்களுக்கு முட்டையொன்றின் விலை 51 ரூபாவாகப் பேணப்படுமாயின் அதன் பின்னர் முட்டை விலையைக் குறைக்க முடியும் என கோழிப் பண்ணைகளின் பிரதிநிதிகள் குழுவுக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.

கோழிப் பண்ணைத்துறையைப் பாதுகாக்கும் அதேநேரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாவனையாளர்கள் மற்றும் ஏனைய சகல தரப்பினரின் பக்கத்திலிருந்து இவ்விடயத்தை நோக்கி, அதற்கமைய செயற்பட வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது.

3. சந்தையில் முட்டைக்குக் காணப்படும் தட்டுப்பாடு குறித்து கூர்ந்தாய்வு

நாளொன்றுக்கு ஏறத்தாழ 3 மில்லியன் முட்டைக்கான தற்காலிக தட்டுப்பாடு காணப்படுவதாக கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. இதற்குத் தீர்வாகக் கோழிப் பண்ணைத் துறையில் துரித நடவடிக்கைகள் எதுவும் இல்லையென இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவு முட்டையை இறக்குமதி செய்ய இணங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

4. நியாயமான விலையில் பாவனையாளர்களுக்கு முட்டையை வழங்குவது குறித்து அவதானம்

கோப் குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு, பாவனையாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது கோப் குழுவின் நிலைப்பாடாக அமைந்தது.

 

எனவே, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பொது மக்களுக்குத் தெரிவிக்கவும், கவனத்தில் எடுக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு நடைமுறைத் தீர்வைக் காண்பதில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்படுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துமாறும் கோப் குழுவின் தலைவர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார பணிப்புரை விடுத்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக, கௌரவ நிமல் லான்சா, கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த, கௌரவ மதுர விதானகே, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-07-30

பாதியில் கட்டப்பட்ட மற்றும் முடங்கியுள்ள வீட்டுத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய கவனம் செலுத்தப்பட்டுள்ளது

கடந்த காலங்களிலும், முந்தைய அரசாங்கங்களின் கீழும் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் கட்டப்பட்ட மற்றும் முடங்கியுள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கௌரவ வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.கௌரவ அமைச்சர் தலைமையில் நடைபெற்ற வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த வீட்டுத் திட்டங்களைப் பூர்த்திசெய்வதற்கான ஒரு புதிய திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்வது குறித்தும் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுவசதித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன்களும் மானியங்களும் முழுமையாக வழங்கப்படாததால், அந்த வீட்டுவசதித் திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், அவ்வாறு முடிங்கிய 5,000 வீட்டுத் திட்டங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இவற்றில் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வது குறித்து அடையாளம் கண்டு பரிந்துரைகளை மேற்கொள்ள அமைச்சுக்களின் இரண்டு முன்னாள் செயலாளர்கள்   இணைத் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.இந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளுக்கு அமைய பாதியில் கட்டப்பட்டு கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பாதியில் கட்டப்பட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய குடும்பங்களுக்கு அடுத்த ஆண்டு உதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக ஏறத்தாழ 2,000 குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.குறித்த அமைச்சரவை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் நீர்வழங்கல் குறித்த பல்வேறு பிரச்சினைகளை அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட வீட்டுப் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கியதாக விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கும் அமைச்சு இணக்கம் தெரிவித்தது.


2026-07-30

பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் அலுவலகத்தின் முதலாவது வருடாந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் கீழ் நிறுவப்பட்ட பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது வருடாந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியதுடன் இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 2025 ஆம் ஆண்டில் அரசாங்கக் கடன் அளவு அதிகரித்தமை, வட்டி வீதங்களில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை ஆகியவற்றால் அரசாங்கக் கடன் சேவையாற்றலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பொதுக் கடன் முகாமைத்துவத்தில் இலங்கை மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் ஊடாக பொதுக் கடன் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கடன் முகாமைத்துவம், கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல், நடுத்தர காலக் கடன் முகாமைத்துவ உத்திகளைத் தயாரித்தல் மற்றும் வருடாந்த அரசாங்கக் கடன் முகாமைத்துவ அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் போன்ற பிரதான பொறுப்புக்கள் முன்னெடுக்கப்படுவதும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் அதிகாரிகளுக்கு சர்வதேச நிதிச் சந்தைகள் மற்றும் நவீன கடன் முகாமைத்துவ முறைகள் தொடர்பில் விசேட பயிற்சிகளை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் குழுவில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.அத்துடன், பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்காக தயாரிக்கப்படும் பயிற்சித் தேவைகள் மதிப்பீட்டு அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இந்த அறிக்கையின் மூலம் நிறுவனத்தின் அதிகாரிகளிடையே காணப்படும் அறிவு மற்றும் திறன் இடைவெளிகளை அடையாளம் காணுதல், முறையான வருடாந்த பயிற்சித் திட்டத்தைத் தயாரித்தல், சர்வதேச நிதிச் சந்தை நடவடிக்கைகள், கடன் முகாமைத்துவம் மற்றும் இடர் கட்டுப்பாடு போன்ற தொழில்நுட்பத் துறைகளுக்குத் தேவையான பயிற்சித் தேவைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட எதிர்கால பயிற்சித் திட்டங்களுக்குத் தேவையான வரவு செலவுத் திட்டத்தைத் திட்டமிடுவதற்கான அடிப்படையை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், அரச தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்க உத்தரவாதங்கள், கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் அரசாங்கக் கடன் முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.


2026-07-23

சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணய முறைகேடு தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.


2026-07-22

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பணிக்குறிப்பு வரைவுக்கு அங்கீகாரம்

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பணிக்குறிப்பு (Terms of Reference) வரைவு,  பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றின்போது, பணிக்குறிப்பைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளும் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இறுதி பணிக்குறிப்பு வரைவு தயாரிக்கப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பணிக்குறிப்பை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்து, ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks