E   |   සි   |  

2023-01-20

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாக கோப் குழு குற்றச்சாட்டு

  • எதிர்வரும் புதன்கிழமை அமைச்சின் செயலாளர்களுக்கு மீண்டும் அழைப்பு
  • பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவசியமான பரிந்துரைகளை வழங்குமாறு முன்மொழிவு
  • பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம்  
  • முட்டை விலையை தீர்மானிப்பது தொடர்பாகக் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரேரணை

 

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (கோப்) 2023.01.19 அன்று கூடியது. இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

1 - பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவசியமான பரிந்துரைகளை வழங்குமாறு முன்மொழிவு
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்புக்கள் தொடர்பில் இதன்போது குழு வினவியது. பாவனையாளர்களை வலுவூட்டல், வியாபாரத்தை முறைமைப்படுத்தல் மற்றும் சிறந்த ஊக்குவிப்புக்கள் மூலம் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அதிகாரசபையின் பிரதான பொறுப்பாக இருந்தாலும் அந்த நோக்குக்கு அமைய அதிகாரசபை செயற்படுவதில்லை என குழுவின் கருத்தாக இருந்தது. அதற்கமைய பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எவ்வாறு அதிகாரசபைக்குச் செயற்பட முடியும் என கோப் குழுவுக்கு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு குழு பரிந்துரை வழங்கியது.

2 - பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம்
பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டது. விசேடமாக, தற்போதைய முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய வர்த்தகம் மற்றும் விவசாய அமைச்சுகளின் செயலாளர்கள் இருவரும் உரிய அதிகாரிகளை இணைத்துக்கொண்டு முட்டையொன்றின் விலையை தீர்மனிக்கும் விலை சூத்திரத்தை மூன்று நாட்களில் தயாரித்தல் மற்றும் அதற்கமைய முட்டையொன்றுக்கான செலவை கணக்கிடுவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு அமைச்சின் செயலாளர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

3 - முட்டை விலையை தீர்மானிப்பது தொடர்பாகக் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரேரணை
பொதுமக்களுக்கு நிவாரண விலையில் முட்டையை வழங்கும் நோக்கில் முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மனத்துக்கு காணப்படும் தடைகளை நீக்குவதற்கான தீர்வுகளை முன்வைக்குமாறும் குழுவினால் அமைச்சின் செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முட்டை இறக்குமதியை தடைசெய்து ஒரு சில பெரிய அளவிலான முட்டை வியாபாரிகளுக்காக பொதுமக்களுக்கு அநீதியிழைக்க இடமளிக்க முடியாது எனவும் அதற்கமைய, அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து முட்டைக்கு குறைந்தபட்ச விலையை தீர்மானிப்பது அல்லது இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

முட்டைக்குக் கட்டுப்பாட்டு விலையைப் பேணி பாவனையாளர்களை பாதுகாப்பது போன்று முட்டை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாவனையாளர் அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படவேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

4 - பாவனையாளர் அதிகாரசபைக்கு விரைவில் நிரந்தரப் பணிப்பாளர் நாயகம்
பாவனையாளர் அதிகாரசபைக்கு விரைவில் நிரந்தரப் பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தற்பொழுது பல வருடங்களாக பதில் பணிப்பாளர் நாயகமே நியமிக்கப்பட்டுள்ளமை இதன்போது புலப்பட்டது. முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றதை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகக் காணப்படுவது குழுவில் வெளிப்பட்டது. பணிப்பாளர் நாயகம் ஒருவர் இல்லை என்பதால் சட்டத்தின் ஒருசில அதிகாரங்களை செயற்படுத்த முடியாது என கணக்காய்வாளர் நாயகம் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி நிறுவனத்தின் பிரதான பதவியொன்றான பணிப்பாளர் நாயகப் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அதேபோன்று, இரண்டு வாரங்களில் பணிப்பாளர் நாயகமொன்றை நியமிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

5 - அதிகாரசபையின் சட்டத்தை இற்றைப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு வாரத்தில் அறிவிக்கவும்
2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தை இற்றைப்படுத்துவது தாமதமடைந்துள்ளதால், அதற்கான திட்டத்தை ஒரு வாரத்தில் கோப் குழுவுக்கு அறிக்கையிடுமாறும், அதற்காக அமைச்சு மட்டத்தில் குழுவொன்றை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதன்போது அமைச்சின் செயலாளர், சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து குழுவில் தெரிவித்தார். இந்தச் சட்டத்தைத் திருத்துவது சுமார் 17 வருடங்களாகத் தாமதமடைந்துள்ளதால் அந்த செயற்பாட்டை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

6 - பட்டதாரிகளை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்துவது தொடர்பில் வேலைத்திட்டம்
அதிகாரசபையில் தற்பொழுது பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ள சுமார் 400 பட்டதாரிகளின் செயலாற்றுகை மற்றும் வினைத்திறனை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை உரிய பிரதான செயற்திறன் குறிகாட்டிகளுடன் (KPIs) ஒரு மாத காலத்துக்குள் கோப் குழுவுக்கு முன்மொழியுமாறும் கோப் குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோன்று, பாவனையாளர்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் பதிலளிக்காமை மற்றும் செயற்படாமை என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய இந்த பட்டதாரிகளை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு விரைவாக செயற்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

7 - மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட சட்டத்துக்கு அமைய ஒருங்கிணைந்த செயல்திட்டம்
அதிகாரசபைக்கு இதுவரை ஒருங்கிணைந்த செயல்திட்டமொன்று சாத்தியக்கூறுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த செயல்திட்டமொன்றை, திருத்த சட்டத்துக்கு அமைய மூன்று மாதங்களில் தயாரித்து கோப் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் கோப் குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். நிறுவனத்தில் காணப்படும் சிக்கல்கள், பாவனையாளர்களின் பிரச்சினைகள், சுற்றிவளைப்புக்கள் போன்று நிறுவனத்தின் நோக்கு, குறிக்கோள் மற்றும் பணிகளை செயற்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த ஒருங்கிணைத்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

8 - ஆய்வுப் பிரிவு மற்றும் தரவு வங்கியொன்றின் அவசியம்
பாவனையாளர் அதிகாரசபையில் ஒரு குறிப்பிட்ட ஆய்வு அலகொன்றை ஆரம்பிக்குமாறும் இங்கு அறிவுறுத்தப்பட்டது. அதிகாரசபையினால் தமது பொறுப்புக்களை மேற்கொள்ளும் போது தொடர்ச்சியாக உற்பத்தி, சந்தை மற்றும் பாவனையாளர் தரவுகள் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுவதால் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு ஆய்வு அலகொன்றின் தேவை இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று, இறக்குமதி, உற்பத்தி மற்றும் விபரங்களுடன் சம்பந்தப்பட்ட தரவு வங்கியொன்றை பேணுவதன் அவசியமும் இங்கு கலந்துரையாப்பட்டது.

9 - பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரசபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு விரைவான வேலைத்திட்டமொன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும் என பிரேரணை
பாவனையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அதிகாரசபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு விரைவான வேலைத்திட்டமொன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும் என கோப் குழுவினால் அறிவிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புற, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத், கௌரவ டி.வீ. சானக, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ நிமல் லன்சா, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ (சட்டத்தரணி) பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே ஆகியோர் இந்தக் கூட்டத்தால் கலந்துகொண்டிருந்தனர்.

அதுபோன்று, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.பீ. அதபத்து, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பாவனையாளர் அதிகாரசபையின் தலைவர் சாந்த நிரிஎல்ல ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

4 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-09-30

இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான புதிய சட்டமூலம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரியவந்தது.புதிய கிரிக்கெட் நிர்வாகக் கட்டமைப்பில் சுயாதீன பணிப்பாளர்களை உள்ளடக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், புதிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் நேரடியாக முடிவுகளை மேற்கொள்ளாது எனவும், குறித்த சங்கங்கள் மாகாண கிரிக்கெட் சங்கங்கள் ஊடாக செயற்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.பாடசாலை கிரிக்கெட்டுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வருடாந்தம் 900 மில்லியன் ரூபா நிதியும் உபகரணங்களும் வழங்கப்படுவதாகவும், பயிற்றுநர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வீரர்களைத் தெரிவுசெய்யும் நடைமுறையை முறையாக முன்னெடுப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குழுவில் தெரியவந்தது.அத்துடன், விளையாட்டுச் சங்கங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், 33 விளையாட்டுச் சங்கங்கள் குறித்த பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகவும், மேலும் 33 சங்கங்கள் தொடர்பில் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் நடைபாதைகள் மற்றும் விளையாட்டு வளாகங்களிலிருந்து கட்டணம் அறவிடுவதை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், விளையாட்டுத்துறையை இலாபம் ஈட்டும் வணிகமாகக் கருதாது, தேசிய சுகாதாரம் மற்றும் சமூக நலனுக்கான அரசாங்கத்தின் பொறுப்பாக முன்னெடுக்க வேண்டும் என்பதே அமைச்சின் கொள்கையாகும் எனவும் வலியுறுத்தப்பட்டது.ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு செயற்கை ஓடுபாதையை (Synthetic Track) வழங்கும் திட்டத்தின் கீழ் அடுத்த செயற்கை ஓடுபாதை அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாடளாவிய ரீதியில் இரண்டு செயற்கை ஓடுபாதைகள் மாத்திரமே காணப்படுவதாகவும் குழுவில் குறிப்பிடப்பட்டது.அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்தல், மட்டக்களப்பில் அமைந்துள்ள வெபர் விளையாட்டரங்கம் மற்றும் ஹிங்குராங்கொட விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்தல், பதுளை – ஹாலிஎல பகுதியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் களுத்துறை – பண்டாரகம பொது விளையாட்டரங்கில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.மேலும், சர்வதேசப் போட்டிகளுக்காக அரசாங்க நிதி ஒதுக்கீடு செய்யும்போது, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகபூர்வ தேசிய அணிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டித் தொடர்களுக்கும் மாத்திரமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், தேசிய அணிகளைத் தெரிவுசெய்தல் மற்றும் வெளிநாட்டுப் போட்டிகளுக்கு அணிகளை அனுப்புதல் ஆகியவற்றின்போது எந்தவொரு இனத்தையோ அல்லது பிரதேசத்தையோ அடிப்படையாகக் கொண்டு எவ்வித பாகுபாடும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மாற்றுக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-30

பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உபகுழுவில் ஆராய்வு

கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உப குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அவர்கள் தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியதுடன், இத்திட்டத்தின் முன்னேற்றங்கள் அடங்கிய விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. பாடசாலைகளில் காணப்படும் சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளுக்கான தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும், குறிப்பாக குடிநீரின் தரத்தை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.அதேநேரம், பாடசாலைகளுக்கான தொலைத்தொடர்புகளை வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாதிரி முன்பள்ளிகளை அமைப்பதற்கான திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு விரிவாகக் கேட்டறிந்துகொண்டது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எம்.சமந்த ரணசிங்ஹ, பத்மசிறி பண்டார ஆகியோரும், கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 


2026-09-30

வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

2026ஆம் ஆண்டின் 01ஆம் மற்றும் 02ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதி மற்றும் வெளிநாட்டு சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான கட்டளை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து குறித்த ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டளைகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், வெளிநாட்டு முதலீடுகள், புலம்பெயர்ந்தவர்கள் தமது நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் மற்றும் வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன், சம்பிக ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் அதன் வெளிநாட்டு செலாவணித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இங்கு, 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகளின் கீழ் இலங்கையில் வசிப்பவர்களால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள தகுதியுடைய நபர்கள், முதலீடு செய்யக்கூடிய துறைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு மூலதனத்தை மாற்றும்போது பொருந்தும் வரம்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்குத் தேவையான நிதி வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகள் தொடர்பில், புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் உள்ள தமது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அதற்குப் பொருந்தும் வரம்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் கொடுப்பனவு ஊடாக மூலதனத்தை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் மற்றும் வாடகை வருமானம், வட்டி மற்றும் இலாபப் பங்குகள் போன்ற நடப்பு வருமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல் தொடர்பில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் குறித்தும் குழுவில் விளக்கமளிக்கப்பட்டது.அத்துடன், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள தற்காலிக வரம்புகள் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.பொருளாதார நிலைமை மேம்படுவதுடன், குறித்த வரம்புகளைப் படிப்படியாகத் தளர்த்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் குழுவிடம் மேலும் தெரிவித்தனர்.ஏற்றுமதியாளர்கள் முந்தைய ஆண்டில் நாட்டிற்கு கொண்டுவந்த ஏற்றுமதி வருமானம் மற்றும் அந்த வருமானத்தின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டு வர்த்தகர்களுக்கு சர்வதேச சந்தையில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.மேலும், வெளிநாட்டு செலாவணி சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளியேறுவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மற்றும் அதற்காக நடைமுறையில் உள்ள கண்காணிப்பு முறைகள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வங்கித் தரவுகள் மற்றும் சுங்கத் தரவுகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அத்துடன் வெளிநாட்டு செலாவணி முறைகேடுகளைத் தடுப்பதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், உள்நாட்டு கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் வர்த்தக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும்போது தேவையான வங்கி உத்தரவாதங்கள் மற்றும் ஏனைய நிதி வசதிகள் தொடர்பில் நிலவும் வரம்புகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலின்போது, விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பிலும் குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையும் வகையில் தேவையற்ற ஒழுங்குவிதிகளை விதிப்பதன் மூலம் வர்த்தகர்களை ஊக்கமிழக்கச் செய்யும் அபாயம் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதன் காரணமாக நாட்டிற்குள் வரும் வெளிநாட்டு செலாவணியின் அளவும் குறையக்கூடும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.ஒழுங்குவிதிகளில் அமெரிக்க டொலர் 2 மில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கட்டளையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக அந்தத் தொகை அமெரிக்க டொலர் 0.75 மில்லியன் என குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பிலும் குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வெளிநாட்டு செலாவணித் திணைக்கள அதிகாரிகள், அமெரிக்க டொலர் 0.75 மில்லியன் என்ற வரம்பு சுமார் 6 மாத காலத்திற்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கும் எனவும், 2027 ஆம் ஆண்டில் அதனைத் தளர்த்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதேபோன்று, பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு இந்த வரம்பு அமெரிக்க டொலர் 0.2 மில்லியனாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.இந்த வரம்புகளை விட அதிகளவிலான வெளிநாட்டு செலாவணியை மாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் நடவடிக்கை எடுக்க முடியும் என வெளிநாட்டு செலாவணித் திணைக்களம் தெரிவித்தது. இதன்போது, குறித்த அங்கீகாரம் வணிகத்தின் நிதிநிலை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இவ்வாறான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகளவான சொத்துக்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கு அதிகமாகக் கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


2026-09-25

மூன்று நியமனங்களுக்கு உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான இலங்கையின் புதிய தூதுவராக அன்சுல் பானு ஜான் அவர்களின் நியமனத்திற்கும், கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சந்தன ரோஹண குமார அம்பகொல்ல அவர்களின் நியமனத்திற்கும் உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக நுசித் குமாரதுங்க அவர்களை நியமிப்பதற்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks