E   |   සි   |  

2023-01-05

செய்தி வகைகள் : செய்திகள் 

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, உணவுப் பாதுகாப்பை உருவாக்கி பாராளுமன்ற ஜனநாயகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - புதிய ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகளிடம் அழைப்பு விடுத்த பிரதமர்

உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து ஏனைய சகல துறைகளினதும் முன்னேற்றத்துக்காக செயற்பட அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் சார்பில் சகல கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்தார். மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உத்திகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளான இன்று (ஜன. 05) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து விசேட அறிக்கையொன்றை  விடுத்து உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுதந்திரமடைந்து 75வது வருடத்தைக் கொண்டாடவிருக்கும் சூழ்நிலையில் சர்வஜன வாக்குரிமையை 91 வருடங்களாக அனுபவிக்கும் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தொடர்ந்தும் முன்னோக்கிக் கொண்டுசெல்ல பாராளுமன்றத்தில் உள்ள சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பொருளாதார, சமூக, சட்ட மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, விமர்சனங்களுக்கு இடமளித்து ஜனநாயகத்தை பலப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, வாழ்க்கைச் செலவு தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் இந்த வருடத்தை சவால்களை வெற்றிகொண்ட வருடமாக மாற்றுவதற்கு பாராளுமன்றம் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

கடந்த காலத்தில் பிரதான கோரிக்கையாக இருந்த பாராளுமன்றக் குழு முறையை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், 21வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் இதற்கு அமைய முன்னோக்கிச் செல்ல நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பாராளுமன்றத்தில் சர்வகட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய பேரவையின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கௌரவ பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,

“கௌரவ சபாநாயகர் அவர்களே, முதலில் 2023 வருடத்தில் நாம் கூடியுள்ள முதலாவது சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் சார்பில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றேன். அத்துடன், பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு அமைய எதிர்வரும் வருடங்கள் நாம் இந்த சாவல்களை வெற்றிகொள்ளும் வருடங்களாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட அரசாங்கம் என்ற ரீதியிலும், பாராளுமன்றம் என்ற ரீதியிலும் ஒற்றுமையாக செயற்படுவதற்கான வாய்ப்புக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறான சூழ்நிலையில் நாம் உங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் மாத்திரம் நின்று விடாது, பல சவால்களை எதிர்கொண்டு ஒரு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப உறுதிபூணுவோம். குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து ஏனைய சகல துறைகளினதும் முன்னேற்றத்துக்காக செயற்பட அனைவரும் தீவிரமாகச் செயற்படுவோம். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான உத்திகள் தயாரிக்கப்படுவதுடன், புத்தாண்டில் மகத்தான தேசமாக எழுச்சிபெற நாட்டுமக்களின் நம்பிக்கையுடன் கைகோர்த்து செயற்படுமாறு அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அதேநேரம், எமது நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு மாத காலமே உள்ளது. இலங்கையின் ஜனநாயகப் பாராளுமன்ற முறைமையைப் பாதுகாத்து சர்வஜன வாக்குரிமையானது மக்களால் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் அரசாங்கங்களை தெரிவு செய்யவும், அரசாங்கங்களின் வழியைத் தீர்மானிக்கும் நடவடிக்கை என்பதுடன், 91 வருடங்களாக அனுபவித்துவரும் உலகின் சர்வஜன வாக்குரிமையை மேலும் பலப்படுத்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை 75து சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் இத்தருணத்தில் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பிரதி சபாநாயகர் அவர்களே, கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அரசாங்கம் பொருளாதார ரீதியில், சமூக ரீதியாக சீர்குலைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முன்னெடுத்துள்ள பல நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதன் ஊடாக மக்களினதும், சர்வதேசத்தினதும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

விமர்சனங்களுக்கு இடமளித்து, விமர்சனங்களை ஆராய்ந்து ஜனநாயக சமூகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக பொருளாதார சிக்கல்கள் காணப்பட்ட ஜூலை மாதத்தில் காணப்பட்ட நிலைமைகள் மாற்றப்பட்டு இன்று மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு விரிவான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை நாடு முழுவதிலும் காணப்படுகிறது.

வாழ்க்கைச் செலவுப் பிரச்சனைகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள சுமை போன்ற சவால்களிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் ஒன்றாகப் பிரச்சினைகளைக் கடந்து அனைவருக்கும் தீர்வுகளைக் காணும் என்ற நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

மேலும், சபாநாயகர் அவர்களே, அந்தக் காலகட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகக் காணப்பட்ட பாராளுமன்றத்தில் குழு முறையை உருவாக்கி புதிய பாதையில் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது. இந்த நிலையில் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட குழு அமைப்பை அதிகபட்சமாக பயனுள்ளதாக மாற்றுவதற்கு 2023ஆம் ஆண்டில் பாராளுமன்றம் செயற்படும் என நாம் நம்புகிறோம்.   சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ள குழுக்களின் செயற்பாடுகள் சுறுசுறுப்பாக தொடர பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

அத்துடன், கடந்த காலத்தில் பெரிதும் சர்ச்சைக்கு உள்ளான 21வது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், 21வது அரசியலமைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை உருவாக்குவது தொடர்பாக, அரசியலமைப்பின்படி செயற்படுவதற்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் இணைந்து செயற்பட வேண்டும் என மீண்டும் ஒருமுறை பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

இது மாத்திரமன்றி பாராளுமன்றத்தில் சகல கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட தேசிய பேரவை, சகல கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பேரவையாக செயற்படுத்த  அரச மற்றும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு கௌரவ சபாநாயகரின் அக்கிராசனத்தினால் உருவாக்கப்பட்ட தேசிய பேரவையின் செயற்பாடாக முன்கொண்டு செல்வதற்கு பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பது முக்கியம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். நமது நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக, நாட்டின் பொருளாதாரத்தை வலிமையான ஒன்றாக மாற்றுவதற்கு சர்வதேச அளவில் நடைபெற்ற விவாதங்கள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நமக்கு ஆதரவான குழுக்களுடன், பல நாடுகள் குறிப்பாக இந்தியா, மற்றும் மக்கள் சீனா வெற்றிகரமான முடிவுகளை கொண்டு வந்துள்ளது. சாத்தியமான நடவடிக்கைக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இதனை விரைவில் வெற்றிபெறச் செய்ய சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்ப்பதுடன், நாட்டின் சகல குடிமக்களினதும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல குடிமக்களின் இணக்கப்பாட்டுடன் எமது நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் கௌரவம் மிக்க சவாலை முறியடிக்கும் பணயத்திற்காக நாம் செயற்படுவோம். எமது நாட்டில் இதுவரை இந்த சவால்களுக்குத் தோள்கொடுத்து இந்த சவால்களின் ஊடாகப் பயணிக்க அர்ப்பணிப்புடன் உள்ள விவசாயிகள், மீனவர்கள் அத்துடன் எமது உள்நாட்டு வர்த்தக சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள சிரமங்களுக்கு மத்தியில் உள்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய  பொருளாதார உற்பத்தி, சர்வதேச ரீதியில் ஏற்றுமதியை வெற்றிகொள்ளக் கூடிய பொருளாதார, நிதி, அந்நியச் செலாவணியைப் பெற நாம் ஒன்றிணைவோம்.

நாங்கள் பாராளுமன்றத்தில் உறுதியளித்தபடி, 2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு சட்டத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான கால அட்டவணையின்படி மிகத் தெளிவான நடவடிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைப்போம். இதேவேளை, ஜனாதிபதி அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் விடுத்துள்ள அறிக்கைக்கு மேலதிகமாக, முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் மறைவு தொடர்பில் பாராளுமன்றத்தின் சார்பாக எமது அனுதாபச் செய்தியையும் தெரிவிக்குமாறு கௌரவ சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி."



தொடர்புடைய செய்திகள்

2026-09-09

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 09) நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் முற்பகல் 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை அறிமுகப்படுத்திய 2009ஆம் ஆண்டின் 35ஆம் ஆண்டு இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமைதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.இதற்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூலம் 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டம் நீக்கப்படுவதுடன், குறித்த உதவியும் இரத்துச் செய்யப்படவுள்ளது.மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதுடன், பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படும்.


2026-09-09

50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இயந்திரங்களை அகற்றி நவீன தொழில்நுட்பத்துடன் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்த திட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மற்றும் காலாவதியான இயந்திர உபகரணங்களைப் படிப்படியாக அகற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வினைத்திறன்மிக்க உபகரணங்களைக் கொள்வனவு செய்வதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு உயர் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அச்சிடும் (Smart Security Printing) திறன்களைக் கொண்ட நவீன அச்சிடும் பிரிவொன்றை நிறுவுவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வாய்மூல விடைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.டி. சூரியபண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் 445 நிரந்தரப் பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் மேலும் 21 பணியாளர்களும் பணியாற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.பாதுக்கை, வட்டரெக்க பிரதேசத்தில் இயங்கி வரும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அச்சகத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மற்றும் தொகுதிகள் அச்சிடப்படுவதுடன், பாதுகாப்பு அச்சிடும் பணிகளான மாகாணப் பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடுதல், லொத்தர் சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் இரகசிய ஆவணங்களை அச்சிடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன், SPC பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடுதல், பல்வேறு அரச நிறுவனங்களுக்கான அச்சிடும் பணிகள், ஏனைய வர்த்தக அச்சிடும் பணிகள், தனியார் அச்சிடும் கட்டளைகள் மற்றும் தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், நாட்டின் பல மாவட்டங்களில் SPC விற்பனை நிலையங்களின் வலையமைப்பொன்றும் பராமரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.அமைச்சின் கீழ் அச்சகம் ஒன்று காணப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, சந்தை விலைகளைக் கட்டுப்படுத்தும் காரணியாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல், சந்தையின் தரம் மற்றும் தரநிலைகளைக் கட்டுப்படுத்துதல், நம்பகமான பாதுகாப்பு அச்சிடும் (Security Printing) பிரிவொன்றின் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் அரச துறையின் ஒரேயொரு அரச தொழில்முயற்சி நிறுவனமாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல் ஆகியவை அவற்றில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.பாரிய அளவிலான அச்சிடும் தேவையைப் பூர்த்தி செய்தல், அரசுக்குச் சொந்தமான அச்சிடும் வசதியொன்றின் தேவையை நிறைவேற்றுதல் மற்றும் அச்சிடும் பணிகளுக்காக ஏற்படும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவையும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் அடங்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், நீண்ட காலமாக அரச நிறுவனமாக இயங்கி வருவதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், பயிற்சியளிக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டிருத்தல் மற்றும் அரசாங்கத்தின் பங்காக அரசுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகியவையும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் இயங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.


2026-09-08

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.09.08

“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (செப். 8) அறிவித்தார். உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வருமாறு,சட்டமூலத்தின் வாசகம் 3(ஐ) தெளிவற்றதாக உள்ளது, எனவே இது அரசியலமைப்பின்12(1) மற்றும் 14(1) (எ) ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த வாசகம் நீக்கப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(i)     சட்டமூலத்தின் வாசகம் 4(ச), அரசியலமைப்பின் உறுப்புரைகள் 12(1) மற்றும் 14(1)(எ) உடன் முரண்படுகிறது மற்றும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றம் முன்மொழிந்தபடி உறுப்புரையின் அந்த வாசகம் திருத்தப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(ii)     சட்டமூலத்தின் வாசகம் 5(4)(ஆ) அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) உடன் முரண்படுகிறது மற்றும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்டபடி வாசகம் 5 திருத்தப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(iii)     சட்ட மூலத்தின் மற்ற வாசகங்கள் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்2026 ஆகஸ்ட் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளிலான அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஒன்பது மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள மனுக்களின் பிரதிகளும் கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.2026 ஆகஸ்ட் 21 திகதியன்று மனுக்கள் ஏழு 2026 ஆகஸ்ட் 24  திகதியன்று மனுக்கள் நான்கு 2026 ஆகஸ்ட் 25 திகதியன்று மனுக்கள் எட்டு 2026 ஆகஸ்ட் 28 திகதியன்று மனுக்கள் ஐந்து 2026 ஆகஸ்ட் 31 திகதியன்று மனுக்கள் முப்பத்து ஒன்று 2026 செப்டம்பர் 01 திகதியன்று மனுக்கள் பத்து 2026 செப்டம்பர் 03 திகதியன்று மனுக்கள் மூன்று2026 செப்டம்பர் 04 திகதியன்று மனுக்கள் இரண்டு  கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு பதினைந்து மனுக்கள்அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பதினைந்து மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் சபையில் அறிவித்தார்.நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்கு மேலும் ஏழு மனுக்கள்2026 ஆகஸ்ட் 19 ஆம் திகதிய எனது அறிவித்தலில்  குறிப்பிடப்பட்ட மனுவுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் ஏழு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.


2026-09-08

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (செப். 8) சான்றுரைப்படுத்தினார்.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தைத் திருத்துவதற்கான இச்சட்டமூலம் கௌரவ தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் தொடர்பில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகளை தற்போதைய நிலைமைக்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பதே இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கக்கூடிய அபராதத் தொகைகள் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப போதுமானதாக இல்லாத காரணத்தினால், அவ்வபராதத் தொகை ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 வரை இத்திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல்  (திருத்தச்) சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks