பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-09-09
50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மற்றும் காலாவதியான இயந்திர உபகரணங்களைப் படிப்படியாக அகற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வினைத்திறன்மிக்க உபகரணங்களைக் கொள்வனவு செய்வதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு உயர் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அச்சிடும் (Smart Security Printing) திறன்களைக் கொண்ட நவீன அச்சிடும் பிரிவொன்றை நிறுவுவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.டி. சூரியபண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் 445 நிரந்தரப் பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் மேலும் 21 பணியாளர்களும் பணியாற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.
பாதுக்கை, வட்டரெக்க பிரதேசத்தில் இயங்கி வரும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அச்சகத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மற்றும் தொகுதிகள் அச்சிடப்படுவதுடன், பாதுகாப்பு அச்சிடும் பணிகளான மாகாணப் பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடுதல், லொத்தர் சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் இரகசிய ஆவணங்களை அச்சிடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், SPC பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடுதல், பல்வேறு அரச நிறுவனங்களுக்கான அச்சிடும் பணிகள், ஏனைய வர்த்தக அச்சிடும் பணிகள், தனியார் அச்சிடும் கட்டளைகள் மற்றும் தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், நாட்டின் பல மாவட்டங்களில் SPC விற்பனை நிலையங்களின் வலையமைப்பொன்றும் பராமரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
அமைச்சின் கீழ் அச்சகம் ஒன்று காணப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, சந்தை விலைகளைக் கட்டுப்படுத்தும் காரணியாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல், சந்தையின் தரம் மற்றும் தரநிலைகளைக் கட்டுப்படுத்துதல், நம்பகமான பாதுகாப்பு அச்சிடும் (Security Printing) பிரிவொன்றின் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் அரச துறையின் ஒரேயொரு அரச தொழில்முயற்சி நிறுவனமாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல் ஆகியவை அவற்றில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
பாரிய அளவிலான அச்சிடும் தேவையைப் பூர்த்தி செய்தல், அரசுக்குச் சொந்தமான அச்சிடும் வசதியொன்றின் தேவையை நிறைவேற்றுதல் மற்றும் அச்சிடும் பணிகளுக்காக ஏற்படும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவையும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் அடங்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நீண்ட காலமாக அரச நிறுவனமாக இயங்கி வருவதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், பயிற்சியளிக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டிருத்தல் மற்றும் அரசாங்கத்தின் பங்காக அரசுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகியவையும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் இயங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
2026-10-22
மிளகு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக மரபியல் பண்புகளின் மதிப்பீடு, நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், பயிர் மேம்பாடு, தாவரப் போசணை முகாமைத்துவம், பயிரியல் ஆய்வுகள், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம், பெறுமதி சேர்த்தல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இலங்கையின் மிளகு உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் மாவட்டங்களாக கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.தற்போது நாட்டில் பயிரிடப்படும் மிளகு வகைகளில் உள்ளூர் மிளகு வகை, பன்னியூர் 1 மற்றும் டிங்கிரி ரால, கொஹுகும்புரே ரால, பூட்டாவே ரால ஆகிய உள்ளூர் தெரிவு வகைகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.மிளகு பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்துவதற்காக நடுகைப் பொருட்களை இலவசமாக வழங்குதல், முதலீட்டு உதவிகளை வழங்குதல், சிறிய அளவிலான வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைத் திட்டங்களின் கீழ் மிளகுச் செடிகளை இலவசமாக வழங்குதல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான அறிவையும் உதவிகளையும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன், காலநிலை மாற்றங்களுக்கு மிளகு பயிர்ச்செய்கையை ஏற்புடையதாக்குவதற்குப் பொருத்தமான நீர்ப்பாசன முறைகளை அறிமுகப்படுத்துதல், நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், விலங்குகளால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான முதலீட்டு உதவிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.மிளகு உற்பத்திகளை சர்வதேச தரங்களுக்கு அமைவாகத் தயாரிப்பதற்காகச் சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் சிறந்த உற்பத்தி நடைமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தி, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை உருவாக்குவதற்குத் தேவையான அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் முதலீட்டு உதவிகள் வழங்கப்படுவதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், மிளகு உற்பத்திகளை வெளிநாட்டுச் சந்தைகளில் சேதன உற்பத்திகளாகச் சந்தைப்படுத்தும் நோக்கில், பயிர்ச்செய்கைகளைச் சேதனப் பயிர்ச்செய்கைகளாக மாற்றுதல், அதற்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு உதவிகளை வழங்குதல், அத்துடன் ஏற்றுமதி விவசாயக் கிராமங்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.பல்வேறு ஊடகங்கள் ஊடாக மிளகு பயிர்ச்செய்கை தொடர்பான அறிவு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், மிளகு உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதிக்குத் தேவையான ஆலோசனைச் சேவைகளை வழங்குதல் மற்றும் விநியோகஸ்தர்களையும் கொள்வனவாளர்களையும் தொடர்புபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
2026-10-22
விசர்நாய்க்கடி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்காக 2025ஆம் ஆண்டில் ரூ. 655,824,000 செலவிடப்பட்டுள்ளதாக கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் வழங்கிய பதிலிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சர் சபையில் சமர்ப்பித்த பதிலுக்கு அமைய, 2025ஆம் ஆண்டில் நாய்க்கடிக்கு உள்ளாகி விசர்நாய்கடி நோயினால் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், 2025ஆம் ஆண்டில் பொதுச் சுகாதார கால்நடை மருத்துவ சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ. 220 மில்லியன் எனவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.பொதுச் சுகாதார கால்நடை மருத்துவ சேவைகள் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் விசர்நாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டில் ரூ. 51 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாய்களுக்குத் தடுப்பூசி வழங்குதல், கருத்தடை செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இத்திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதியாகும்போது நான்கு மாவட்டங்களில் 5,951 தெருநாய்களுக்குக் கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களிலும் வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வழங்கிய பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026-10-21
2026 ஒக்டோபர் 20 ஆம் திகதிய எனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட முப்பது மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.அத்துடன், 2026 ஒக்டோபர் 07, 08 மற்றும் 20 ஆம் திகதிய அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட இருபத்தைந்து மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் பதினொரு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாகவும் சபாயாகர் சபையில் அறிவித்தார்.
2026-10-20
இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் இலங்கையின் கௌரவ பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர ஆகியோர், 2026 ஒக்டோபர் 13 முதல் 15 வரை பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸுக்கு விஜயம் செய்து, 2026ஆம் ஆண்டுக்கான 12ஆவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், பல இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்றனர்.12ஆவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பு, இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தூதுக்குழுவின் தலைவர் சேர்பன் டிமெத்ரி ஸ்டேட்சா ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது. இச்சந்திப்பு 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலங்கையின் கௌரவ பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, பெல்ஜியம், லக்ஸம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு சந்தன வீரசேன மற்றும் பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இலங்கைத் தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.இலங்கையின் 10ஆவது பாராளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பு என்ற வகையில், இச்சந்திப்பு இரு தரப்பினருக்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகளில் முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இரு தரப்பினரினதும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள், GSP+ வரிச்சலுகைத் திட்டம், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட பரஸ்பர அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கான முக்கிய தளமாக இச்சந்திப்பு அமைந்தது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் இந்து – பசுபிக் பிராந்தியங்களின் நிலைமைகள், கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, நிலைபேறான அபிவிருத்தி, இணைப்புத்திறன் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதும் இலங்கை வெளிப்படுத்திய மீண்டெழும் திறனை இணைத் தலைவர் Șerban-Dimitrie Sturdza மற்றும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டினர். குறிப்பாக, தித்வா சூறாவளியின் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கின் அமைதியின்மையால் ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடி உள்ளிட்ட சவால்களைச் சுட்டிக்காட்டிய அவர்கள், சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் சாதகமான பொருளாதார வளர்ச்சிப் போக்கையும் பாராட்டினர்.இணைத் தலைவரான கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, தித்வா சூறாவளித் தாக்கத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய பெறுமதிமிக்க நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். அவசர நிவாரணப் பொருட்கள் வழங்குதல், அனர்த்த மதிப்பீட்டுக்கான ஆதரவு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆகியனவும் இவ்வுதவிகளில் அடங்கும். சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஈடுபாடு மற்றும் பரிஸ் கழகத்தின் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை உள்ளிட்ட சவாலான காலப்பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார். தற்போதைய புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியில் பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் மேலதிக உதவியையும் கௌரவ சபாநாயகர் கோரினார்.1995ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கௌரவ சபாநாயகர் (கலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன, இந்த உறவுகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான தருணம் இதுவென வலியுறுத்தினார்.ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் முக்கிய பொருளாதாரப் பங்காளிகளில் ஒன்றாகத் தொடர்ந்தும் விளங்குவதாகவும், இலங்கையின் முக்கிய ஏற்றுமதிச் சந்தையாகவும் அபிவிருத்திப் பங்காளியாகவும் திகழ்வதாகவும் இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான ஈடுபாடு இவ்வுறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு தரப்பினரதும் பொதுவான முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும் உதவும்.இலங்கைத் தூதுக்குழுவினருக்கு ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இணைத் தலைவர் Șerban-Dimitrie Sturdza மற்றும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ இராப்போசன விருந்தையும் வழங்கினர்.இந்த விஜயத்தின்போது, கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உப தலைவர் யூனெஸ் ஒமர்ஜீ உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் பல சந்திப்புகளில் ஈடுபட்டார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், வழக்கமான ஈடுபாட்டுக்கான பொறிமுறைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தூதுக்குழு, கௌரவ சபாநாயகர் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு ஐரோப்பியப் பாராளுமன்றத்தினுள் சுற்றுப்பயணமொன்றையும் ஏற்பாடு செய்தது. இதன்போது, குழுக் கூட்டமொன்றை நேரில் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.கௌரவ சபாநாயகர் பெல்ஜியம் பாராளுமன்றத்திற்கும் விஜயம் செய்து, பிரதிநிதிகள் சபையின் தலைவர் பீட்டர் டு ரூவர் உள்ளிட்ட உறுப்பினர்களைச் சந்தித்தார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் மக்களிடமிருந்து கிடைத்த ஆணையைத் தொடர்ந்து, இலங்கையின் நிலையான அரசியல் சூழல், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பொருளாதார மீட்சி மற்றும் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்புகளை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கௌரவ சபாநாயகர் விளக்கமளித்தார்.பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்காக பெல்ஜிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த கௌரவ சபாநாயகர், பெல்ஜியத்திலிருந்து உயர்மட்ட இருதரப்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் அழைப்பு கோரிக்கை விடுத்தார். 2028ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடத் தயாராகும் நிலையில், இத்தகைய விஜயம் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான உந்துசக்தியாக அமையும் என அவர் தெரிவித்தார்.2026ஆம் ஆண்டுக்கான 12ஆவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பில் பங்கேற்ற இலங்கைத் தூதுக்குழுவில், பெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் மதுசங்க ஜயசிங்க, வர்த்தக அமைச்சர் தாவிஷ்ய முல்லேகம்கொட மற்றும் அமைச்சர் திலினி லெனகல ஆகியோரும் இடம்பெற்றனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks