E   |   සි   |  

2022-12-22

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப் படுத்துவது தொடர்பில் கோபா குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட நிகழ்வு

அரசாங்க நிறுவனங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு (கோபா குழு) ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான விசேட நிகழ்வொன்று கோபா குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது.

கோபா குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹசிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மதிப்பீட்டு சங்கத்தின் (Sri Lanka Evaluation Association / SLEvA) பிரதிநிதிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

தேசிய மதிப்பீட்டு சட்டமூலத்தின் பூர்வாங்க வேலைகளை நிறைவு செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் இலங்கையின் தேசியத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதன் பரிந்துரைகளை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற விசேட குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவும் போது மதிப்பீட்டுப் பிரிவை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தேசிய மதிப்பீட்டுக் கொள்கை தயாரிப்பை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

முறையான தேசிய மதிப்பீட்டு செயல்முறையின் அவசியத்தை வலியுறுத்திய கோபா குழுவின் தலைவர், இது ஒரு பூர்வாங்க கலந்துரையாடல் என்றும், எதிர்காலத்தில் இது பற்றி மேலும் விரிவாகக் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கௌரவ(மேஜர்) பிரதீப் உந்துகொட, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

5

 



தொடர்புடைய செய்திகள்

2026-11-27

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடுகிறது

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவரும், கௌரவ அமைச்சருமான கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சார்பில் கொழும்புக்கு அண்மையில் அமைந்துள்ள 27 ஏக்கர் காணியைப் பெற்றுக்கொண்டு, திரைப்படம், கலை மற்றும் கலாசார நடவடிக்கைகள், அத்துடன் தியானம் மற்றும் பௌத்த தத்துவக் கற்கை நிறுவனங்களுக்காக “கலை மற்றும் கலாசார கிராமம்” ஒன்றை நிறுவுவதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது அகழ்வுப் பணிகளை முன்னெடுக்காமல், GPR (Ground Penetrating Radar) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலத்திற்குக் கீழே காணப்படும் தொல்பொருட்களைப் பரிசோதிக்கும் நவீன அணுகுமுறை பின்பற்றப்படுவதாக குழுவின் தவிசாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.தர்மப் பாடசாலை இறுதிப் பரீட்சையும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையும் ஒரே காலப்பகுதியில் இடம்பெறுவதால் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த பரீட்சை நாட்காட்டியொன்றைத் தயாரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மாகாண மற்றும் வலய மட்டங்களில் பரீட்சைத் திகதிகள் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.சேதமடைந்துள்ள குருநாகல் இராஜசபை மண்டபத்தைப் பாதுகாப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த இடம் தொடர்பில் நிலவும் உரிமை மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், குருநாகல் மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன இணைந்து கூட்டுக் கலந்துரையாடலொன்றை நடத்தி, விரைவில் இறுதித் தீர்வொன்றை எட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.ரமழான் காலப்பகுதியில் வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாகக் கிடைக்கும் பேரீச்சம்பழங்களை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,700 பள்ளிவாசல்களுக்கும் நியாயமான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதற்காக முறையான ஆவணப்படுத்தல் நடைமுறையொன்று செயற்படுத்தப்படும் என்றும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.மேலும், புத்தசாசன, சமய மற்றும் கலாசாரத் துறைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான கமகெதர திஸாநாயக்க மற்றும் முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-11-26

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளிநாடுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளிநாடுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்கள் தொடர்பில் இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியமும், அதனால் நியமிக்கப்பட்ட உபகுழுவும் கவனம் செலுத்தியிருந்தன.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் ஒருங்கிணைப்புப் பிரச்சினைகள் மற்றும் தொடர்பாடல் தடைகளைத் துரிதமாகத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அத்துடன் அதற்காக நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையிலும், ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதன் இணைத் தலைவியும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சமன்மலி குணசிங்க அவர்களின் தலைமையிலும் கடந்த நவ. 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியிருந்தன.இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்களின் முந்தைய குற்றப் பதிவுகள் தொடர்பில் இலங்கையின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படாததன் காரணமாக, அவர்கள் சாதாரண நபர்களைப் போன்று சமூகத்தில் நடமாடுவதற்கு வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக அவர்கள் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதற்கான ஆபத்து காணப்படுவதால், வெளிநாட்டு நீதிமன்றங்களினால் வழங்கப்படும் இவ்வாறான தீர்ப்புகளை இலங்கையில் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அதற்கமைய, வெளிநாடுகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச ஒருங்கிணைப்பு முறைமையொன்றை உருவாக்குதல், அவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல்களைப் பொலிஸ் குற்றப் பதிவுக் கட்டமைப்பில் உள்ளடக்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல், சிறுவர்களுடன் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்போது கட்டாயப் பின்னணிப் பரிசோதனையை மேற்கொள்ளுதல் மற்றும் மீண்டும் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக இடர் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட சட்டபூர்வமான கண்காணிப்பு முறைமையொன்றை உருவாக்குதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.மேலும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, நன்னடத்தைப் பராமரிப்பின் கீழுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களை, சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் ஊடாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது தொடர்பான மருத்துவ அறிக்கை மற்றும் நடத்தை தொடர்பான அறிக்கையொன்றைப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படும் நன்னடத்தை நிறுவனங்களை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அந்நிறுவனங்களின் பிரதான பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும்போது, நன்னடத்தைச் சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.மேலும், 2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுக்கும் சட்டம் மற்றும் 1999ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க பராமரிப்புச் சட்டம் உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குத் தொடர்புடைய சட்டங்களைத் துரிதமாகத் திருத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அதேபோன்று, சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக நீதிமன்றத் தீர்ப்புகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் சாத்தியமான விரைவான தீர்வுகளையும் முறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் கௌரவ உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி லக்மாலி கமகே, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன மற்றும் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்துடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம், இலங்கைப் பொலிஸ் மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


2026-11-26

பெண்களின் உரிமைகள் மற்றும் அரசியல் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காக ஆசிய நாடுகளின் அனுபவப் பகிர்வில் இலங்கையும் இணைந்தது

2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின்  வருடாந்தக் கூட்டத்தில் இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திராணி கிரிஎல்ல கலந்துகொண்டார்.மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், நேபாளம், மாலைதீவு, தாய்வான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய  பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கருத்துகளையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன்போது, பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது மலேசியப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும்  அவருக்கு வாய்ப்புக் கிடைத்ததுடன், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வழிகாட்டல் சுற்றுப்பயணத்தின் மூலம் அந்நாட்டின் பாராளுமன்ற மரபுகள், ஜனநாயகச் செயற்பாடுகள் மற்றும் சட்டவாக்கப் பணிகள் தொடர்பில் பெறுமதியான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன், மலேசியப் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைச் சந்திப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.மேலும், மலேசியாவுக்கான ஜேர்மனியத் தூதுவர் தங்கியிருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தமையும் இந்த விஜயத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்தது. இது சர்வதேச நட்புறவையும் இராஜதந்திர உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.இந்த விஜயத்தின் ஊடாக, பிராந்திய பெண் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதொரு வாய்ப்பு ஏற்பட்டது.


2026-11-26

ஆசிரியர் இடமாற்றக் கொள்கையைத் திருத்துதல் மற்றும் தேசிய, மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இடமாற்றுவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது குறித்து பாராளுமன்றக் குழு கவனம் செலுத்தியுள்ளது

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக, ஆசிரியர் இடமாற்றங்கள், பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தல், முன்பள்ளிக் கல்வி, பாடசாலை மதிய உணவுத் திட்டம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.குறித்த குழு,  கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கும்போது எதிர்கொள்ளப்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, ஆசிரியர் இடமாற்றச் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் தூர வரையறையானது, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்களிலுள்ள தொலைதூரப் பாடசாலைகள் தொடர்பில் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதால், அந்த வரையறையை மீளாய்வு செய்யுமாறு இடமாற்றச் சபைக்கு அறிவிக்கக் குழு தீர்மானித்தது.அத்துடன், சில தேசியப் பாடசாலைகளில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வேறு தேசியப் பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் இடமாற்றம் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, இடமாற்றங்களுக்காக மாத்திரம் தேசியப் பாடசாலைகளுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர்களை இடமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.ஆசிரியர்களின் சேவைக் காலம் தொடர்பான தகவல்களைச் சில பாடசாலைகள் சரியாகச் சமர்ப்பிக்காமை மற்றும் ஆசிரியர் தரவுக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய, உரிய தகவல்களை மறைப்பதாகச் சந்தேகிக்கப்படும் பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று பரிசோதிப்பதுடன், ஆசிரியர் தரவுக் கட்டமைப்பிலுள்ள தகவல்களைப் புதுப்பித்து, சேவைக் காலத்தைச் சரியாகக் கணக்கிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வட மாகாணத்திற்கான ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்குப் பதிலாக, 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொள்கையொன்றைத் தயாரிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.பாடசாலைகளில் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் பாடசாலைகளிடம் கையளிக்கப்படாத கட்டடங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, குளியாபிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் அது பாடசாலையிடம் கையளிக்கப்படாத காரணத்தினால், அதன் ஒலிக் கட்டுப்பாட்டுப் பலகைகள் மற்றும் குளிரூட்டல் கட்டமைப்புகள் சேதமடைந்து வருவதால், இது தொடர்பில் தனியான விசாரணையொன்றை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.மாவட்ட மட்டத்தில் பாடசாலை அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. வவுனியா மாவட்டத்தின் செம்பலங்குளம் மற்றும் தாஜனிக்குளம் பாடசாலைகளிலுள்ள விசேட கல்விப் பிரிவுகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மாகாண நிதி ஒதுக்கீடுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பப் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட ஐந்து பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள 21 திட்டங்களில் 12 திட்டங்களுக்கான மதிப்பீடுகளை அங்கீகரித்து நிதி ஒதுக்கீடுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கான முறையான பொறிமுறையொன்று இல்லாமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. முன்பள்ளிக் கல்வி தொடர்பில் மாகாண சபைகளுக்கும் உரிய அமைச்சுக்களுக்கும் இடையில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் நிர்வாக மற்றும் கண்காணிப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மதிய உணவுத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்படாமை மற்றும் உணவின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இதற்கிடையில், பாடசாலைகளில் நிலவும் மனித வளம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட “இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் நிலவும் மனித வளங்களின் போதிய பயன்பாட்டின்மையை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை” பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்னவினால் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பாடசாலைகளின் மனித வளங்கள் தொடர்பில் உபகுழுவினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, எதிர்கால நடவடிக்கைகளுக்காகப் பரிந்துரைப்பது தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.குழுக் கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய தரப்பினரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks