logo

E   |   සි   |  

2022-10-26

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சுகாதார ரீதியாக தகுதியற்ற பொலிஸ் அதிகாரிகளின் சேவையை நிறைவுசெய்வது தொடர்பில் அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் அவதானம்

சுகாதார ரீதியாக தகுதியற்ற பொலிஸ் அதிகாரிகளின் சேவையை  நிறைவுசெய்வது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் அண்மையில் (ஒக். 20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

உரிய சுகாதார ஆரோக்கிய நிலையில் இல்லாத பலர் பொலிஸ் சேவையில் உள்ளதாகவும் அவர்கள் வைத்திய சான்றிதழ்களை காண்பித்து சிரமமான கடமைகளில் ஈடுபடுவதில்லை என வருகைதந்த உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர். எனினும், ஒரு சிலருக்கு அவ்வாறான சுகாதார கோளாறுகள் இல்லை என்றும், இதனால் எப்பொழுதும் கடமைகளை சரியாக மேற்கொள்ளும் அதிகாரிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.  

அதற்கமைய, சுகாதார ரீதியாக தகுதியற்ற சுமார் 4000 பொலிஸ் அதிகாரிகள் தற்பொழுது பொலிஸ் சேவையில் உள்ளதாக பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். இதன்போது ஆலோசனை வழங்கிய அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் குறிப்பிடுகையில், சுகாதார ரீதியாக தகுதியற்ற பொலிஸ் அதிகாரிகளை சேவையிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணையை பொலிஸ் திணைக்களத்தினால் தயாரித்து அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார். அதற்கமைய எதிர்வரும் காலத்தில் அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, இந்த ஆண்டில் பாரிய அளவிலான பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவதால் 16,000 பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடம் ஏற்படுவதாகப் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருள் பயன்படுத்துவது தொடர்பில் அறிக்கையிடப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று இணையத்தை பயன்படுத்தி தனிநபர்களின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகம் ஆகிய நிறுவனங்கள் தொடர்பான தற்போதையை நிலைமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ லோஹான் ரத்வத்த, கௌரவ சாந்த பண்டார, கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி. சில்வா, கௌரவ ஜானக வாக்கும்புற, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே, கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ சிந்தக்க அமல் மாயாதுன்ன, கௌரவ  டீ. வீரசிங்க, கௌரவ  அசங்க நவரத்ன, கௌரவ (வைத்திய கலாநிதி) கயாஷான் நவநந்த மற்றும் கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

12

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks