பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-07-20
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய அடுத்துவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்குப் பதில் ஜனாதிபதியும், பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளால் இன்று (20) தெரிவுசெய்யப்பட்டார்.
இதில் பதில் ஜனாதிபதியும், பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டளஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுரகுமார திஸசாநாயக ஆகியோரின் பெயர் அடுத்துவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கு நேற்று (19) பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகளும், கௌரவ டளஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும் அளிக்கப்பட்டன. கௌரவ அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 03 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அடுத்துவரும் ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட போட்டியிடும் வோட்பாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கையில் அரைவாசிக்கு மேலான எண்ணிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை கௌரவ ரணில் விக்ரமசிங்க பெற்றிருந்தார். இன்றைய வாக்கெடுப்பில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 219ஆக அமைந்ததுடன், இதில் கௌரவ ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
இதில் 223 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய கௌரவ ரணில் விக்ரமசிங்க எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தின் எஞ்சிய காலப் பகுதியில் சேவையாற்றுவதற்கே கௌரவ ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தகுதி பெற்றுள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கௌரவ ரணில் விக்ரமசிங்க கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன்23ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டார்.
1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமராகப் பதவிவகித்தார்.
1970 ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அவர் அப்போது கடமையாற்றினார். 28 வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற கபினட் அமைச்சு பதவிகளை வகித்தார்.
1989 மார்ச் 06 முதல் 1993 மே 07 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய விக்ரசிங்க அவர்கள் 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவிவகித்துள்ளார்.
அவர் முதன்முறையாக 1993 மே மதம் 07 ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன் 1994 ஆகஸ்ட் 19 வரை அந்த பதவியை வகித்தார். இவர் இரண்டாவது தடவையாக 2001 டிசம்பர் 09ஆம் திகதி முதல் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதிவரையும், மூன்றாவது தடவையாக 2015 ஜனவரி 09ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி வரையும், நான்காவது தடவையாக 2015 ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் 2018 ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிவரையும், ஐந்தாவது தடவையாக 2018 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 21ஆம் திகதி வரையும் பிரதமராகக் கடமையாற்றியிருந்தார்.
இதன் பின்னர் கடந்த மே மாதம் 09ஆம் திகதி முன்னாள் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து கௌரவ ரணில் விக்ரமசிங்க அம்மாதம் 12ஆம் திகதி மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியைவகித்துவரும் போதே அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய கடந்த 14ஆம் திகதி முதல் பதில் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்ரமசிங்க அவர்கள் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
2026-10-23
‘பிரஜா சக்தி’ வறுமையை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 25,000 மில்லியன் ரூபா நிதியில், 23,000 மில்லியன் ரூபா மாவட்ட மட்டத்தில் சமூக அபிவிருத்திச் சபைகளால் அடையாளம் காணப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 2,000 மில்லியன் ரூபாவிலிருந்து தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படும் நடுத்தர அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பதிலிலேயே அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.‘பிரஜா சக்தி’ தேசிய இயக்கத்தின் கீழ் 24,221.38 மில்லியன் ரூபா செலவில் 15,725 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 15,316 திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தியின் கீழும், 273 திட்டங்கள் கல்வியின் கீழும், 136 திட்டங்கள் சுகாதாரத்தின் கீழும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்துத் திட்டங்களையும் 2026.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகள் ஊடாக, அந்தந்த மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் பல்பரிமாண வறுமையை ஒழிப்பதற்கு நேரடியாகப் பங்களிக்கும் திட்டங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சமூகச் சூழல், மனித வள அபிவிருத்தி, பராமரிப்பு, விநியோக வலையமைப்புகள் மற்றும் அணுகல் வசதிகள் ஆகிய துறைகளின் கீழ் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் ஊடாக மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கல்வி அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அமைச்சுகள் ஊடாகவும் மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி அல்லது ஏனைய நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.அத்துடன், மாற்றுத்திறனாளிகளையும் அவர்களது குடும்ப அலகுகளையும் வலுவூட்டும் நோக்கில், அவர்களுக்கென விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், நிதியுதவி வழங்குதல், நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
2026-10-22
மிளகு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக மரபியல் பண்புகளின் மதிப்பீடு, நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், பயிர் மேம்பாடு, தாவரப் போசணை முகாமைத்துவம், பயிரியல் ஆய்வுகள், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம், பெறுமதி சேர்த்தல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இலங்கையின் மிளகு உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் மாவட்டங்களாக கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.தற்போது நாட்டில் பயிரிடப்படும் மிளகு வகைகளில் உள்ளூர் மிளகு வகை, பன்னியூர் 1 மற்றும் டிங்கிரி ரால, கொஹுகும்புரே ரால, பூட்டாவே ரால ஆகிய உள்ளூர் தெரிவு வகைகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.மிளகு பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்துவதற்காக நடுகைப் பொருட்களை இலவசமாக வழங்குதல், முதலீட்டு உதவிகளை வழங்குதல், சிறிய அளவிலான வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைத் திட்டங்களின் கீழ் மிளகுச் செடிகளை இலவசமாக வழங்குதல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான அறிவையும் உதவிகளையும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன், காலநிலை மாற்றங்களுக்கு மிளகு பயிர்ச்செய்கையை ஏற்புடையதாக்குவதற்குப் பொருத்தமான நீர்ப்பாசன முறைகளை அறிமுகப்படுத்துதல், நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், விலங்குகளால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான முதலீட்டு உதவிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.மிளகு உற்பத்திகளை சர்வதேச தரங்களுக்கு அமைவாகத் தயாரிப்பதற்காகச் சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் சிறந்த உற்பத்தி நடைமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தி, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை உருவாக்குவதற்குத் தேவையான அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் முதலீட்டு உதவிகள் வழங்கப்படுவதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், மிளகு உற்பத்திகளை வெளிநாட்டுச் சந்தைகளில் சேதன உற்பத்திகளாகச் சந்தைப்படுத்தும் நோக்கில், பயிர்ச்செய்கைகளைச் சேதனப் பயிர்ச்செய்கைகளாக மாற்றுதல், அதற்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு உதவிகளை வழங்குதல், அத்துடன் ஏற்றுமதி விவசாயக் கிராமங்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.பல்வேறு ஊடகங்கள் ஊடாக மிளகு பயிர்ச்செய்கை தொடர்பான அறிவு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், மிளகு உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதிக்குத் தேவையான ஆலோசனைச் சேவைகளை வழங்குதல் மற்றும் விநியோகஸ்தர்களையும் கொள்வனவாளர்களையும் தொடர்புபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
2026-10-22
விசர்நாய்க்கடி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்காக 2025ஆம் ஆண்டில் ரூ. 655,824,000 செலவிடப்பட்டுள்ளதாக கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் வழங்கிய பதிலிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சர் சபையில் சமர்ப்பித்த பதிலுக்கு அமைய, 2025ஆம் ஆண்டில் நாய்க்கடிக்கு உள்ளாகி விசர்நாய்கடி நோயினால் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், 2025ஆம் ஆண்டில் பொதுச் சுகாதார கால்நடை மருத்துவ சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ. 220 மில்லியன் எனவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.பொதுச் சுகாதார கால்நடை மருத்துவ சேவைகள் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் விசர்நாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டில் ரூ. 51 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாய்களுக்குத் தடுப்பூசி வழங்குதல், கருத்தடை செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இத்திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதியாகும்போது நான்கு மாவட்டங்களில் 5,951 தெருநாய்களுக்குக் கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களிலும் வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வழங்கிய பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026-10-21
2026 ஒக்டோபர் 20 ஆம் திகதிய எனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட முப்பது மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.அத்துடன், 2026 ஒக்டோபர் 07, 08 மற்றும் 20 ஆம் திகதிய அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட இருபத்தைந்து மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் பதினொரு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாகவும் சபாயாகர் சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks





