02

E   |   සි   |  

2022-06-25

செய்தி வகைகள் : செய்திகள் 

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கை பாராளுமன்றத்துக்கு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கை அதன் தலைவர், சபை முதல்வரும் அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தனவினால் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2021 மே 17 ஆம் திகதி முதன்முறையாகக் கூடிய இந்தக் குழு, பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் அக்கறையுள்ள நிறுவனங்களிடமிருந்து பிரேரணைகளை கோரி வெளியிட்ட ஊடக அறிவித்தலுக்குப் பதிலளிக்கும் வகையில் அரச சார்பற்ற அமைப்புகள், மதம்சார் அமைப்புகள், பெண்கள் குழுக்கள், பல்வேறு கலாச்சார மற்றும் இனக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்கலாக 160 தரப்பினரிடமிருந்து பிரேரணைகள் குழுவுக்குக் கிடைக்கப்பெற்றன. மேலும், 69 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து பிரேரணைகளை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததுடன் அதற்கமைய 36 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எழுத்துமூலம், வாய்மொழி மூலமும் தமது பிரேரணைகளை சமர்ப்பித்திருந்தன. இதில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் அடங்கியிருந்தன.     

அதனையடுத்து, இடம்பெற்ற குழுவின் 29 அமர்வுகளின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பொது மக்கள் மற்றும் அக்கறையுள்ள அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூலமான மற்றும் வாய்மொழி மூலமான பிரேரணைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையே இவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த குழுவின் தலைவர், சபை முதல்வரும் அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அவதானிப்புகள் மற்றும் விதந்துரைப்புக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.  

அதற்கமைய,

  • மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகக்  கருத்துத் தெரிவிக்கும் போது, தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துவது அல்லது புதிய முறைமையை உருவாக்குவது அல்லது பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்துவது
  • பல்வேறு தரப்பினரினால் கலப்புத் தேர்தல் முறை பிரேரிக்கப்பட்டுள்ளதால் இந்த அறிக்கை மூலமும் கலப்பு தேர்தல் முறையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டல்
  • உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கு ஆசனங்களை அகற்றுதல்
  • பெண் பிரதிநிதித்துவத்துக்கு மேலதிகமாக இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல்
  • ஊடகங்கள் தேர்தல்களின் போது கடைபிடிக்க வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு செயற்படுதல்
  • அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வது தொடர்பில் குறிப்பிடும் போது, 70 க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் செயற்பாடு தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்பட்டுள்ளதால், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடுவதற்கு பிரதேச மற்றும் ஏனைய என்ற அடிப்படையில் அங்கீகரிக்கப்படக்கூடிய அரசியல் கட்சிகளை வேறுபடுத்தல்   
  • இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பல வேட்பாளர்களுக்கு ஏற்படும் குறைபாடு தொடர்பில் நியாயமாகச் செயற்படுவது
  • பல்வேறு ஊழல்கள் நிரம்பிய செலவு அதிகமான தேர்தல் முறையாகத் தேர்தல்கள் மாறியுள்ளமை மற்றும்  இன்றைய தேர்தல்கள் எல்லையற்ற செலவுகளாக மாறியுள்ளதால் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதாலும் தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுதல், நடத்தை விதிக் கோவையொன்றை கடைபிடித்தல் மற்றும் தேர்தல்களில் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் தொடர்பான


பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்ட இந்த இறுதி அறிக்கையில் 25 அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இந்த அறிக்கையில் 15 விதந்துரைப்புக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் தேர்தல் முறைமை தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் பரிந்துரைகளும், பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான பரிந்துரைகளும், இளைஞர் பிரதிநிதித்துவத்தின் கீழ் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தலில் வேட்பு மனுக்களில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு 25% ஒதுக்கீட்டை கட்டாயமாக்குதல் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, வாக்காளர்களின் ஏற்பு அடிப்படையில் அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் தொடர்பான பரிந்துரையும், ஊடகம் எனும் பகுதியின் கீழ் ஊடக வழிகாட்டுதல்கள், இலத்திரனியல் ஊடகங்களில் அரசியல் பிரசாரம் மேற்கொள்ளல், தேர்தல் சட்டங்களை மீறி சமூக ஊடகத் தளங்களால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள், தகவல்களின் தவறான பொருள்கோடல் மற்றும் பொய்யான தகவல்களின் பரவல் தொடர்பான பரிந்துரைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்தல் பிரசார நடவடிக்கைகள், வாக்களிக்கும் உரிமை, வேட்புமனு முறைமை, தேர்தல் முறைமை, தேர்தல் தீர்ப்பாயம், தேர்தல் முடியும் வரை உள்ளூராட்சி அதிகார சகபைள் மற்றும் மாகாணசபைகளின் அதிகாரத்தை முறையே ஆணையாளர்/ செயலாளர் மற்றும் மாகாண செயலாளர் ஆகியோருக்கு வழங்குதல், வருடாந்த வரவு செலவுத்திட்டத்துக்கு உள்ளூராட்சி அதிகாரசபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டாமை, உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கள அலுவலர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, தேசியப் பட்டியல் மற்றும் எல்லை நிர்ணயம் என்பன தொடர்பிலும் இந்த இறுதி அறிக்கையில் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய 'தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின்' இறுதி அறிக்கை இந்த ஊடக அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-10-09

ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை பிரதமர் சந்தித்தார்

ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ஒக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர, இலங்கையுடன் ஆசிய மன்றம் நீண்டகாலமாக பேணிவரும் பங்குடைமைக்கும், நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.அண்மையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு பிரதிநிதிகள் குழுவினர் பாராட்டுத் தெரிவித்ததுடன், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமையையும் பாராட்டினர்.இச்சந்திப்பில், இலங்கையில் ஆசிய மன்றம் முன்னெடுத்து வரும் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த எதிர்பார்க்கும் முக்கிய துறைகள் தொடர்பில் பிரதிநிதிகள் குழுவினர் விளக்கமளித்தனர். அவற்றில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றம், பெண்களின் பொருளாதார வலுவூட்டல், பராமரிப்புப் பொருளாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவை அடங்குகின்றன.சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் உறுதிப்பாடுகளுடன் இணைந்து, பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பேணுதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதும் சமமானதுமான பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதிநிதிகள் குழுவினருக்கு விளக்கமளித்தார்.அத்துடன், நல்லாட்சியை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக பொது நிறுவனங்களை வலுப்படுத்துதல், நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், ஊழலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அரசாங்க வருவாய் திரட்டலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பணியாளர்களை உருவாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கும் கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன் அடிப்படையிலான கல்வியை விரிவுபடுத்துதல் ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் டிஜிட்டல் மாற்றத்தையும் முன்னேற்றுவது தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பொதுச் சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இந்தச் சந்திப்பில் ஆசிய மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தூதுவர் கெத்லீன் ஸ்டீபன்ஸ், சபையின் தலைவர்  தூதுவர் ரொபர்ட் ஓ. பிளேக் ஜூனியர் உள்ளிட்ட ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகளும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-10-09

2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE Tax) மூலம் 569,193 மில்லியன் ரூபா வருமானம்

2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE Tax) மூலம் அரசாங்கம் 569,193 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்தார். 2022ஆம் ஆண்டில் 25,546 மில்லியன் ரூபாவும், 2023ஆம் ஆண்டில் 144,955 மில்லியன் ரூபாவும், 2024ஆம் ஆண்டில் 197,572 மில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டில் 201,120 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தினால் வரியாக ஈட்டப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களால் வாய்மூல விடைக்கான வினாக்களாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ், மாதாந்தம் 150,000 ரூபாவைத் தாண்டிய வருமானத்தைப் பெறும் அனைத்து ஊழியர்களினதும் வருமான மூலம் தனியாள் முற்பண வருமான வரிக்கு (APIT – Advance Personal Income Tax) உட்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், வேறு எந்தவொரு மூலத்திலிருந்தும் வருமானம் பெறும் நபர்களின் வரி விதிக்கத்தக்க வருமானம் சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டும் பட்சத்தில், அவர்களும் தனிநபர் வருமான வரிக்கு உட்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.அரசாங்கத்தின் நிதித் தேவைகள் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, PAYE வரியின் வருடாந்த வரி விலக்கு வரம்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.இதன்படி, 2019ஆம் ஆண்டு வரை 1,200,000 ரூபாவாக இருந்த வரி விலக்கு வரம்பு, 2020ஆம் ஆண்டில் 3,000,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2022/2023ஆம் ஆண்டில் அந்த வரம்பு மீண்டும் 1,200,000 ரூபா வரை குறைக்கப்பட்டது. அதேவேளை, 2025ஆம் ஆண்டில் வரி விலக்கு வரம்பு 1,800,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.எதிர்காலத்தில் PAYE வரியின் வரி விலக்கு வரம்பு மற்றும் வரி வீதங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின், அரசாங்க வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி ஒருங்கிணைப்பு (Fiscal Consolidation) செயற்பாட்டின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு அது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


2026-10-09

சிறுநீரக நோயாளர்கள் 53,604 பேருக்கு மாதாந்தம் தலா 10,000 ரூபா கொடுப்பனவு

சிறுநீரக நோயாளர்கள் 53,604 பேருக்கு மாதாந்தம் தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக, இவ்வருடம் ஆகஸ்ட் மாதமளவில் அடையாளம் காணப்பட்டிருந்ததாக கௌரவ  கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட வாய்மூல விடைக்கான  வினாக்களுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்போர் பட்டியல் எதுவும் இல்லை எனவும், விண்ணப்பிக்கும் சிறுநீரக நோயாளர்களின் தகைமைகளின் அடிப்படையில் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


2026-10-09

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்கள் இரண்டிலும் 658,081 பேர் இணைவு

சமூகப் பாதுகாப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்களிலும் 658,081 பேர் இணைந்துள்ளதாகவும், 2026 ஜூலை மாதம் வரையில் ஓய்வூதியம் பெறும் 37,474 பேருக்கு ஓய்வூதியமாக 39,000,500 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் கௌரவ  கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். இதற்கமைய ஆரஸ்ஸாவ முன்திட்டமிடல்  திட்டத்தில் 551,549 பேரும், சுரெகும ஓய்வூதியத் திட்டத்தில் 106,532 பேரும் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார அவர்களால் முன்வைக்கப்பட்ட வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இத்தகவல்களை வழங்கினார். ஆரஸ்ஸாவ திட்டமானது 17 வயது வரையிலான சிறுவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்திட்டமிடல் ஓய்வூதியத் திட்டமாகும். இதன் கீழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பொறுப்பின் கீழ் சிறுவர்களை இத்திட்டத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள முடியும். இதன்படி, அவர்கள் 18 வயதை அடையும் போது கணக்கு முதிர்ச்சியடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சுரெகும ஓய்வூதியத் திட்டமானது 18 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அரச ஓய்வூதியம் பெறாத, முறைசாராத் துறையில் பணியாற்றும் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், குறிப்பிட்ட இலக்குக் குழுக்களின் தேவைகளுக்கு ஏற்ப கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks