logo

E   |   සි   |  

2022-04-29

செய்தி வகைகள் : செய்திகள் 

தியவண்ணா பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு 40 வருடங்கள் பூர்த்தி

இலங்கை பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே இல் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (29) 40 வருடங்கள் பூர்த்தியடைகிறது.

காலி முகத்திடலில் அமைந்திருந்த பாராளுமன்றக் கட்டடத்தில் போதிய இடவசதி இன்மையால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் பின்னர் கோட்டே பிரதேசத்தில் பாராளுமன்றத்துக்குப் புதிய கட்டடத்தை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய 1979ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பிரதேசத்தில் காணப்பட்ட 16 ஏக்கர் சிறிய தீவில் புதிய பாராளுமன்றக் கட்டடத்துக்கான பணிகள் ஆரம்பமாகின.

அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களின் வழிகாட்டிலின் கீழ் அப்போதைய பிரதமர் ஆர்.பிரேமதாச அவர்களினால் இக்கட்டடத்தைக் அமைக்கும் பணிகள் கண்காணிக்கப்பட்டது. இதற்கமைய ஜெஃப்ரி பாவா அவர்கள் பிரதான கட்டடக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், புதிய கட்டடத்தை அமைப்பதற்கான பணிகளை ஜப்பானிய நிறுவனமொன்று பொறுப்பேற்றிருந்தது.  இலங்கையின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற கட்டடத்தின் அனைத்து கட்டடக்கலை நடவடிக்கைகளிலும் தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் 1982ஆம் ஆண்டு முடிவடைந்ததுடன், 1982 ஏப்ரல் 29ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பகுதியில் அமைக்கப்பட்ட புதிய பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. இதற்கமைய அதுவரை காலி முகத்திடலிலிருந்த பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே புதிய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டது.

புதிய பாராளுமன்றக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டதுடன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே நகரம் இலங்கையின் நிர்வாகத் தலைநகரமாக மாறியது.

நாகை மரங்களை வரிசையாகக் கொண்ட பிரதான சாலையின் ஊடாகத் தற்போதைய பாராளுமன்ற வளாகத்துக்கான நுழைவு அமைந்துள்ளது. பாராளுமன்றம் பொது மக்களுடன் நெருக்கமாக இருப்பதற்கு ஏதுவாக புரதான கட்டடக் கலை வடிவமான ‘அம்பலம’ என்ற கருத்துருவாக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிர்மானங்களை இங்கு காணலாம். பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களை சந்திப்பதற்கான இடமாக இது அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் நீர் நிரம்பிய குளங்களையும் காண முடியும்.

பாராளுமன்றத்தின் பிரதான கதவுகளுக்கு அருகில் கலாநிதி மஞ்சு ஸ்ரீ சித்திரக் கலைஞரினால் வரையப்பட்ட சுவரோவியங்களைப் பார்க்க முடியும். சபா மண்டபத்தின் பிரதான கதவு செப்பு மற்றும் வெள்ளி மென்பூச்சைக் கொண்டிருப்பதுடன், இதில் புராதன கல்வெட்டுப் பாணியில் இலங்கை அரசியலமைப்பின் பாயிரம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.

செவ்வக வடிவான சபாமண்டபம், முழுக்கட்டடத்தினதும் மையப்பகுதியில் இரண்டு மாடிகளின் உயரத்தை உள்ளடக்குகின்றது. மன்னர்கள், விகாரைகள் மற்றும் கோறளைகளினது 18  கொடிகள் காட்சியளிக்கின்றன. மேலும் சபாமண்டபத்தின் மத்தியில் தொங்கவிடப்பட்டுள்ள வெள்ளி மென்பூச்சைக் கொண்ட பாரிய மின்விளக்கு சபா மண்டபத்துக்கு  அபிமானத்தைச் சேர்க்கிறது.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks