பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-12-03
செய்தி வகைகள் : குழு செய்திகள்
உள்ளூராட்சி மன்றங்களில் வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றப்படாமல் அடுத்த வருடத்துக்கான செலவுகளை மேற்கொள்ள முடியாது என்றும், அம்பலாங்கொடை நகர சபை 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றாமல் பணத்தை செலவிட்டிருப்பதாக நேற்று (02) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இது சட்டத்துக்கு முரணானது என உள்ளூராட்சி ஆணையாளரினால் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத்தைக் கலைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. இதுபோன்ற நிலைமை மேலும் சில உள்ளூராட்சி மன்றங்களிலும் காணப்படுவதாக வருகை தந்திருந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தவறான எடுத்துக்காட்டு என்றும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், உள்ளூராட்சி மன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் ஆளுநர்கள் உள்ளிட்ட பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகளை இக்குழு முன்னிலையில் அழைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்ஹ ஆகியோரின் தலைமையில் நேற்று (02) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் தெரியவந்தன.
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கான காலத்தை நீடிக்க வேண்டிய அவசியம் குறித்து உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். சீமெந்துத் தட்டுப்பாடு, தற்பொழுது காணப்படும் கொவிட் சூழல் போன்ற காரணங்களால் உரிய திட்டங்களை வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் பூர்த்தி செய்ய முடியாது போனமையால், அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை அல்லது இதனைவிட அதிக காலத்தை வழங்குமாறு இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் விரைவில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் உள்ள மைதானங்கள் போன்ற சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பராமரிக்கப்படும் விடயம் குறித்தும் குழு உறுப்பினர்கள் கவனத்தை ஈர்த்தனர். உள்ளூராட்சி நிறுவனங்கள் இவ்வாறான செயற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் தலையீட்டுடன் மாதம் ஒரு தடவையாவது முன்னேற்ற மீளாய்வை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
மாகாண சபைகள் செயலிழந்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் நிதியை நிர்வகிப்பதற்கு உள்ளூராட்சி ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்காததால் இதனை ஒழுங்குபடுத்த விசேட வேலைத்திட்டமொன்றை சம்பந்தப்பட்ட அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போது நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக உள்ளூராட்சி நிறுவனங்களின் வருமானம் வேகமாக குறைந்துள்ளதாக குழுவில் விவாதிக்கப்பட்டது. வரிப் பண வசூலிப்பின்போது வரி வசூலிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பெறப்பட்ட வருவாய் உண்மையான வருவாயைவிட மிகக் குறைவு என்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். மாநகர சபைகளில் நிலவும் பொது சுகாதார பரிசோதகர்கள், மருந்தாளர்கள், குடும்ப சுகாதார பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்தப் பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதால், அவற்றை துரிதமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஷான் விஜேலால்.டி.சில்வா, சுதத் மஞ்சுள மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

