logo

E   |   සි   |  

2021-12-02

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இம்முறை மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தல் நடத்துவது பொருத்தமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற விசேட குழுவில் தெரிவிப்பு

இம்முறை மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது பொருத்தமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் இன்று (02) பரிந்துரைத்தது.

சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற விசேட குழுவில் சாட்சியமளித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகையில், நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அடுத்த வருட முதலாவது காலாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகக் கூடியது 5500 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிப்பது பொருத்தமற்றது என அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் பதவிச்சத்தியம் செய்யும்வரை குறித்த நிறுவனங்களின் அதிகாரம் ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா இக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் கருதுவதாகவும், அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே குழுவின் பொதுவான கருத்து எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் முறை திருத்தப்படும் போது தொகுதி வாரியில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 60% ஆகவும் விகிதாசார முறையின் கீழ் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40% ஆகவும் காணப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது.

தேர்தல் செலவுகளை குறைக்கத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளமை பாராட்டுக்குரியது. அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.

அத்துடன் தேர்தல் காலங்களில் ஊடகங்களின் நடத்தை ஒழுங்குறுத்தப்பட வேண்டும். சமூக ஊடக நடத்தையை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியது.

பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்வதற்கு
நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் தலைவர், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்

உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே கருத்துத் தெரிவிக்கையில், 70:30 விகிதாசார அடிப்படையில் புதிய தேர்தல் முறை தயாரிக்கப்படுமாயின் உள்ளூராட்சி மன்றங்களில் தற்பொழுது காணப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1500 இனால் குறைக்கப்பட வேண்டும் என்றார். உள்ளுராட்சி பிரதேசத்தில் வெற்றி பெறும் அரசியல் கட்சிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறும் என பாராளுமன்ற விசேட குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் சேயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். இது தவிரவும் பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாகர காரியவசம், மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைவிடவும், சட்டமா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அதிகாரிகளும் இதில் இணைந்துகொண்டிருந்தனர்.

 

 1

2 3

4

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks