பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-12-01
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்து இடம்பெறுகின்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் பாராளுமன்றம் இன்று (01) நடைபெற்றது.
இந்தக் கூட்டம் வர்த்தக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றதுடன், இதில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவும் கலந்துகொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (31) எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகள் தொடர்பிலும், இதனுடன் தொடர்புபட்ட ஏனைய தரப்பினர்களையும் இணைத்துக் கொண்டு கலந்துரையாடும் நோக்கிலும் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இந்த விசேட கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் வர்த்தக அமைச்சு, கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு, இலங்கை பொலிஸ், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம், லிட்ரோ எரிவாயு நிறுவனம், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம், இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனம், இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டுக்கான தராதர அங்கீகார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இது தவிரவும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டி.டபிள்யூ.ஜயதிலக மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்.ஷாந்த வல்பொலகே, பெற்றோலியத்துறை நிபுணர் நிமல்.டி.சில்வா ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்ததுடன், எழுத்துமூலம் அவற்றுக்குப் பதில் வழங்குமாறும் கோரிக்கைவிடுத்தார்.
எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் வெடிப்புச் சம்பவங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்களும் பெறப்பட்டன.
எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வெடிப்புக்கள் ஏற்படுகின்றனவா என்பது தொடர்பிலும், உயர் தரத்திலான கருவிகளைப் பயன்படுத்துவதன் அவசியம், எரிவாயு கசிவின் போது ஏற்படக்கூடிய நாற்றம் குறித்து பரிசீலனை செய்து அறிக்கைகளைப் பெற்று அவற்றை சந்தைக்கு விநியோகித்தல், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொண்டு அதில் உள்ள பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவது, இலங்கைக்கு இறக்குமதிசெய்யப்படும் எரிவாயு நாட்டுக்குள் கொண்டுவரப்பட முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்தல் போன்ற விடயங்கள் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான வாசுதேவ நாணயகார, உதய கம்மன்பில, நிமல் சிறிபால.டி சில்வா, மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-10
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவியும் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 06) பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது சிறுவர் உரிமைகளை மேம்படுத்துதல், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத் திறன்களை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நவம்பர் 20ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள “விசேட சிறுவர் பாராளுமன்றப் பங்கேற்பு நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் 1,200க்கும் அதிகமான சிறுவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று தயாரிக்கப்பட்ட சிறுவர் அறிக்கையை (Children’s Statement), 50 சிறுவர்களின் பங்கேற்புடன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சிறுவர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமொன்றை மீண்டும் ஸ்தாபிப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.மேலும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளைத் துரிதப்படுத்துதல், அதற்குத் தடையாக உள்ள சட்டரீதியான இடையூறுகளை நீக்குதல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்றிட்டத்தின் கீழ், “This is my right” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணியொன்றை ஏற்பாடு செய்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.இப்பேரணியில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கச் செய்ய எதிர்பார்ப்பதாக வருகை தந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர். அத்துடன், வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் சேவை வழிகாட்டியொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்றை நடத்துதல் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.இதேவுளை, மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பில் இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின்போது, பாராளுமன்ற ஆய்வு உதவி மற்றும் அறிவுப் பரிமாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமூலங்களைத் தயாரித்தல், ஒப்பீட்டுச் சட்ட ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் சட்டமூலங்கள் பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்தல் போன்ற துறைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொழில்நுட்ப மற்றும் ஆய்வு உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், சிறுவர் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்கலந்துரையாடல்களில் பாராளுமன்றத்தின் கௌரவ பிரதிக் குழுத் தலைவி ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கௌரவ பிரதித் இணைத் தலைவிகளான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திராணி கிரியெல்ல மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-10
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு முறையான நிறுவன மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தை அளவிடக்கூடிய முக்கிய செயலாற்றுகைக் குறிகாட்டிகளை (KPIs) அடையாளம் கண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஷாந்த சமரவீர வலியுறுத்தினார்.அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் மூன்றாவது உபகுழுவின் முன்னிலையில் முதற்கட்டமாக தமது நிறுவனத் திட்டங்களைச் சமர்ப்பித்த 41 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களில் உள்ள முக்கிய செயலாற்றுகைக் குறிகாட்டிகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு செயலமர்வு அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.அரச நிறுவனங்களின் பணிகள், நிதி ஒழுக்கம் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை முறையாகப் பேணுவதற்கு அவற்றின் சட்டபூர்வ அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை அடையாளம் கண்டு செயற்படுவது அவசியம் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், கடந்தகால கணக்காய்வுப் பிரச்சினைகள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நிறுவனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அவற்றின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் எட்டப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்வது முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்தச் செயலமர்வில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள், கணக்காய்வாளர் சமுதிகா ஜயரத்ன உள்ளிட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு அதிகாரிகள், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் ஆலோசகர்களான பி. ரணசிங்க மற்றும் சி. எஸ். மாயாதுன்னே, முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம், அரச தொழில்முயற்சிகள் திணைக்களம் மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள், அத்துடன் அரச தொழில்முயற்சிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் நிதிப் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-11-10
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.இந்த விசேட குழு அதன் தலைவர், கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.இதில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) சார்பில் கே. பிரேமச்சந்திரன், ஈரோஸ் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) சார்பில் ராமசாமி ராஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) சார்பில் சண்முகநாதன் சஞ்சீவன் ஆகியோர் தமது கட்சிகள் சார்பில் கருத்துக்களையும் முன்மொழிவுகளைக் குழுவில் முன்வைத்தனர்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் முறைமை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்தது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான முனீர் முலாபர், சட்டத்தரணி சுனில் வட்டகல, அருண் ஹேமச்சந்திர ஆகியோருடன், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுணாரச்சி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
2026-11-06
இளைஞர் சமூகத்தையும் பாராளுமன்றத்தையும் இணைத்து எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர், கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா அவர்களால் தயாரிக்கப்பட்ட இளைஞர் தொழில்முயற்சியாண்மை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க அவர்களால் தயாரிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் இளைஞர்களை வலுவூட்டுவது தொடர்பான முன்மொழிவு மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமிவேல் அவர்களால் தயாரிக்கப்பட்ட பெருந்தோட்ட மற்றும் பயிர்ச்செய்கைத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கான கொள்கைக் கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவு குறித்தும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.அத்துடன், வெளிப்புற இளைஞர் பங்கேற்புத் திட்டம் மற்றும் முன்னோடி செயலமரம்வு தொடர்பில் ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் லசித் பாஷண கமகே, தனுர திஸாநாயக்க மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் விரிவாகக் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.இளைஞர் சமூகத்திற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய இந்த முன்மொழிவுகள் தொடர்பில் மேலும் ஆய்வு செய்து, அவற்றை இறுதி வடிவத்தில் தயாரிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



