பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-03-17
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் பணிகளை மேலும் வினைத்திறனாக்குவதற்கு அவற்றின் செயற்பாடுகளை கலந்துரையாடல் ரீதியாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கமைய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் ஊடாக சட்டம் மற்றும் கொள்கை தொடர்பான நடவடிக்கைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்களை விழிப்புணர்வூட்டவும், அவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கும் முடியுமாகவிருக்கும்.
பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற நிதி அமைச்சுசார் ஆலேசானைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் குழு சார்பில் கருத்துத் தெரிவித்த உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே.ஜயதிலக குறிப்பிடுகையில், அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் மக்களின் பிரச்சினைகள் நிறைவேற்று அதிகாரத்தினால் தீர்க்கப்படுவதற்கும் அப்பால் சென்று மிகவும் வினைத்திறனாக மற்றும் பயனுள்ள முறையில் இதனை முன்னெடுக்க முடியும் என்றார்.
நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கம் ஆகியன நெருக்கமாகச் செயற்படும் கலப்பு அரசியலமைப்பு எமது நாட்டுக்குள் காணப்படும் பின்னணியில் இந்த குழு முறையின் ஊடாக சட்டவாக்கத்தின் உறுப்பினர்கள் நிறைவேற்று அதிகாரத்துடன் சிறந்த உறவுகளை ஏற்படுத்த முடிவதுடன், பாராளுமன்றத்தை சர்வதேச மட்டத்தில் உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குழுவில் கலந்துரையாடப்படும் சில விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பரந்துபட்ட கலந்துரையாடல்களை ஏற்படுத்த முடியுமென்றும் உதவிச் செயலாளர் நாயகம், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு விளக்கமளித்தார்.
உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு அமைய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமரும் இங்கு வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி.சில்வா, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, சுதத் மஞ்சுள, சஹன் பிரதீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், அரசாங்க அதிகாரிகளை பிரதிநிதித்துவுப்படுத்தி நிதி அமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், 2026 மார்ச் 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் என்பன அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதன் பின்னர் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் இக்குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், நிதிக் கொள்கைகளை உருவாக்குதல் உட்பட அதன் பணிகளை நிறைவேற்றும்போது இலங்கை மத்திய வங்கிக்கு வெளித் தரப்பினரிடமிருந்து புள்ளிவிபரங்களையும் தகவல்களையும் திரட்டிக்கொள்வது அவசியமாகிறது. இப்புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களை அறிக்கையிடுதல் தேவைப்பாடுகளுக்கு அமைந்தோராகவுள்ள ஆட்கள், அத்தேவைப்பாடுகளை மீறும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய நிருவாக வழிமுறைகளை விதித்துரைப்பதற்காக, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 மார்ச் 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.இவ்விதிகளின் மூலம், புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களைக் கோருவதற்கான அறிவித்தல்களை வழங்கும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளான பிரதி ஆளுநர்கள், பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பிரதானி மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் பிரதானி ஆகியோருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், வழங்கப்படும் தகவல்கள் அதற்கே உரிய நோக்கத்திற்காக மாத்திரம் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் இவ்விதிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கை மத்திய வங்கியினால் சில பொதுக் கடன் தரவுகள் வெளியிடப்படாமை குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய தகவல்கள் தற்போது பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் வசமுள்ளதாகவும், இதன் காரணமாக இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட மாதிரிக்கு அமைவாக கடன் புள்ளிவிபரங்களை மீண்டும் தயாரிப்பதில் வரம்புகள் காணப்படுவதாகவும் குழுவினால் இங்கு அவதானிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளினூடாக பொதுக் கடன் தகவல்களை அணுகுவதற்கான இயலுமையைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குழு சுட்டிக்காட்டியதுடன், அரச பிணையங்களுக்கான இரண்டாம் நிலைச் சந்தை தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கவனம் செலுத்தியது.மேலும், சுற்றுலாப் பயணிகளினால் பயன்படுத்தப்படும் பல்வேறு கட்டணச் செலுத்துகை முறைகள் காரணமாக, சுற்றுலா வருமானத்தை துல்லியமாகக் கணிப்பிடுவது சவாலாக அமைந்துள்ளதெனவும், இத்தகைய மதிப்பீடுகளின் துல்லியத்தன்மையை உயர்த்துவதற்காக தரவு சேகரிப்பு ஆய்வுகளை மேம்படுத்துவது அவசியமெனவும் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் தொடர்பாகவும் இக்குழுவில் ஆராயப்பட்டதன் பின்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. “2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற விதிகள்” என அழைக்கப்படும் இவ்விதிகள் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற விதி மேலும் திருத்தப்படுகின்றது.அதற்கமைய, ஏதேனும் ஒரு மாதத்தினுள் ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற ஒவ்வொரு பொருள் ஏற்றுமதியாளரும், அவ்வருமானத்தை அனுமதிக்கப்பட்ட செலுத்தல்களுக்காக மாத்திரம் பயன்படுத்தி, எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும். இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம் வழங்கப்பட்டிருந்த 3 மாதக் கால அவகாசம், இவ்வாறு அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதி வரை குறைக்கப்பட்டுள்ளது.அந்நியச் செலாவணி வீதத்திலும் அந்நியச் செலாவணிச் சந்தையிலும் நிலவும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அந்நியச் செலாவணி திரவத்தன்மையின் பற்றாக்குறை என்பவற்றைக் கருத்திற்கொண்டு, ஏற்றுமதி வருவாயை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்காக ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தைக் குறைப்பது அவசியமென இலங்கை மத்திய வங்கி இங்கு சுட்டிக்காட்டியது.இந்நடவடிக்கையானது சந்தை நம்பிக்கையைக் குறைவடையச் செய்தல், அந்நியச் செலாவணிச் சந்தையில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துதல் போன்ற நிலைமைகளை உருவாக்கக்கூடுமென குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அந்நியச் செலாவணி வீதத்தின் ஸ்திரமற்ற தன்மை மற்றும் தற்போதைய அந்நியச் செலாவணி விநியோகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கானதொரு குறுகிய காலக் கொள்கைக் கருவியாகவே இந்நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தை நிலவரங்கள் ஸ்திரமடைந்தவுடன் இது தளர்த்தப்படும் எனவும் மத்திய வங்கி அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.மேலும், NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பிலான இலங்கை மத்திய வங்கியின் பணிப்பொறுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது குறித்து மேற்கொள்ளப்படும் தடயவியல் கணக்காய்வின் பின்னர் அது தொடர்பில் மீண்டும் பரிசீலிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன, கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரஊப் ஹகீம், ரவி கருணாநாயக்க, எம்.கே.எம். அஸ்லம், நிமல் பலிஹேன, விஜேசிரி பஸ்நாயக்க, சுனில் றாஜபக்ஷ, திலிண சமரகோன், சம்பிக ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோருடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.அத்துடன், “பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட மற்றும் பொருளாதார மதிப்பாய்வுகளை வலுப்படுத்தல்” என்ற தலைப்பின் கீழ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை மற்றும் காங்கிரஸ் வரவுசெலவுத்திட்ட அலுவலகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவிக் குழுவினரும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

