E   |   සි   |  

2021-03-10

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

2 இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களை வலுவூட்டுவதற்கு 10,000 மில்லியன் ரூபா நிதி – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ

சமுர்த்தி பயனாளிகளை வருமானம் ஈட்டுபவர்களாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 2 இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களுக்காக 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்புப் பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ நேற்று (09) தெரிவித்தார்.

பிரதமரும், நிதி அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு அமைய இந்த நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற  நிதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைய சமுர்த்தி அதிகாரிகளுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் குறித்த பிரச்சினையின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமரிடம் வினவப்பட்டபோதே இராஜாங்க அமைச்சர் இந்தப் பதிலை வழங்கினார்.

சமூர்த்தி அதிகாரசபையை திணைக்களமாக மாற்றும்போது அதிகாரிகளை ஊழியர் சேமலாப நிதியத்தின் ஒரு பகுதியாக அல்லது முழுமையாக இணைக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இது குறித்து தீர்மானம் எடுக்கும் நோக்கில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல தெரிவித்தார்.

சமுர்த்தி திணைக்களமாக மாற்றும்போது புதிய ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படாது என முன்னர் உறுதியளிக்கப்பட்டபோதும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சம்பளம் குறைக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுட்டிக்காட்டினார். அத்துடன் பணியாளர்களின் பதவி உயர்வுகளில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் அவசியம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பொதுநிர்வாக அமைச்சு மற்றும் நிர்வாக சேவைகள் திணைக்களத்தின் தலையீட்டுடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

அத்துடன், சமுர்த்தி அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கப்படும் விடயம் குறித்தும் இங்கு கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விவகாரம் மேலும் ஒழுங்கு முறையான விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கக் கூடாது என்ற விடயமும் கலந்துரையாடலுக்கு உள்ளானது. எக்காரணத்துக்காகவும் தற்பொழுது காணப்படும் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காது, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் வெளிப்படையான முறையில் சமுர்தி உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி.சில்வா, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, சுதத் மஞ்சுள, சஹன் பிரதீப் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், அரசாங்க அதிகாரிகளை பிரதிநிதித்துவுப்படுத்தி நிதி அமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2026-09-07

இயலாமையடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அடுத்த ஆண்டுக்கான செயற்றிட்டம் மற்றும் கொள்கை முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 13ஆவது கூட்டம், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.2026 ஜூலை முதல் 2027 ஜூன் வரையிலான காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் வரைவு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இச்செயற்றிட்டம் நான்கு பிரதான துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,  பாராளுமன்ற ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை, வரவு-செலவுத் திட்டத்திற்காக குரல் கொடுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல், சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள், அத்துடன் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய அரச சேவைகள் ஆகிய துறைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.IFES நிறுவனத்தின் இலங்கைப் பிரதிப் பணிப்பாளர் இந்திரக உபேசேகர, சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அனோஜிதா சிவாஸ்கரன் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய சபையின் உறுப்பினர் டிக்கிரி குமார ஜயவர்தன ஆகியோர் இதுவரை ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் முன்னிலையில் விளக்கமளித்தனர்.இயலாமையுடைய நபர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளைப் பிராந்திய மட்டத்திலான திட்டமிடலில் உள்ளடக்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட மாவட்ட ரீதியான ஆலோசனை நிகழ்ச்சிகளின் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறான நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், மாவட்ட மட்டத்தில் செயற்படும் அணுகல் தொடர்பான கணக்காய்வுக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஊடாக பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் போது, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தினரின் செயற்பூர்வமான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கட்டிடங்கள் மற்றும் நகரத் திட்டமிடலின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே அணுகல் வசதிகளை உள்ளடக்குவதன் மூலம், பின்னர் மேற்கொள்ள வேண்டிய அதிக செலவிலான மாற்றங்களை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு-செலவுத் திட்டத்திற்காக, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 அமைப்புகளின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட 234 கொள்கை மற்றும் நடைமுறை முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்று ஏற்கனவே ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அந்த முன்மொழிவுகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும், அதன் மூலம் ஆதரவுத் தேவையுடையோருக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கின்றனவா என்பதையும் நெருக்கமாகக் கண்காணிக்க ஒன்றியம் தீர்மானித்தது.இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தற்போதுள்ள சட்ட மற்றும் கொள்கை ரீதியான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் “இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமூலம்” மற்றும் “சைகை மொழி சட்டமூலம்” ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போது காணப்படும் சட்ட ஏற்பாடுகள் மற்றும் தரநிலைகளை சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தனியார் துறை நிறுவனங்களுக்காக அணுகல் தொடர்பான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தி, அவற்றை படிப்படியாக சட்டக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதுடன், தெரிவுசெய்யப்பட்ட சில தனியார் நிறுவனங்களுடன் முன்மாதிரித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.அரச சேவைகளை மேலும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய சேவைகளாக மாற்றுவது தொடர்பிலும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. தொழில் அமைச்சின் “மெஹெவர பியச” கட்டடம் மற்றும் செத்சிறிபாய I மற்றும் II கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகல் தொடர்பான கணக்காய்வு முடிவுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. செத்சிறிபாய III கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், இயலாமையுடைய நபர்கள் அணுகக்கூடிய வகையில் அதனை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.மேலும், தாழ்தளப் பேருந்து சேவைகள், ஆதரவுத் தேவையுடையோர் அணுகக்கூடிய வகையிலான சுற்றுலாத்துறை மற்றும் “மிதுரு நகர” வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் அரச சேவைகளில் அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்கான முன்மாதிரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சுகாதார சேவைகளைப் பெறும்போது ஆதரவுத் தேவையுடையோர் எதிர்கொள்ளும் அணுகல் தடைகளை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.கூட்டத்தின் நிறைவில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகத்தினர் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமான, சுயாதீனமான மற்றும் கண்ணியமான சமூக வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை உருவாக்குவது ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவர்களின் குரலுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் இந்தப் பொறுப்பை தொடர்ந்தும் நிறைவேற்றும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், IFES நிறுவனம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, வைத்தியர் இளைதம்பி ஸ்ரீநாத், சட்டத்தரணி பாக்கியஸ்ரீ ஹேரத் மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-04

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், கணக்காய்வு செயன்முறையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல், திறமையான மனித வளத்தைத் தக்கவைத்தல் மற்றும் அரச நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த  சில்வா அவர்கள் கலந்துகொள்ள முடியாதமை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அச்சந்தர்ப்பத்தில் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், இணையவழி முறையின் ஊடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க  கலந்துகொண்டார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்கதாகவும் தரமானதாகவும் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை பரவலாகப் பயன்படுத்துவதன் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.கணக்காய்வு செயன்முறையை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைப்பதன் மூலம் கணக்காய்வு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதுடன், அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் மேலும் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும் என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், கணக்காய்வுச் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் திறமையான அதிகாரிகள் பயிற்சிக்குப் பின்னர் வேறு துறைகளுக்குச் செல்வதன் காரணமாக ஏற்படும் மனித வளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.திறமையான கணக்காய்வு அதிகாரிகளை சேவையில் தக்கவைத்துக்கொள்வதற்காக பொருத்தமான கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், அரச நிறுவனங்களின் உள்நாட்டுக் கட்டுப்பாட்டு முறைமைகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றைத் திருத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் பொறுப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வின்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் கணக்காய்வு செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.கணக்காய்வு செயன்முறையை நவீனமயமாக்கும்போது தெளிவான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமொன்றைத் தயாரித்து, பணியாளர் தேவைகள் மற்றும் வளங்களை மிகவும் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.இதனிடையே, பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அதன் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல், அத்துடன் சட்ட மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கான ஆணைக்குழுவின் பொறுப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஆணைக்குழுவை முழுமையான செயற்பாட்டு மட்டத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள், பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்திற்கு அமைவாக குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பதால், அந்த உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முழுநேர உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குழுவினால் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.


2026-09-04

2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான ரூ. 7.5 பில்லியன் கொண்ட குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

2026 ஆண்டு சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 7.5 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல் கொள்வனவை துரிதப்படுத்துவது இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.இதன்போது, நெல் கொள்வனவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை இணைத்துக்கொள்ளுதல், நெல் விலை மற்றும் சந்தை முகாமைத்துவம், போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நெல் விவசாயிகளைப் பாதுகாப்பதுடன், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்காக நீண்டகால தேசியக் கொள்கையொன்றின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இதனிடையே, இலங்கை சுங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. ASYCUDA முறைமையை மேலும் நவீனமயப்படுத்தி, தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கான காகிதமற்ற சுங்கச் செயன்முறையை 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரம் (Trade National Single Window) ஊடாக சுங்கத் திணைக்களத்திற்கும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.ASYCUDA முறைமையில் தேவையான வசதிகள் காணப்பட்டாலும், ஏனைய அரச நிறுவனங்களில் இதற்கு ஒத்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறைமைகள் இல்லாத காரணத்தினால், அனைத்து நிறுவனங்களையும் தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.அத்துடன், பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் முன்பணக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெறும் நிதி முறைகேடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இத்தகைய முறைகேடுகளைத் தடுப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கண்காணிப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


2026-09-03

இலங்கை சுங்கத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை மீளாய்வு செய்த பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு

பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்தது. குறித்த குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், 2026 ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,060,559 மில்லியன் ரூபாய் எனவும், அந்தக் காலப்பகுதிக்குள் 1,379,084 மில்லியன் ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது சதவீத அடிப்படையில் 130% முன்னேற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டது.இதற்கமைய, இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் எதிர்பார்க்கப்பட்ட வருவாயைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிகளவான முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தரவுகளுடன் தெரிவித்தனர்.2026 ஜூன் 30ஆம் திகதி வரையில் 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது. அத்துடன், அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை 1,000cc இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளதுடன், அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96% ஆகும்.மேலும், இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை மற்றும் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விதம், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருவாய் நிர்வாகத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks