பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2020-11-26
உலக சந்தையில் எரிபொருள் விலையில் தளம்பல் காணப்பட்டாலும் எரிபொருள் நிலையை நிலையாகப் பேணுவது என்ற கொள்கையை புதிய அரசாங்கம் பின்பற்றி வருவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (25) பாராளுமன்றத்தில் கூடியபோது, சகல அரசாங்கங்களின் காலப்பகுதியிலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டமீட்டும் நிறுவனமாகக் காணப்படும் நிலையில் வலுசக்திக்திக்கு மாற்று வளமொன்றுக்கான அணுகுமுறை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாபண்டார முன்வைத்த விடயத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் குறிப்பிடுகையில், எரிபொருள் விலையில் தொடர்ந்தும் தளம்பல் நிலையில் காணப்பட்டால் பொதுப் போக்குவரத்தில் அதிகமாகத் தங்கியுள்ள பெருமளவானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் எரிபொருள் விலையை நிலையாகப் பேணுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும், சமகால சந்தை போக்குகளை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதன் ஊடாக நிதியமொன்றை நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இதற்கு முன்னர் மசகு எண்ணெய் புகைவண்டியைப் பயன்படுத்தியே விநியோகிக்கப்பட்டமையால் பேராதனை போன்ற பகுதிகளில் புகையிரத நிலையங்களுக்கு அருகிலேயே களஞ்சியப்படுத்தல் வசதிகள் அமைக்கப்பட்டன. எனினும், தற்பொழுது பவுசர்களைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் வாகன நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதுடன், வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட சுட்டிக்காட்டினார்.
இந்தக் கருத்துடன் இணங்கிய வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, வாகன நெரிசடி மற்றும் வளப் பயன்பாட்டுக்கு அப்பால் செலவு அதிகமானதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பில் பங்களிப்புச் செலுத்தும் முறையாகவும் இது காணப்படுகிறது என்றார். தற்பொழுது 65 வீதமான எரிபொருள்கள் பவுசர் மூலமும், 35 வீதமான எரிபொருள்கள் புகையிரதத்தின் மூலமாகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன. பவுசர் மற்றும் புகையிரதம் மூலம் எரிபொருளை விநியோகிப்பதில் சமநிலையைப் பேணி புகையிரதத்தைப் பயன்படுத்தி விநியோகிக்கும் எரிபொருளின் அளவை 60 வீதமாக உயர்த்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பெற்றோலிய பொதுக் களஞ்சிய முனையத்தில் காணப்படும் குழப்பங்கள் காரணமாக அங்கு பணியாற்றும் பணியாளர்கள் குழுவொன்று நியாயமற்ற முறையில் இன்னமும் தொழிலில் நிரந்தரமாக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இது தொடர்பில் கவனம் செலுத்தி பணியாளர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறும் அவர் அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தார். இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தி விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக அமைச்சர் கம்மன்பில உறுதியளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான குணதிலக ராஜபக்ஷ, வசந்த யாப்பாபண்டார, உதயன கிரிந்திகொட, சந்திம வீரக்கொடி, கே.திலீபன், சாந்த பண்டார, சார்ள்ஸ் நிர்மலநாதன், நிரோஷன் பெரேரா, ஜானக வக்கும்புர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
2026-11-06
இளைஞர் சமூகத்தையும் பாராளுமன்றத்தையும் இணைத்து எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர், கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா அவர்களால் தயாரிக்கப்பட்ட இளைஞர் தொழில்முயற்சியாண்மை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க அவர்களால் தயாரிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் இளைஞர்களை வலுவூட்டுவது தொடர்பான முன்மொழிவு மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமிவேல் அவர்களால் தயாரிக்கப்பட்ட பெருந்தோட்ட மற்றும் பயிர்ச்செய்கைத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கான கொள்கைக் கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவு குறித்தும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.அத்துடன், வெளிப்புற இளைஞர் பங்கேற்புத் திட்டம் மற்றும் முன்னோடி செயலமரம்வு தொடர்பில் ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் லசித் பாஷண கமகே, தனுர திஸாநாயக்க மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் விரிவாகக் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.இளைஞர் சமூகத்திற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய இந்த முன்மொழிவுகள் தொடர்பில் மேலும் ஆய்வு செய்து, அவற்றை இறுதி வடிவத்தில் தயாரிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-11-05
பாராளுமன்றத்தில் இன்றையதினம் (நவ. 05) இரண்டாவது மதிப்பீடுக்கு உள்ளாக்கப்படும் நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் நேற்று (04) கூடியபோதே இச்சட்டமூலம் குறித்து கலந்துரையாடப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.(87வது அத்தியாயமான) நம்பிக்கைப் பொறுப்புக்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான இச்சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார அவர்கள் 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி முதலாவது மதிப்பீடுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.குறித்த சட்டமூலத்தினால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு எடுத்துக் கூறினர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, ஜனாதிபதி பைஸர் முஸ்தபா, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் தர்மப்பிரிய விஜேசிங்ஹ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-11-04
இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் அது தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து நவம்பர் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் உள்ள பல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை நிகழ்நிகழ்ச்சிகளில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியயத்தின் தலைவர், கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இலங்கையில் நாளொன்றுக்கு 17 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதுடன், ஆண்டுதோறும் சுமார் 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகின்றனர். மேலும், வருடாந்தம் 1,000 இற்கும் அதிகமானோர் இந்நோயினால் உயிரிழப்பதுடன், இது நாளொன்றுக்கு சுமார் மூன்று உயிரிழப்புகளுக்குச் சமமாகும். மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதம் இங்கு முக்கிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.ஒவ்வொரு பெண்ணும் தமது மார்பகங்களின் இயல்பான தன்மையைப் பற்றி அறிந்திருப்பதுடன், வழக்கமாக சுய பரிசோதனைகளையும் மேற்கொள்வது அவசியமாகும். ஏதேனும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிந்தால், தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியமாகும். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் வெற்றிகரமான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அரசாங்க சுகாதார நிறுவனங்களின் ஊடாக இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சுகாதார சேவைகளும் வழங்கப்படுகின்றன.அத்துடன், ஒவ்வொரு பெண்ணும் சுவனாரீ (Well Woman) சிகிச்சை நிலையங்களில் கலந்துகொண்டு, கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் பரிந்துரைக்கப்பட்ட பாப் பரிசோதனையை, தனது 35 மற்றும் 45 வயதுகளில் மேற்கொள்வதும் அவசியமாகும்.
2026-11-03
திருத்தியமைக்கப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் (NIE) உள்ளிட்ட கல்வித்துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் கலந்துகொண்டனர்.அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, 2026 ஏப்ரல் மாதமளவில் கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் பாடத்துறை நிபுணர்களைக் கொண்ட தேசியக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பிரதான உபகுழுக்கள் ஊடாக இதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படுவதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, 2026 ஆம் ஆண்டில் தரம் 1 இற்கும், 2027 ஆம் ஆண்டில் தரம் 6 மற்றும் தரம் 2 இற்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்குத் தேவையான ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், கற்றல் தொகுதிகள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களை அச்சிடுதல், பாடசாலைகளில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இதன்போது, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன மற்றும் கல்வித்துறை அதிகாரிகளினால் புதிய கல்வி மறுசீரமைப்புக்களின் அடிப்படை, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, மதிப்பீட்டு முறைமைகள் மற்றும் எதிர்காலச் செயற்திட்டம் தொடர்பில் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.2019 ஆம் ஆண்டில் இந்தச் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டதாகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவினால் 2023 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட புதிய கொள்கைக்கு அமைய தேசிய கல்வி நிறுவகத்தினால் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டதாகவும், இது பல நிறுவனங்களின் கூட்டான முயற்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் மிகவும் முன்னேறிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணையான சீர்திருத்தங்கள் இதன் மூலம் எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.பொதுக் கல்வியின் அடிப்படை நோக்கம் சந்தைக்குத் தேவையான எதிர்காலத் தொழிலாளர்களை உருவாக்குவது மாத்திரமல்ல என்றும், ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் விழுமியங்கள் நிறைந்த முழுமையான ஆளுமையைக் கொண்ட பிரஜைகளையும், நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்காலச் சந்ததியினரையும் உருவாக்குவதே அதன் நோக்கம் என்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.தற்போது நடைமுறையிலுள்ள பாட உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட (Content-based) கல்வி முறைக்குப் பதிலாக, கற்றல் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட (Outcome-based) மற்றும் மாணவர் மையக் கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மனப்பாடம் செய்து பரீட்சைகளுக்குத் தோற்றும் அழுத்தத்தையும், பரீட்சையை மையமாகக் கொண்ட கல்விச் சுமையையும் குறைக்கும் வகையில், கற்றல் அலகுகளுக்கான புள்ளி (Credit) அடிப்படையிலான முறைமையும், ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான மதிப்பீடுகள் (Continuous Assessments) மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான புதிய மதிப்பீட்டுக் கட்டமைப்பும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தரம் 6 முதல் தொழில் துறைகள் தொடர்பான புரிதலை மாணவர்களுக்கு வழங்குவதற்கும், தரம் 12 மற்றும் 13 இல் NVQ Level 4 வரையிலான தொழில் தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அல்லது உயர்கல்விக்குச் செல்வதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் நெகிழ்வான மாற்றுக் கல்விப் பாதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நோக்கில் 'RIES' இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பல கட்டங்களாக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.கல்வியின் அடிப்படை நோக்கம் பிள்ளைகளை எதிர்காலத் தொழிலாளர்களாக உருவாக்குவது மாத்திரமல்ல என்றும், அவர்களை முழுமையான மனிதர்களாகவும் பொறுப்புமிக்க நாட்டைக் கட்டியெழுப்புபவர்களாகவும் உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்றும் இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதமர் வலியுறுத்தினார்.சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்போது எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தனிப்பட்ட மனப்பாங்குகள் அல்லது கருத்துக்களின் அடிப்படையில் மாத்திரம் தீர்மானங்களை எடுக்காமல், விஞ்ஞானபூர்வமான ஆய்வு ஆதாரங்களை (Evidence) ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கலந்துரையாடலில் பங்கேற்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.இந்தத் தேசியப் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.கௌரவ கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்விப் பிரதி அமைச்சர் கௌரவ நளின் ஹேவகே, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா உள்ளிட்ட பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks