01

E   |   සි   |  

2020-06-25

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்

அரசியலமைப்புப் பேரவையின் 80வது கூட்டம் நேற்று (24) மாலை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களான பிமல் ரத்னாயக்க, தலதா அத்துகோரல ஆகியோரும், சிவில் சமூக உறுப்பினர்களான யாவிட் யூசுப், பேராசிரியர். நாகநாதன் செல்வகுமார், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

இதில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர்களாக இருந்த நிஹால் பொன்சேகா மற்றும் துஷ்னி வீரக்கோன் ஆகியோரின் பதவி விலகலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த கலாநிதி ராணி ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்புப் பேரவையினால் கலந்துரையாடப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.

 

அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராகவிருந்த கலாநிதி. ஜயந்த தனபால அவர்களின் பதவி விலகல் தொடர்பில் தலைவரினால் அரசியலமைப்பு பேரவைக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன், கலாநிதி. ஜயந்த தனபால அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கிய விசேட சேவையும் இங்கு பாராட்டப்பட்டது. இந்த வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் அரசியலமைப்புப் பேரவையின் ஏற்பாடுகளுக்கு அமைய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் அதன் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.

 

இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரிகேடியர் பி.பி.ஜே.பெர்னான்டோ (ஓய்வுபெற்ற) அவர்களின் பெயர் குறித்தும் அரசியலமைப்புப் பேரவை கலந்துரையாடியது.

 

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் அரசியலமைப்புப் பேரவை கவனம் செலுத்தியது.

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் அவர்களால் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் அரசியலமைப்புப் பேரவைக்குக் கிடைக்கப்பெற்றிருந்த கடிதம் மற்றும் அது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட அவதானிப்பு அரசியலமைப்புப் பேரவையின் தலைவரினால், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

 

அத்துடன், அஹிம்சா விக்ரமதுங்கவினால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தின் பிரதி அரசியலமைப்புப் பேரவையின் தலைவரினால் அதன் உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன், இது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அவதானிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லையென்றும், இதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-10-15

பேராதனை ரணபிம ரோயல் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, பிரதி குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைமையில் நடைபெற்றது

பேராதனை ரணபிம ரோயல் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.பேராதனை ரணபிம கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களை வழங்கும் நோக்கில்  ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன கல்லூரியுடன் இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு உரையாற்றிய பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர அவர்கள், மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கான சிறந்த தளமாக அமைகின்றன எனத் தெரிவித்தார். தலைமைத்துவம் என்பது ஓர் அலங்காரம் அல்ல என்றும், பிறரின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்காலத்தில் சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குமான முழுமையான பொறுப்பு இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் உரியது எனத் தெரிவித்த அவர், பாரம்பரியமான சிந்தனைச் சட்டகங்களுக்கு அப்பால் சிந்திப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் மனிதவள அபிவிருத்திப் பிரிவின் பிரதானியும் நிர்வாக உதவிப் பணிப்பாளருமான சூலா ஹேரத் அவர்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.பேராதனை ரணபிம கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையினரும் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தமது அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள திட்டங்கள் தொடர்பில் சபைக்கு விளக்கமளித்தனர்.இதன்போது, மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவில், பேராதனை ரணபிம கல்லூரியின் அதிபர் எம். எம். பெரேரா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன், ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-10-15

இலங்கை பாராளுமன்றத்தின் நவராந்திரி விழா எதிர்வரும் 20ஆம் திகதி

இலங்கை பாராளுமன்றத்தின் நவராத்திரி விழா எதிர்வரும் ஒக். 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் கொண்டாடப்படவிருக்கும் இந்த நவராத்திரி விழாவில்  கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ சபாநாயகர் வைத்தியர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்து பக்தர்களால் மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் நிகழ்வாக இந்த நவராத்திரி விழா காணப்படுகின்றது.  இது ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவதுடன், முப்பெரும் சக்திகளை நினைத்து ஒன்பது இரவுகள் வழிபடும் நிகழ்வாகும். இதில் முதல் மூன்று நாட்களும்  துர்க்கா தேவியை வேண்டி வழிபாடுகள் நிகழ்த்தப்படும். அடுத்த மூன்று நாட்கள் அழியாத செல்வத்தையும் புகழையும் தரும் லக்ஷமி தேவியை வேண்டியும், இறுதி மூன்று நாட்கள் கல்விச் செல்வத்தை வேண்டி சரஸ்வதி தேவியை நினைத்தும் வழிபாடுகள் நிகழத்தப்படும். பத்தாவது நாளில் வித்யாரம்பம் இடம்பெறும்.கௌரவ சபாநாயகரின் வழிகாட்டுதல்களுக்கு அமை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பாராளுமன்ற இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளது.


2026-10-13

சிறுநீரக நோயாளர்கள் 53,604 பேருக்கு மாதாந்தம் தலா 10,000 ரூபா கொடுப்பனவு

சிறுநீரக நோயாளர்கள் 53,604 பேருக்கு மாதாந்தம் தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக, இவ்வருடம் ஆகஸ்ட் மாதமளவில் அடையாளம் காணப்பட்டிருந்ததாக கௌரவ  கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட வாய்மூல விடைக்கான  வினாக்களுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்போர் பட்டியல் எதுவும் இல்லை எனவும், விண்ணப்பிக்கும் சிறுநீரக நோயாளர்களின் தகைமைகளின் அடிப்படையில் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


2026-10-13

நாடு முழுவதும் 19,646 தனியார் பேருந்துகள் சேவையில்

நாடு முழுவதும் தற்போது 19,646 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த ஒன்பது வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளினால் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.மேலும், பொதுப் பேருந்து நிலையங்களில் தனியார் பேருந்துகளிடமிருந்து சட்டவிரோதமாகப் பணம் அறவிடுவதற்கு எவருக்கும் சட்டரீதியான அதிகாரமோ அனுமதியோ இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறான பண அறவீடுகளைத் தடுப்பதற்காகப் பேருந்து பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் இலங்கைப் பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks