பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2015-08-27
செய்தி வகைகள் : செய்திகள்

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் 2015, செத்தெம்பர் 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
பாராளுமன்றத்திற்கு வருதல்: பாராளுமன்ற உறுப்பினர்கள் மு.ப. 9.00 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வந்து சேர வேண்டும். துணைவி/ துணைவரோடு வருகின்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும். மற்ற எல்லா உறுப்பினர்களும் உறுப்பினர் நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு வருவதில் வசதிகாண்முகமாக இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வாகனச் சுட்டுத்துண்டினை உங்களது வாகனத்தின் வளித்திரையின் இடதுபக்க மேல் மூலையில் ஒட்டிவைக்குமாறு வேண்டுகிறேன்.
பாராளுமன்றத்திற்கு வரும்போது உறுப்பினர்களின் வாகனங்கள் பொலிசாரால் அவற்றுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நடைமுறை: பாராளுமன்ற உறுப்பினர்கள், உறுப்பினர்களின் கூடங்களில் நுழைவதுடன் கூட்ட நடப்பெண் மணியோசை அடிக்கும் வரை அங்கு தங்கியிருத்தல் வேண்டும்.
மு.ப. 9.25 மணியிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு அடிக்கப்படும் மணியோசையுடன் பாராளுமன்ற நடைமுறைகள் ஆரம்பமாகும் போது உறுப்பினர்கள் சபையில் கூடுவர். மு.ப. 9.30 மணிக்கு மணியோசை நின்றதும் படைக்கலச் சேவிதர் செங்கோல் சகிதம் சபையினுட் பிரவேசிப்பார். படைக்கலச் சேவிதர் சபாபீடத்துக்குச் சென்று அதன்கீழ் செங்கோலை வைக்கும் வரை உறுப்பினர்கள் தத்தம் இருப்பிடங்களினின்றும் எழுந்து நிற்க வேண்டும். படைக்கலச் சேவிதர் தமது ஆசனத்தை அடைந்ததன் பின்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தைக் கூட்டும் அதிமேதகு சனாதிபதியின் பிரகடனங்களை வாசிப்பதோடு சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கு முற்படுவார்.
3ஆம் மற்றும் 4ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளில் சபாநாயகர் தெரிவுக்கான நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சபாநாயகர் பதவிக்கு ஒருவரது பெயரை முன்மொழிய விரும்பும் உறுப்பினரொருவர் தமது உறுப்பினர் இடத்தினின்றும் எழுந்து நிற்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவ்வுறுப்பினரைச் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 4(2) ஆம் நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் அவ்வுறுப்பினர் அவரது பிரேரணையை முன்மொழிவார். ஒன்றிற்கும் அதிகமான உறுப்பினர்கள் முன்மொழிதலுக்காக எழுந்து நிற்கும் பட்சத்தில் எவ்வுறுப்பினரை முதலில் அழைப்பதென்பது பற்றி பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தீர்மானித்து அவ்வுறுப்பினரைச் சுட்டிக்காட்ட அவர் தமது பிரேரணையை முன்மொழிந்து அப்பிரேரணை வழிமொழியப்படும் வரை மற்றைய உறுப்பினர்கள் அவர்களது இருப்பிடங்களில் அமர்ந்திருத்தல் வேண்டும். சபாநாயகர் பதவிக்கு பெயர்களை முன்மொழிதற்கு உத்தேசிக்கும் உறுப்பினர்கள், கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் தமது உத்தேசம் பற்றி பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குத் தெரியப்படுத்துவது வழமையுடையதும் நடைமுறைக்குப் பெரிதும் உதவியளிப்பதுமாகும்.
சபாநாயகர் வாக்கெடுப்பின் மூலம் தெரிந்தெடுக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தின் விருப்புக்கிணங்க அவர் தம்மை முன்மொழிந்தவராலும் வழிமொழிந்தவராலும் சபாநாயகரது ஆசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். சபாநாயகர் தமது ஆசனத்தையடைந்து அதில் அமர்வதற்கு முன்னர் தம்மைத் தெரிவு செய்தமைக்காக மிகவும் சுருக்கமாக நன்றி தெரிவிப்பார். பின்னர் அவர் தமது ஆசனத்தில் அமர்கையில் படைக்கலச் சேவிதர் சபாபீடத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த செங்கோலை எடுத்து அதன்மேல் வைப்பார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர், செயலாளர் நாயகம் மூலம் தமது சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிப் பிரமாணத்தைச் செய்து கொண்டு கையொப்பமிட வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும். இக்கட்டத்தில் கட்சித் தலைவர்கள் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டமைக்காக அவருக்கு நல்லாசி கூறுவார்கள். அதன் பின்னர் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு மீண்டும் நன்றி தெரிவிப்பார்.
உறுப்பினர்கள் சட்டப்படி சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம் செய்ய வேண்டியது அவர்களின் முதல் கடமையென்பதைச் சபாநாயகர் நினைவுறுத்துவார். சபாநாயகரால் உறுப்பினர்களுக்கு சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம் செய்விக்கப்படும். இச்சந்தர்ப்பத்தில் சத்தியப் பிரமாணப் பத்திரங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிப் பிரமாணம் செய்த பின்னர் கையொப்பமிடவென வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தில் கையொப்பமிட்டு, நிரப்பி கையொப்பமிடப்பட்ட சத்தியப் பிரமாணப் பத்திரங்களைச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைப்பர்.
சமூகமளித்த சகல உறுப்பினர்களுக்கும் சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம் செய்வித்த பின்னர் பாராளுமன்றம் பிரதிச் சபாநாயகரையும் குழுக்களின் பிரதித் தவிசாளரையும் தெரிவு செய்வதற்கு முற்படும். பிரதிச் சபாநாயகரதும் குழுக்களின் பிரதித் தவிசாளரதும் தெரிவுமுறை, தெரிவைச் சபாநாயகர் நடாத்துவதைத் தவிர்ந்த மற்றெல்லாவிதத்திலும் சபாநாயகர் தெரிவுமுறையை ஒத்திருக்கும் (6 ஆம் நிலையியற் கட்டளையைப் பார்க்கவும்).
அதிமேதகு சனாதிபதி அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார்.
அதன் பின்னர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.
[ 2015.09.01 ஆம் திகதியிலான அலுவல் ஒழுங்கு ]
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks