01

E   |   සි   |  

2026 மே 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

கௌரவ சபாநாயகரின்  வரவேற்புரை
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் வியட்நாம் சோசலிசக் குடியரசின் சனாதிபதியும் கொமியூனிஸ்ட் கட்சித் தலைவரருமான அதிமேதகு டோ லாம் அவர்களை வரவேற்று உரையாற்றினார். 


வியட்நாம் சோசலிசக் குடியரசின் சனாதிபதியும் கொமியூனிஸ்ட் கட்சித் தலைவரருமான அதிமேதகு டோ லாம் அவர்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுப் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரை

வியட்நாம் சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு டோ லாம் அவர்கள் சபையில் இன்று மு.ப. 11.40 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றினார்.


நன்றி உரைகள்
கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நன்றியுரைகளை நிகழ்த்தினர்.


கௌரவ சபாநாயகர் அமர்வை பி.ப. 1.30 மணி வரை இடைநிறுத்தினார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) ஆம் பகுதியையும்; 
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVI (56) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXI (31)  ஆம் பகுதியையும்; மற்றும்
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIX (49), L (50) மற்றும் LI (51) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVI (36) ஆம் பகுதி
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ (1) உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையின் ஆறாவது அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 3, 4, 6 மற்றும் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-

•    தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்

இலங்கையில் ஏதேனுமொரு தேசிய விளையாட்டு அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு அவர்களின் அடிப்படை கல்வித் தகைமைகள் அல்லது Z-புள்ளிகளின் மீது அடிப்படையாக அமையாமல் விளையாட்டுத்துறைக்குரிய எந்தவொரு பட்டப் பாடநெறியைப் பயில்வதற்குத் தேவையான சட்ட மற்றும் உயர் கல்விக் கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்

இலங்கையின் பாரம்பரிய பல்கலைக்கழக கட்டமைப்புக்கு அப்பால், தொழிற்சந்தை மற்றும் வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பத்தை இலக்காகக் கொண்ட வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் பாடநெறிகள் குறித்து பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்

தாக்குதல், கடத்தல், கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம், கொலை மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை ஆராய்வதற்கும், ஊழியர்கள் பாதுகாப்பாக இலங்கைக்குத் திருப்புவதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யவும் மற்றும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரோிக்கின்றது.

•    பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்

தற்போது எமது சமூகத்திலுள்ள அநேகமானோர் பேராசிரியர், கலாநிதி போன்ற  பதவிகளையும், பெயர்களையும் தவறான முறையில் பயன்படுத்தி வருவதனால், அதனை தடுக்கும் பொருட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்

விசேடமாக ஊவா மாகாணம் உட்பட மலையகப் பிதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பைனஸ் செய்கையால் நீர் மூலங்களுக்கும் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக்  கருத்திற்கொண்டு, அவற்றை அகற்றி, பயன்தரு உள்நாட்டு பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கான முறையியலொன்று தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    இளம் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுத்தல்

கடந்த காலத்தில் பாடசாலை ஒவ்வொன்றிலும் உளவள ஆலோசனைக்கான ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உளவள ஆலோசனைக்கான பிரிவொன்றை நிறுவுதல், மாவட்டச் செயலகம் ஒவ்வொன்றிலும் உளவள ஆலோசனைக்கான அலகு ஒன்றை நிறுவுதல், அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உளவள ஆலோசனைக்கான  டிப்ளோமா கற்கைநெறிகள், பட்டப் படிப்பு கற்கைநெறிகள் மற்றும் பட்டமேற்படிப்பு கற்கைநெறிகளைப் போதித்தல், மன அழுத்தத்திற்குத் தீர்வுகாண ஒவ்வொரு பிரதான வைத்தியசாலையிலும் உளவியல் மருத்துவப் பிரிவுகளை ஆரம்பித்தல் போன்றவற்றால் இளம் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதால் அரசியல் அதிகாரத்தார், அரசாங்க அலுவலர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அத்தகைய செயற்பாடுகளில் தீவிரமாக இடையீடு செய்ய வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.


அதனையடுத்து, 1716 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks